மங்களூரில் பதற்றநிலை தொடர்கிறது

Share this:

மங்களூர்: பெரும்பாலும் மதக்கலவரங்களின்றி அமைதியாக இருக்கும் மங்களூரில் வலதுசாரி பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலரின் வன்முறையால் கலவரம் வெடித்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி இரவன்று, எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற சுமையுந்து ஒன்றை இவர்கள் வழிமறித்து மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மாடுகள் அறுக்கப் படுவதற்காக அரசு பலிக்கூடத்திற்கு (abattoir) எடுத்துச் செல்லப் படும் போதே இவர்கள் இவ்வாறு தகராறு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

இதனையடுத்து இந்தச் சுமையுந்து நிற்காமல் தடையை மீறிச் செல்ல முயன்ற போது அங்கிருந்த இன்னொரு வாகனத்தை இடித்ததாகவும், பின் தொடந்து சென்ற பஜ்ரங் தள உறுப்பினர்கள் அவர்களை வழிமறித்துத் தாக்கியதாகவும் தெரிய வருகிறது. இந்நிலையில் சுமையுந்து முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை அடைந்ததும், இந்துத்துவ உறுப்பினர்கள் கலவரத்தைத் தொடர அங்கிருந்த முஸ்லிம்கள் பதிலுக்கு வன்முறையில் இறங்கினர். இதனால் பெரும் கலவரம் மூண்டது.

 

பொதுச்சொத்துக்கள் பல உட்பட பல தனியார் சொத்துக்களும் நாசப்படுத்தப்பட்டன. கத்திக்குத்துக்கு இலக்கானதால் இருவர் பலியாகியுள்ளனர். இவர்கள் இப்ராஹிம் (36) மற்றும் அப்துல் கஃபூர் (26) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கர்நாடக மாநில காவல்துறை இயக்குநர் சியால், உள்ளூர்க் காவல் அதிகாரிகளைக் கலவரம் சிறு அளவில் இருந்த போதே கட்டுப்படுத்தத் தவறியமைக்குக் கடிந்து கொண்டார்.

 

பிஜேபியைச் சேர்ந்த கர்நாடக உள்துறை அமைச்சர் பிரகாஷ் இந்தக் கலவரத்துக்கு உடனடியாக சிமி இயக்கம் தான் காரணம் எனச் சொன்ன கருத்துக்குப் பல தலைவர்கள் கடும் கண்டணம் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, அரசு எந்திரம் முடமாகிப் போயுள்ளதையும் சமூக விரோதிகள் கட்டுக்குள் வராமல் இருப்பதையும் சுட்டிக் காட்டி தனது கையாலாகாத் தனத்தை மறைக்க திரு. பிரகாஷ் இப்படி பொறுப்பற்ற பேச்சு பேசுகிறார் என்றார்.

 

இதற்கிடையே மூத்த காங்கிரஸ் தலைவர் விஸ்வநாத், அரசு வேண்டுமென்றே மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், மாநில ஆளுநர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நிலைமையைச் சீராக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.