ஸச்சார் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்

பிற சமுதாயத்தினரை விட இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை பின்தங்கி இருப்பது குறித்து ஆய்வு செய்த ஸச்சார் குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்பே பத்திரிகைகளில் வெளியானதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ஸச்சார் குழுவின் அறிக்கையை நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் சுரேஷ் பச்சோரி மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதையடுத்து பேசிய பாஜக உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் ஏற்கெனவே நாளிதழ்களில் வெளியாகிவிட்டது என்றும், இன்று கூட இந்த அறிக்கையின் 14வது பகுதி நாளிதழில் வெளியாகியிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில் நாடாளுமன்ற நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது நாடாளுமன்றத்தில் பெரும் அமளியைக் கிளப்பப் போவதாக பாஜக ஏற்கனவே மிரட்டி இருந்தது. மேலும் இவ்வறிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக சங்பரிவார் ஏற்கனவே தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இதை வாசித்தீர்களா? :   நாடகம் ஆடும் RSS