இந்திய உளவுத்துறைக்கு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை-அதிர்ச்சித் தகவல்!

{mosimage}புதுதில்லி: பத்தாயிரத்துக்கும் அதிகமான உளவு அதிகாரிகள் பணிபுரியும் RAW (Research and Analysis Wing) என்று அறியப்படும் வெளிநாடுகளில் உளவறியும் இந்திய உளவு நிறுவனத்தில் ஒரு முஸ்லிம் கூட சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்கிற அதிர்ச்சி தரும் உண்மை தற்போது வெளியாகி உள்ளது. 1999-2000 காலத்தில் RAW-வின் தலைவராக இருந்த திரு A.S. துலாத் இந்த அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார். பிரதமர் போன்ற உயர்பதவி வகிக்கும் தலைவர்களுக்கான மெய்க்காப்பாளர்களாகவும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

அவுட்லுக் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரை RAW தொடங்கப்பட்ட 1969-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஒரு முஸ்லிம் கூட இதில் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றும் இதற்கு முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவிடுவார்களோ என்ற நிரூபிக்கப்படாத அச்சம் தான் காரணம் என்றும் தெரிவிக்கிறது. ஆனால் RAW-வில் இருக்கும் சிலர் நாட்டுக்கு எப்படியெல்லாம் துரோகமிழைத்துள்ளனர் என்பது தனித் தகவல். மிகச் சில முஸ்லிம் அலுவலர்களே உள்நாட்டு உளவு நிறுவனமான IB (Intelligence Bureau)-யில் பணிபுரிவதாகவும் தெரிய வந்துள்ளது.

RAW போன்ற அதிமுக்கியம் வாய்ந்த உளவு நிறுவனங்களில் இந்திய முஸ்லிம்களின் பங்கு மிக இன்றியமையாதது என்றும், அரபி, ஃபார்ஸி, உருது போன்ற மொழிகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள முஸ்லிம்கள் இந்தியப் பாதுகாப்பு அமைப்பில் மிகவும் தேவை என்றும் இன்னொரு முன்னாள் RAW தலைவர் திரு. கிரிஷ் சந்திர சக்ஸேனா தெரிவித்தார். முஸ்லிம்களையும் சீக்கியர்களையும் ஒதுக்குதல் ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளதாகவும் இது நாட்டுநலனுக்கு உகந்த போக்கன்று என்றும் அவர் தெரிவித்தார்.

14 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்திய நாட்டில் ஒரு முஸ்லிம் கூட இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த உயர்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படாமல் தவிர்க்கப்படுவது ஒருபுறமிருக்க, அரசுத்துறைப்பணிகளில் ஏழு விழுக்காட்டிற்கும் குறைவாகவும், இரயில்வேயில் ஐந்து விழுக்காடு அளவிலும், வங்கித் துறையில் நான்கு விழுக்காடு அளவிலும் மட்டுமே முஸ்லிம்கள் பணிபுரிகின்றனர்.

13 லட்சம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தில் வெறும் 29,000 முஸ்லிம்கள் (2.2%) மட்டுமே உள்ளனர். சீக்கிய இனத்தைச் சேர்ந்த திரு.J.J.சிங் தற்போது தளபதியாக இருக்கும் இந்திய இராணுவத்திற்கு இதுவரை முஸ்லிம் எவரும் தளபதியாகவோ துணைத் தளபதியாகவோ இதுவரை நியமிக்கப்பட்டதில்லை.

பிற சமுதாயத்தினரை விட கல்வியறிவிலும்,  பொருளாதாரத்திலும் பெருமளவு பின்னடைந்து இருப்பதால் முஸ்லிம்களிடையே ஏழ்மையும், வேலையின்மையும் மலிந்துள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.

இதை வாசித்தீர்களா? :   குஜராத் அரசின் கவனக்குறைவே வதோதரா வன்முறை சம்பவத்துக்கு காரணம்'