அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

புதுதில்லி: தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய இராணுவ இரகசியத்தைப் பணம் பெற்றுக் கொண்டு அந்நிய சக்திகளுக்கு விற்றதாக முன்னாள் கடற்படை அதிகாரியாக பதவி வகித்திருந்த கமாண்டர் J C கல்ராவை மத்திய உளவுத்துறை CBI நேற்று கைது செய்தது.

திரு. கல்ரா இந்தியக் கடற்படையில் இருந்து இவ்வாண்டு ஜனவரியில் விருப்ப ஓய்வு பெற்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Ltd) எனும் மத்திய அரசு நிறுவனத்தில் தற்போது வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

நேற்று காலை SCOPE (Standing Conference Of Public Enterprises) Complex எனப்படும் மத்திய அரசு நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் கட்டிடத்தில் அவரது அலுவலறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னரே கல்ராவின் நோயிடாவில் உள்ள வீட்டிலும் அலுவலகத்திலும் மத்திய உளவுத்துறை தணிக்கைச் சோதனை நடத்தியிருந்தது. இவர் பல பாதுகாப்பு ரகசியங்களை அந்நிய சக்திகளுக்கு விற்றதற்கான ஆதாரங்களும் இச்சோதனையில் சிக்கின.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்படை கேப்டன் சலாம்சிங் ராத்தோரை விசாரிக்கும் பொழுது கல்ராவைக் குறித்த விவரங்கள் உளவுத்துறைக்குக் கிடைத்தன. அதன் அடிப்படையில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் இராணுவ இரகசியங்கள் கடத்தி விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் கல்ராவிடமிருந்து கிடைத்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் அபிஷேக் வர்மா என்ற தொழிலதிபரிடம் தொடர்ந்து உளவுத்துறை விசாரணை நடத்திவருகிறது. இவ்வழக்கின் முக்கிய எதிரியான ரவி சங்கரன் எனும் நபர் பிரிட்டனில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது. இவரைக் கைதுசெய்ய இண்டர்போல் உதவியை நாடியுள்ளதாகவும் CBI தெரிவித்துள்ளது.

இதற்குமுன்னர் RAW-வில் இருந்த சில உயரதிகாரிகளின் நாட்டிற்கெதிரான துரோகமும் இங்கே நினைவுகூரத் தக்கது.

 

இதை வாசித்தீர்களா? :   அச்சமும் அவநம்பிக்கையும் அன்றாட வாழ்க்கையாகிப் போனது!