
கடந்த 29.09.2008 இரவில் மாலேகோன் பிக்குச் சவ்க் நூரானி மஸ்ஜிதில் அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் நிம்மதியை மட்டுமின்றி வரப்போகும் பெருநாள் மகிழ்வையும் குலைத்துப் போட்டது அந்தப் பேரோசை.
பிக்குச் சவ்க் மார்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் அப்துல்லாஹ் ஜமாலுத்தீன் அன்ஸாரீ என்பவரின் கடைக்கு எதிரில் யாருமில்லாது ஒரு மோட்டார் சைக்கிள் வெகுநேரம் நிறுத்தப் பட்டிருந்தது. அந்த அனாமோதய பைக் பற்றி மார்கெட் பகுதி காவல்நிலையத்தில் தம் கடைக்கு எதிரிலுள்ள ஓட்டல் சிப்பந்தி மூலம் அன்ஸாரீ எச்சரிக்கை தகவல் தந்தார்.
காவல்துறை கண்டு கொள்ளவில்லை. விளைவு?
அந்த பைக்கில் வைக்கப் பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு சரியாக 9:35க்கு வெடித்ததில் ஸய்யித் அக்தர் (18), ரஃபீக் அக்பர் (30), ஷேக் முஷ்தாக் ஷேக் யூனுஸ் (28) ஆகிய இளைஞர்களோடு ஷாகுஃப்தா பனூ ஷேக் லியாகத் என்ற பத்து வயதுச் சிறுவனும் நிகழ்விடத்திலேயே சிதறி மரணமடைந்தனர்.
காவல்துறைக்கு எச்சரிக்கை தகவல் கொடுத்த அன்ஸாரீ படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுள் ஒருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவருடைய கடைக் கதவுகள் தீப்பற்றி எரிந்தன. குண்டு வெடிப்பால் அவருடைய கடைக்கு எதிரிலுள்ள ஹோட்டலின் இரண்டு மாடி ஜன்னல்களும் உடைந்து நொறுங்கின.
“சிறிது நேரத்தில் அங்கு திரண்ட இளைஞர்கள் பலர், எச்சரிக்கை தகவல் கொடுத்த பின்னரும் அலட்சியம் காட்டிய காவல்துறைக்குத் தம் எதிர்ப்பைக் காட்டினர். தகவலறிந்து மஸ்ஜிதில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களும் இரவு பத்து மணியளவில் சாலையில் திரண்டனர். மேற்கொண்டு காவலர்கள் பல வேன்களில் வரவழைக்கப் பட்டனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலும் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய காவல்துறை, உள்ளிருந்து கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது” என்று குண்டு வெடிப்பின்போது நூரானி மஸ்ஜிதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த, மாலேகோன் அனைத்துப் பிரிவு ஒருங்கிணைப்பின் (All Sect Organisation of Malegaon) மேலாண்மைக் குழு உறுப்பினர் முஃப்தீ நிஜாமுத்தீன் கூறினார்.
“துப்பாக்கிச் சூட்டில் ஷேக் ரஃபீக், ஷேக் முஸ்தஃபா ஆகிய இரு அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர்; ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்று அமைதியும் நீதியும் வேண்டும் குடிமகன்கள் (Citizens for Peace and Justice) அமைப்பின் ஸையித் ஆஸிஃப் அலீ தெரிவித்திருக்கிறார். துப்பாக்கிச் சூட்டிலும் தொடர்ந்த கலவரத்திலும் பொதுமக்களுள் 74 பேரும் 10 காவலர்களும் காயமடைந்து நூர் மருத்துவமனை , ஃபர்ஹான் மருத்துவமனை, வாதியா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.
ஆனால், “குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெருங்கூட்டம் கூடிப் பதற்றம் ஏற்பட்டதால் வானை நோக்கி 58 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப் பட்டது” என்று இணை முதலமைச்சர் ஆர்.ஆர். பட்டீல் மழுப்பி இருக்கிறார்.
குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயும் படுகாயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் சிறுகாயமடைந்தோருக்கு 25,000-50,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப் படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் அறித்திருக்கிறார்.
டில்லி, அகமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தில் ஒரு 5 சதவீதம் கூட மாலேகோன் சம்பவத்துக்கு வழங்கவில்லை. தமிழக ஊடகங்கள் உட்பட தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த மாலேகோன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதி என்பதும் இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் முஸ்லிம்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
எந்த ஒரு குண்டுவெடிப்பு நிகழ்வின் பொழுதும் சம்பவம் நடந்த 5 நிமிடங்களுக்குள்ளாகவே குண்டு வைத்தவர்களைக் குறித்து ஏதாவது ஒரு இல்லாத இயக்கத்தின் பெயரைக் கூறி முஸ்லிம்களின் மீது கட்டிவைத்து, குண்டுவெடிப்புகளின் மூலகர்த்தாக்கள் அனைவரையுமே கண்டறிந்து விட்டது போல் கதைகளைப் பரப்பும் காவல்துறையும் அவை கூறுவதை அப்படியே வரி பிசகாமல் வாந்தி எடுக்கும், சுயசிந்தனையற்ற ஊடகங்களும் இந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து மூச்சு விடாதது ஏன்?. வெடித்த இடமும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலா?.
முன்னர் ஒருமுறை இதே மாலேகோன் பகுதியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுகை நேரத்தில் பள்ளிவாசலில் குண்டு வைக்கப்பட்டது. அன்றைய குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஒட்டுதாடி வைக்கப்பட்டிருந்த மர்ம நபர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டிருந்தது. இருப்பினும் இன்று வரை அந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பதைக் காவல்துறை கண்டறியவில்லை.
ஒட்டுதாடிகளையும் முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளையும் பஜ்ரங்தளின் வெடிகுண்டு நிர்மாணசாலையில் இருந்து முன்னர் காவல்துறை கைப்பற்றியுள்ளது. மேலும், நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்தும் சங்பரிவார் வீடுகள், தொழிற்சாலைகளில் வெடிகுண்டு தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்காசி, மும்பை போன்ற இடங்களில் குண்டு வைத்து அதனை முஸ்லிம்கள் மீது திசைதிருப்பி விட்ட சங்கபரிவாரத்தினரின் செயல்பாடுகளும் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை, கேரளா உட்பட சமீபத்தில் கர்நாடகா பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வரை வண்டி, வண்டியாக வெடிகுண்டுகளைக் காவல்துறை கைப்பற்றியிருப்பினும் நாட்டில் பல்வேறு அசம்பாவிதங்களையும் கலவரங்களையும் திட்டமிட்டு நடத்துபவர்கள் சங்பரிவாரங்களே என்பது தெள்ளத்தெளிவாக தெரியும் நிலையிலும் காவல்துறையினரின் விசாரணைகளில் அவற்றின் செயல்பாடுகள் கண்காணிப்பு வரம்பிற்குள் கொண்டு வராமல் இருப்பதும் பிரபல தேசிய ஊடகங்கள் உட்பட எந்த ஒரு பத்திரிக்கையும் அவற்றின் மீது சந்தேக கண்ணோட்டத்தைச் செலுத்தாமல் இருப்பதும் மிகுந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றது.
“தேசவிரோதிகளின் அழித்தொழிப்புக்காக 1,132 தற்கொலைப் படையினர் தயாராக உள்ளனர்” என்று அண்மையில் தொடங்கியுள்ள ‘ராம் சேனா’ என்ற அமைப்பின் தலைவன் ப்ரமோத் முடலிக் என்ற சங் பரிவார் வெறியன் பேட்டி கொடுத்திருந்ததும் தேச, சமூக, இணக்க விரோதிகளான சங் பரிவார் குழுவினர் அனைவரும் முஸ்லிம்-கிருஸ்த்துவர் ஆகிய சிறுபான்மையினரை, ‘தேசவிரோதிகள்’ என்று குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.