பிரதிபா தேவிசிங் பாடீலின் பர்தா (து)வேஷம்?

Share this:

{mosimage}காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் இந்தியாவில் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் உடை பழக்கத்தைக் குறித்து, "இது முகலாய மன்னர்களால் விளைந்த  தீமை, அவர்களின் காலத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க இந்திய பெண்கள் கடைபிடிக்க துவங்கியதே இந்த பர்தா முறை" என்று கூறியுள்ளார்.  அவரின் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா குறித்த இத்தவறான கருத்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் வரலாற்று அறிஞர்களிடையே பெரும் எதிர்ப்பையும் கண்டன அறிவிப்புகளையும் சந்தித்து வருகிறது.

பர்தா என்பது இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடை முறை என்பது இன்று உலகெங்கும் சின்னஞ்சிறு குழந்தைகளும் அறிந்திருக்கும் ஒரு விஷயமாகும். அப்படிப்பட்ட இஸ்லாமிய சமூகத்தோடும் கொள்கையோடும் பின்னிப்பிணைந்த இந்த விஷயத்தைக் குறித்து அவர் கூறியிருக்கும் கருத்து நகைப்பிற்குரியதாகும்.

நாட்டின் மிகுந்த உயர் பொறுப்பான ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஒருவர் இந்த ஒரு சாதாரண விவரம் கூட இன்றி வெளியிட்டிருக்கும் இக்கருத்து, அவரின் பொது அறிவு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் சமூக அக்கறையுடன் ஒரு விஷயத்தை அவர் அணுகப்போகும் முறையினையும் அழகாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

நாட்டில் சரித்திர ஆய்வாளர்களையும், நடுநிலையாளர்களையும் கூட அவரின் இக்கருத்து பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மதசார்பற்ற, பன்முகத்தன்மை கொண்ட இந்திய திருநாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர், நாட்டில் இரண்டாவது பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களின் நம்பிக்கையையும், கொள்கையையும் கேலி செய்யும் விதத்தில் வரலாற்றை சிதைத்து வெளிப்படுத்தியிருக்கும் இக்கருத்து நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. ஒரு மதசார்பற்ற கொள்கையுடைய ஜனநாயக நாட்டில், அங்கு வாழும் எந்த ஒரு இன மக்களின் நம்பிக்கையையோ, கொள்கையையோ தெளிவாக அறிந்து கொள்ளாமலும், வரலாற்று அறிவின்றியும் அவசரகோலத்தில் கருத்து வெளியிடும்  இவர், நாட்டின் ஜனாதிபதியானால் அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவைகளாக இருக்குமா என்ற சந்தேகத்தையும் நடுநிலையாளர்களிடம் தோற்றுவித்துள்ளது.

இன்று நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப் படும் பாலியல் வன்முறைகள், ஈவ் டீஸிங் எனும் கொடுமைகள், ஒழுக்கக் கேட்டிற்கு வழிவகுக்கும் சுவரொட்டிகள், பத்திரிக்கைகள், குறுந்தகடுகள் என்று சமுதாயம் ஒழுக்கச் சீர்கேட்டின் அதல பாதாளத்தில் மூழ்குவதைக் கண்டு அரைகுறை உடையில் திரிவதையே சுதந்திரம் என எண்ணும் மேற்கத்தியவர்களும் கூட இந்த பர்தா எனும் பாதுகாப்பு அரணினால் கவரப்பட்டு இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு வருவதை தினந்தோறும் வரும் செய்திகள் உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. எனினும் இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல் இவர் வெளியிட்டிருக்கும் இக்கருத்து ஏதோ அவசர கோலத்தில் வெளியானதாக இருந்தாலும் கூட, பர்தாவைக் குறித்த இவரின் குருட்டுத்தனமான இந்த பேச்சு தற்போது வெளிவரவேண்டிய அவசியம் என்ன என்பதை குறித்து ஆராய்வது அவசியமானதாகும்.

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்சிகள் நபர்களை தேர்ந்தெடுக்க ஆலோசித்ததிலிருந்து இவ்விஷயத்தின் காட்சிகள் ஆரம்பம் ஆகின்றன.

தற்போது நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கூட்டணி யாரை நோக்கி ஒருமித்த குரலில் கைநீட்டுகின்றதோ அவர்களே அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது வெள்ளிடை மலை. எனினும் நாட்டின் அனைத்து கட்சிகளும் ஒருமித்து ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அனைவரும் ஒருமுகமாக ஒருவரை முன்மொழிய சிரமங்கள் மேற்கொள்வது நாட்டின் பாரம்பரியமாகும்.

அந்த வகையில் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் சிவராஜ் பாட்டீலிலிருந்து வேட்பாளர்களை அறிவிக்க துவங்கியது. கூட்டணி கட்சிகளே இவ்விஷயத்தில் ஒரு நிலைக்கு வராததை தொடர்ந்து இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தின் கவர்னராக உள்ள திருமதி பிரதிபா பாட்டீல் வேட்பாளராக முன்மொழியப்பட்டார்.

ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கூட்டணி கூறும் வேட்பாளருக்கு எதிராக கருத்துகளை கூறி ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்த பாராளுமன்றத்தின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி இவரையும் ஏற்றுக் கொள்ள முரண்டு பிடித்து தற்போதைய துணை ஜனாதிபதியான ஷெகாவத்தை போட்டி வேட்பாளராக நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தது.

இந்நிலையில் மாநிலங்களில் பிரபலமாக விளங்கும் முக்கிய கட்சிகள் இணைந்து ஓர் மூன்றாம் அணியை உருவாக்கி அதன் மூலம் மூன்றாவது ஓர் வேட்பாளரையும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தது.

இவ்வேளையில் தான் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஏகமனதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருமதி பிரதிபா பாட்டீல் பர்தா குறித்த மடத்தனமான இக்கருத்தை கூறினார்.

மேலே எடுத்துக்காட்டிய இச்சூழ்நிலையை நன்கு மனதில் இருத்தினால் எதற்காக சம்பந்தமே இல்லாமல் தற்போது பிரதிபா முஸ்லிம்களை புண்படுத்தும் இத்தவறான கருத்தை வெளியிட்டார் என்பது விளங்கும்.

அதனைக் குறித்து ஆராயும் முன் சில வரலாற்று விஷயங்களையும், பர்தா தொடர்பான சில விஷயங்களையும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய துடிக்கும் சங்க்பரிவாரதுணை கொண்ட பாரதீய ஜனதாவின் பர்தா மற்றும் அவ்வரலாற்று விஷயங்கள் தொடர்பான நிலைபாட்டையும் சற்று காண்போம்.

1. பர்தா.

பர்தா என்ற சொல்லின் நேரடி தமிழாக்கம் திரை என்பதாகும். அன்னிய ஆண்களின் பார்வைகளிலிருந்து தங்களை பாதுகாக்கவும், சமூகத்தில் கண்ணியமாக வலம் வரவும் இஸ்லாம், முஸ்லிம் பெண்களுக்கு கூறும் ஓர் ஆடை அமைப்பு என்றும் கூறலாம்.

அதாவது அன்னியர்களின் பார்வைகளிலிருந்து முன்கை மற்றும் முகம் தவிர ஏனைய மறைக்கப்பட வேண்டிய உடல்பகுதிகளை தேவையான ஆடைகள் கொண்டு மறைப்பதே இதன் அர்த்தமாகும்.

இஸ்லாம் சுமார் 1420 வருடங்களுக்கு முன் இறைவனின் இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களால் அரபு மண்ணில் புனர் நிர்மாணிக்கப்பட்டது. வரலாற்று குறிப்புகளிலிருந்து அன்னாரின் வாழ்நாளிலேயே இஸ்லாம் இந்திய மண்ணில் கேரள கடற்கரை வழியாக பரவவும் செய்தது. அதாவது இஸ்லாம் இந்திய மண்ணில் சுமார் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே பரவியது என்பது சாரம்.

இஸ்லாம் இந்திய மண்ணில் பரவிய அக்காலகட்டத்தில் இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இவ்விடம் குறிப்பிடல் பொருத்தமானதாகும்.

இஸ்லாம் இந்தியாவில் பரவத்தொடங்கிய கேரளம் உட்பட உள்ள தென்னக பகுதிகள் அக்காலகட்டத்தில், இந்தியாவின் வந்தேறு குடிகளான பிராமணர், நாயர் மற்றும் நம்பூதிரிகளின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. ஆட்சி புரிந்த மன்னர்கள் இவர்கள் என்ன கூறுகின்றார்களோ அதுவே வேதவாக்காக கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.

சுருக்கமாக கூறினால் மனுதர்ம ஆட்சியை சிவனின் தோளிலிருந்து பிறந்த சத்திரிய மன்னர்கள் மூலம் தலையிலிருந்து பிறந்த பிராமணர்கள் அந்நேரத்தில் நடத்திக் கொண்டிருந்தனர்.

அதன்படி சூத்திரர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படாமல் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தனர். கணவன் இறந்தால் அவனின் சிதையில் மனைவியை எரிக்கும் உடன்கட்டை ஏறுதல் எனும் மனு சட்டம் கடுமையாக வட இந்தியாவில் நடைமுறையில் இருந்தது. அரசவை போன்ற பொது இடங்களில் பெண்களுக்கு அனுமதியே ரத்து செய்யப்பட்டிருந்தது. அரண்மனை அந்தபுரங்களில் அரசர்களின் விளையாட்டுப் பொருளாகவும், ஆண்களை மகிழ்விக்கும் அலங்கார பதுமைகளாகவுமே பெண்கள் பாவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நேரத்தில் தான் இஸ்லாம் கேரள கடற்கரையோரமாக அரபு வியாபாரிகளின் மூலம் இந்தியாவில் நுழைந்தது. நுழைந்த வேகத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு சமூக விடுதலையை நிமிட நேரத்திலேயே பெற்றும் தந்தது. குறிப்பாக பெண்கள் இஸ்லாம் கூறும் பர்தா எனும் ஆடை அமைவு மூலம் உடலை மறைத்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ ஆரம்பித்தனர். அதாவது பர்தா இந்தியாவில் சுமார் 1400 வருடங்களுக்கு முன் முதன்முதலாக அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திர, அரிஜன பெண்களுக்கு கண்ணியத்தை பெற்றுத்தந்ததன் மூலம் அறிமுகமானது.

2. முகலாயர்கள்.

இந்தியாவில் முகலாயர்களின் வருகை(எல்லா இடங்களிலும் முகலாயர்களின் படையெடுப்பு எனக் குறிப்பிடுவதற்கு வித்தியாசமாக இங்கு வருகை எனக் குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது. முகலாயர்கள் இந்தியாவில் வருவதற்கு முன்னரே, இன்று நாட்டை துண்டாடிக் கொண்டிருக்கும் ஓர் கூட்டம் இந்தியாவில் நுழைந்திருந்தது. அது தான் ஆரிய கூட்டம். இவர்களின் இந்திய படையெடுப்பை இன்று வரை எந்த இடத்திலும் ஆரியர் படையெடுப்பு என்று காணமுடியவில்லை. ஆரியர்களின் வருகை என ஏதோ விருந்தாளிகளின் வருகை போன்று குறிப்பிடுவதையே காண முடிகிறது. எனவே தான் முகலாயர்களின் படையெடுப்பையும் வருகை என்றே குறிப்பிடுகிறோம்.) கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. குறிப்பாக கூற வேண்டுமெனில் பானிப்பட் எனும் இடத்தில் கி.பி. 1527 ஆம் ஆண்டு நடந்த முதல் பானிப்பட் யுத்தத்தில் பாபர் பெற்ற வெற்றி நாளை இந்தியாவில் முகலாயர்களின் ஆதிக்க துவக்க நாளாக குறிக்கலாம்.

இந்தியாவில் முகலாயர்களின் வருகையை போன்றே பல்வேறு சமூகத்தவர்கள் வந்துள்ளனர். இவர்களில் இன்று வரலாறுகளில் குறிப்பிட்டு கூறப்படுபவர்கள் ஒன்று ஆரியர்கள்,  இரண்டாவது முகலாயர்கள் மூன்றாவது ஆங்கிலேயர்கள்.

இவர்களால் விளைந்த நன்மை தீமைகளை பட்டியல் இடுவது இக்கட்டுரையின் நோக்கமில்லாததால் முகலாயர்களால் விளைந்த சில நன்மை தீமைகளை மட்டும் தொட்டு செல்வோம்.

முகலாயர்களின் வருகைக்கும் முன் இந்தியாவில் நுழைந்த ஆரியர்களால் அதுவரை எவ்வித வேற்று விருப்பும் இன்றி வாழ்ந்து கொண்டிருந்த இந்திய மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டு இந்திய குடிமக்களிடையே பல்வேறு பழக்க வழக்கங்கள் சட்டங்களாக திணிக்கப்பட்டிருந்தன. அவற்றில் குறிப்பிட தகுந்தது சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கமாகும். இதனை முகலாயர்கள் சட்டமியற்றி தடை செய்தனர்.

பல குட்டி ராஜாக்கள் முதல் பெரிய மன்னர்கள் வரை சின்னஞ்சிறு துண்டுகளாக இன்றைய இந்தியாவை பிரித்து வைத்துக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையை மாற்றி, இந்திய இந்திய வரைபடத்தை(பங்க்ளாதேஷ், பாகிஸ்தான் உட்பட), பரந்த பாரதத்தை உருவாக்கிக் காட்டியவர்கள் முகலாயர்கள். சுருக்கமாக கூறினால் அவர்களுக்கு முன் இந்தியாவில் நுழைந்திருந்த ஆரியர்களால் இந்தியாவில் உருவாக்கி விடப்பட்டிருந்த பல்வேறு சமூக கிறுக்குத்தனமான கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து மக்களை சுதந்திரமாக வாழ வைத்தவர்கள் முகலாயர்கள். இதனாலேயே மக்களின் மிக அதிக நேசத்தைப் பெற்று மிக நீண்ட காலம் இந்தியாவில் அவர்கள் ஆட்சி புரிந்தனர். அக்கால கட்டத்தில் வட இந்தியாவில் இஸ்லாம் வேகமாக பரவவும் செய்தது.

3. சங்க்பரிவாரத்தால் உருவாக்கப்பட்ட பாஜக நிலைபாடு.

மிகச் சுருக்கமாக இவர்களின் நிலைப்பாட்டை கூறினால், இந்தியாவில் இஸ்லாத்தின் வருகைக்கு முன் மக்களை ஆரியர்கள் எவ்வாறு மனுவின் அடிப்படையில் அடக்கி ஆண்டார்களோ அதே போன்று ஒரு ஆட்சியை இந்தியாவில் கொண்டு வருவதே பாஜகவின் இலட்சியமாகும். இதனையே இராமர் ஆட்சி என வசீகரமான வார்த்தையுடன் வலம் வருகின்றனர்.

இவர்களை பொறுத்தவரை பிராணர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு பணிவிடை செய்வதே மற்ற பிரிவினர்களின் இப்பிறவி பணி. இஸ்லாம் வழங்கும் அனைத்து உரிமைகளும் தடை செய்யப்பட வேண்டும். குறிப்பாக பெண்களுக்கான பர்தா, சொத்துரிமை போன்றவை முடமாக்கப்பட வேண்டும். அதற்காக அவர்கள் கையிலெடுத்திருக்கும் ஆயுதங்களில் ஒன்று முகலாயர்கள்.

அவர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் முகலாயர்கள்,

1. இஸ்லாத்தை வாள் முனையில் பரப்பினர்.
2.
பெண்களை அடக்கி ஒடுக்கினர். அவர்களின் அந்தபுரங்களில் பெண்களால் நிரப்பினர்.
3. அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு தெருவில் இறங்கவே முடியாமல் இருந்தது.
4. முஸ்லிம் அல்லாத மற்றவர்கள் மீது அநியாயமாக ஜிஸ்யா எனும் வரி விதித்து கொடுமை படுத்தினர்.
5.
கோயில்களை இடித்து பள்ளிவாசல்களை கட்டி உயர்த்தினர்.
6.
மதம் மாற தயாரில்லாதவர்கள் அனைவரையும் கொன்று ஒடுக்கினர்

என்பது போன்று பட்டியல் நீள்கிறது.

இனி விஷயத்திற்கு வருவோம்.

மேலே சுட்டிக் காட்டியதிலிருந்து பர்தாவிற்கும், முகலாயர்களுக்கும் உள்ள வரலாற்று தொடர்பு தெளிவாக விளங்கியிருக்கும்.

இந்தியாவில் இஸ்லாம் பரவிய காலம் தொட்டே சுமார் 1400 வருடங்களுக்கும் முன்பே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள் அணிய வேண்டிய பர்தாவை, 15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த முகலாயர்களுக்கு பின்னரே அவர்கள் அணிய ஆரம்பித்தனர் எனக் கூறுவது சுத்த பைத்தியக்காரத்தனமல்லாமல் வேறென்ன? எனில், அதுவரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களும் பிராமணர்களின் அடக்குமுறைக்கு பயந்து இடுப்புக்கு மேல் ஆடை அணியாமல் தான் இருந்தனர் என்றா திருமதி பிரதிபா பாட்டீல் கூற வருகின்றார்?

இல்லை. அவருக்கு நன்றாக முகலாயர் வரலாறும் தெரியும். இஸ்லாமிய பாரம்பரியமான பர்தா எதற்கு, எதனால், யாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதும் தெரியும்.

பின் எதற்காக அவர் திடீரென இவ்வாறு உளறி வைக்க வேண்டும்? அங்கு தான் நாட்டின் கவர்னராக எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் பணியாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் பிரதிபாவின் அரசியல் முகம் பல்லிளிக்கின்றது. ஜனாதிபதி நாற்காலி எனும் பதவி மோகம் ஆண்களுக்கு மட்டும் தான் வர வேண்டுமா என்ன? அதற்காக அவர்கள் மட்டும் தான் எவ்வித விளையாட்டும் விளையாட தயாராவர்களா என்ன? இதோ அதிலும் போட்டியிட ஓர் பெண் புலி தயார்.

மூன்று அணிகளாக ரகசிய ஓட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி தேர்தலுக்காக கங்கணம் கட்டும் கட்சிகளுக்கிடையில், எல்லா தரப்பினரையும் திருப்திபடுத்துவது போன்று செயல்படுபவருக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை நன்றாக புரிந்து கொண்ட திருமதி பிரதிபா அம்மையார், பிரதான எதிர்கட்சியான பாஜகவின் கடைக்கண் பார்வையை பெற வேண்டியே மேற்கண்ட பர்தா குறித்தான இக்கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

இதன் மூலம்,

ரகசிய ஓட்டெடுப்பின் மூலம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பியின் அங்கத்தினர்களின் துணை கிடைக்க அவர்களை திருப்திபடுத்துவதற்காக தான் ஒரு தூய ஹிந்துத்துவ சாயல் உள்ளவள் தான் என்று காட்டுவதே இவரின் லட்சியமாகும்.

அவ்வாறு இல்லை. அவர் உண்மையிலேயே பர்தாவினைக் குறித்தும், முகலாயர்களை பற்றிய இந்திய வரலாறைக் குறித்தும் எதுவும் தெரியாமல் தான் அவ்வாறு கூறினார் எனில்,

இந்தியாவில் அதிகாரத்துக்கு வருபவர்களின் பொது அறிவு குறைவிற்கான மற்றுமோர் தெள்ளிய உதாரணமாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டி வரும். 

இவரின் இப்பேச்சு போன்றே முஸ்லிம்களை முட்டாளாக்கும் விதத்தில் சமீபத்தில், கருணாநிதி இடஒதுக்கீடு தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கும். நாட்டில் 75 வருடத்திற்கும் மேலாக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தில், பக்கத்து மாநிலத்தில் கூட நிலை என்ன என்பதை தெரியாமல் "கேரளாவிலும், கர்நாடகாவிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது எனில் நாளையே தமிழ்நாட்டிலும் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட தயார். அதில் கவர்னரும் ஒப்பிடுவார்" என பொது மேடையில் வீரச் சவடால் விட்டார். பொது விஷயங்களில் எவ்வித அக்கறையோ, நலனோ இன்றி எவ்வித அடிப்படை ஆராய்வும் செய்ய தயாரில்லாத அல்லது அதற்கு முன்வராத தலைவர்களே சமீப காலங்களில் இந்திய தாய்நாட்டில் தலைமைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என்பதற்கு இது மற்றுமோர் சாட்சியாகும்.

பெரும்பான்மையினரின் ஓட்டுக்களையும் ஆதரவையும் பெருக்க எவ்வித வரலாற்று அறிவும் இன்றி வாயில் வருவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உளறுவது, இந்தியாவில் இது ஒன்றும் புதிதல்ல. அதனால் பாதிக்கப்படும் முஸ்லிம்களை திருப்திபடுத்தி வழிக்கு கொண்டு வருவது அத்தனை கடினமான காரியம் ஒன்றும் இல்லை என்பதை மற்ற அரசியல்வாதிகளை போன்று பதவிக்கு வருவதற்கு முன்னரே நன்றாக அறிந்து வைத்திருக்கும் மற்றோர் அரசியல்  பச்சோந்தியாகவே இவரையும் கருத வேண்டி உள்ளது.
 
திடீரென்று ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டவுடன், அப்பதவி அளிக்கும் பதவியின் மோகம், நிமிட நேரத்தில் இவரை வழுக்கி விழ வைத்தபின், அவர் அந்த பதவியை பெற்றாலும் பெறா விட்டாலும் உண்மையாளர்கள், நடுநிலையாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் முஸ்லிம்களின் கண்களில் தரம் தாழ்ந்துவிட்டார் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. 
 
"
நாட்டில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்புகள் குறைய மரணதண்டனை(இஸ்லாமிய சட்டம்) வேண்டும்" என்று கருத்து கூறிய சங்க்பரிவார ஆர்.எஸ்.எஸ் பாசறையில் வந்த அத்வானி அவர்களின் கூற்று, ஒரு குற்றம் நடந்த பின் அதற்கான தண்டனை எனும் அடிப்படையில் அணுகி வெளிபடுத்திய கருத்தாகும். ஆனால் அந்த குற்றம் ஏற்படாமல் இருக்க வழி ஏதுமுண்டா என்று சிந்திக்க முனைந்திருந்தால், "சமூகத்தை சீரழிக்கும் விதத்தில் ஆண்களை தவறுக்கு தூண்டும் விதமான அறை குறை ஆடைகளுடன், வெட்கம் மானம் போன்றதை காற்றில் விட்டு நடமாடும் பெண்களின் கலாச்சாரமே" என்ற முடிவுக்கு வர (காழ்ப்புணற்சி தவிர) வேறு எந்த தடையும் ஒருவருக்கு காரணமாக இருக்காது.
 
இந்திய கலாச்சாரத்திலும் கூட கண்ணியத்தை பேணும் பெண்கள், வட இந்திய மாநிலங்களில் தொன்று தொட்டு தலையில் முக்காடு அணியும் பழக்கமுடையவராக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. கிறித்துவத்தை பின்பற்றும் கன்னியாஸ்திரிகள், மதர் தெரஸா போன்ற சமூக சேவகிகள், இந்து ஆன்மீகத்தில் சன்யாசத்தை நாடும் பெண்கள் இது போன்று முழு உடலையும் மறைத்து தலையில் முக்காடிட்டு கண்ணியமாக காட்சியளித்தனர். ஏன் இக்கூற்றை கூறும் திருமதி பிரதிபா அம்மையார் கூட இன்று வரை பொது இடங்களில் காட்சி தரும் பொழுது தலையை மூடிக் கொண்டு தானே காட்சி அளிக்கின்றார்? அது எதற்காக என்பதை அவர் விளக்குவாரா?. பெண்கள் சமூகத்தில் கண்ணியமாக மதிக்கப்பட அவர்கள் தங்கள் உடலை தலையிலிருந்து மூடிக் கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே அறிந்திருப்பதனால் தானே அவர் இவ்வாறு காட்சி தருகிறார். இதனை அவரால் மறுக்க முடியுமா? இல்லையெனில், குறைந்த பட்சம் அவர் தனது தலையிலிருந்து முக்காடையாவது நீக்கி விட்டு பொது இடத்தில் காட்சி தரட்டுமே பார்க்கலாம். தான் கண்ணியமாக மாற்றார்களால் பார்க்கப்பட வேண்டும் என்பதற்காகத் தானே அவர் தலையினை மூடிக் கொண்டு பொது இடத்தில் காட்சி தருகின்றார்?.

எனவே பர்தா என்பது முகலாயர்கள் மூலம் உருவானது என்பதும் உண்மையல்ல; முகலாயர்களின் இந்திய வருகைக்கு முன் இந்தியாவில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட்டிருந்தனர் என்பதும் உண்மையல்ல; தற்காலத்தில் பெண்கள் நீச்சல் உடையில் பொது இடத்தில் வந்தால் கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் நடமாட முடியும் என்பதும் உண்மையல்ல; அதேபோல் முழு உடலையும் மறைக்கும் பர்தா ஆடை முறை பெண்களை இழிவு படுத்தும் செயலும் அல்ல. பெண்களின் மானத்திற்கும், ஆண்களின் உள்ளத்திற்கும் உகந்த ஒரு பாதுகாப்பு கவசமே இந்த பர்தா என்றால் மிகையாகாது. இதை பாட்டீல் போன்ற பெண்கள் உணர்ந்து கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் நல்லது.
 
பாட்டீல் அவர்கள் இதை உணர்வதுடன் தமது வார்த்தைக்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். இதை உணர்ந்து உடனடியாக தனது தவறை திருத்திக் கொள்ள முன்வரவில்லையென்றால் அவர் ஜனாதிபதி பதவி எனும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டின் உயர் பதவிக்கு தகுதியானவரா என்பது கேள்விக்குறியே!.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.