கேரளா – வகுப்பறையிலும் தீண்டாமை!

இந்தியாவிலேயே கல்வியறிவில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் தீண்டாமைக்குத் தீர்வை கற்றுத்தரும் பள்ளி வகுப்பறையிலேயே என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியில் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட எ.யு.பி என்ற பள்ளியில் தலித், பிராமண, முஸ்லிம் மாணவர்களுக்குத் தனித்தனி வகுப்பறைகள் ஏற்படுத்திய பள்ளி நிர்வாகிகளின் நடவடிக்கைக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இக்கொடுமைக்கு துணை நின்றவர்கள் இப்பள்ளியின் தலைமை நிர்வாகி தாமோதரன் நம்பீசன், தலைமை ஆசிரியை பத்மஜா ஆவர். 

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் மனதில் இனவெறியைத் தூண்டும் விதமாக நிர்வாகம் நடந்துள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து B பிரிவிற்கு மாற்றியது தான் பிரச்னையை கிளப்பியிருக்கிறது. இதற்கு எதிராக களமிறங்கிய பெற்றோர்களின் முறையீட்டில், ஐந்தாம் வகுப்பின் A பிரிவில் மேல்வர்க்கத்து மாணவர்கள் மட்டும் தான் உள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். மேலும் உருது பாடப் பிரிவின் காரணத்தைக் கூறி முஸ்லிம் குழந்தைகளுக்கு தனி வகுப்பறை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்..

இதற்கு எதிராகசில பெற்றோர்கள் ஒன்று கூடி நிர்வாகத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு சில தலித் மாணவர்கள் இரு வாரங்களுக்கு முன் A பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தனர். ஆனால், தாழ்ந்த ஜாதியில் பிறந்த பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளைக் கலந்து அமர வைத்து வகுப்பு எடுக்கக் கூடாது என மேல்ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தலித் மாணவர்கள் அனைவரும் மீண்டும் B பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

கடந்த சில வருடங்களாக சாத்தமங்கலம் யு.பி பள்ளியில் ஜாதிப் பிரிவினை தலை தூக்கியிருப்பதாகவும் இதனை கடந்த வருடங்களில் உள்ள பள்ளி பதிவுப் புத்தகத்தை பரிசோதித்தால் புரியும் எனவும் பெற்றோர்கள் கூறினர்.

சாத்தமங்கலம் யு.பி பாடசாலையின் நிர்வாகத்தினர் மாணவர்களிடம் தீண்டாமையைத் திணிப்பதை எதிர்த்து பெற்றோர்கள் நேற்று(01/08/2006) மாவட்ட ஆட்சியாளரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து மேலிட உந்துதலின் பெயரில் குந்தமங்கலம் காவல்துறை அதிகாரிகள் பள்ளியில் சோதனை நடத்தினர். இப்பிரச்னையைக் குறித்து கலந்தாலோசனை செய்ய பெற்றோர்-ஆசிரியர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இச்சம்பவத்தை அறிந்து யு.ஸி.ராமன் எம்.எல்.ஏ, தாமரச்சேரி எ.இ.ஓ போன்றவர்கள் நேற்று இந்த பள்ளியைப் பார்வையிட்டனர். கல்வியறிவு அதிகமாகப் பெற்றிருந்தும், இன்னும் இன வெறியினை மனதில் கொண்டு இந்திய அரசியலமைப்புக்கு எதிராக தீண்டாமையைக் கடைபிடிக்கும் ஹிந்து மேல்வர்க்கத்தினரின் இச்செயல் இம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

– சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு

இதை வாசித்தீர்களா? :   திப்புவின் பேத்தி #Muskan