பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா!

“கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு மோடி, நவம்பர் 8, 2016 இரவில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது, இந்தியா இதுவரை கண்டிராத மிகப் பெரிய நிதி மோசடி” என முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பணமதிப்பு நீக்கம் குறித்த மறை புலனாய்வு வீடியோ (sting video) ஒன்றை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. இந்த வீடியோவில் இந்தியாவின் புலனாய்வு முகமையான ‘ரா-RAW’ அதிகாரி ஒருவர், பணமதிப்பு நீக்கம் பிரதமர் அலுவலகம் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-வால் எப்படித் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை விளக்குகின்றார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல்:

அந்த வீடியோவில் மும்பை ட்ரீடெண்ட் ஹோட்டலில் தன் மனைவியுடன் அமர்ந்திருக்கும் ராகுல் ரத்னேகர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விளக்குகின்றார். அதில், மூன்று லட்சம் கோடி மதிப்பிலான போலி பணத்தை வெளிநாட்டில் அச்சிட்டதாகவும், டெல்லி எல்லையில் உள்ள ஹிண்டன், இந்திய விமானப் படைத் தளத்தில் அந்தப் பணம் வைக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். பிறகு, அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்குச் சென்றதாகவும் கூறுகின்றார்.

இந்த ஆபரேசனில் பிரதமர் அலுவலக நபர் ஒருவரின் பெயரைக் குறிப்பிடுகின்றார். அந்தப் பெயரில் பிரதமர் அலுவலகத்தில் எவரும் இல்லை என்பதால், அவரது பெயர், புனைப்பெயராக சொல்லியிருக்கலாம் என காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், ரா அதிகாரி தன்னுடைய பேச்சில் இரண்டு முறை அமித் ஷாவின் பெயரை உச்சரித்திருக்கின்றார்.

இந்தப் பணத்தாள் பரிமாற்றத்துக்கு, போலீசு உள்ளிட்ட அரசின் எந்த அமைப்புகளும் தலையிடாமல் பார்த்துக் கொண்டதாகவும், 26 நபர்கள் கொண்ட குழுவை, பணத்தாள் பரிமாற்றத்துக்கென பயன்படுத்தியாகவும் வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது.

மற்றொரு வீடியோவில், மும்பை ‘இந்தஸ் இன்த் வங்கி’ துறைமுகம் கிளையின் மேலாளர் சஞ்சய் ஷேன், ரூ. 100 கோடி பழைய பணத்தாள்களைப் பெற்றுக் கொண்டு புதிய பணத்தாள்களை வழங்குகின்றார். மகாராஷ்டிராவின் தொழிற்சாலை மேம்பாட்டு ஆணையத்தின் கிடங்கில் இந்தப் பரிமாற்றம் நடக்கிறது. அந்த வீடியோவில் சஞ்சய், “ரூ. 320 கோடி பணத்தாள்களை மாற்ற வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.

பணமதிப்பு நீக்கத்தின் மூலம் பழைய பணத்தாள்களுக்குப் புதிய பணத்தாள்களை மாற்றிக் கொடுத்ததில் அமித் ஷா முதன்மையான நபராகச் செயல்பட்டதாக கபில் சிபல் சொல்கிறார். 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, 15% முதல் 40% வரை கமிஷன் அடிப்படையில் பழைய பணத்தாள்களை அமித் ஷா மாற்றிக்கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

மோடி அரசின் கீழ் இருந்த அனைத்துத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளாலும் இந்தப் பரிமாற்றம் நடத்தப்பட்டதாகவும் அதன் பிறகு அந்தப் பொறுப்பை அமித் ஷா தலைமையிலான குழு எடுத்துக்கொண்டதாகவும் காங்கிரஸ் சொல்கிறது.

இதை வாசித்தீர்களா? :   எதைப் பற்றியும் கவலையில்லை!

அமைச்சகங்கள் மற்றும் பெருநிறுவனங்களில் இருந்து வந்த பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தாள்கள், விமானப்படைத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்குக் கொண்டு செல்லப்படிருக்கிறது என்ற கபில் சிபல், “நமது விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை மட்டுமே விசாரிக்கும், பதவியில் இருப்பவர்களை அல்ல” என்றார்.

அன்றைய காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் சந்திப்பை நேரலை செய்துகொண்டிருந்த என்.டீ.டி.வி உள்ளிட்ட பல செய்தி ஊடகங்கள், மறை புலனாய்வு (Sting) வீடியோவை ஒளிபரப்புச் செய்யவில்லை. எந்த ஊடகமும் அதுகுறித்து விவாதிக்கவும் இல்லை.

இந்தியா ஊழலில் மூழ்கிய நாடுதான். ஆனால், மோடி கும்பல் ஊழல் செய்வதில் புதிய புதிய வழிமுறைகளை அமலாக்கியதில் உச்சம் கண்டுள்ளது. திருடர்களே தங்களை காவலர்கள் என அறிவித்துக்கொள்வது இந்தியா கண்டுவரும் துயரம்!

oOo

நன்றி : நேஷனல் ஹெரால்ட் இந்தியா

தமிழில் : கலைமதி, வினவு