அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு உதவி – பிரதமர்

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் கருதி அவர்களுக்கு தனியார், அரசு வேலைவாய்ப்புகளில் மத்திய அரசு உதவும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார்.

புதுதில்லியில் நேற்று நடைபெற்ற மாநிலச் சிறுபான்மை ஆணையங்களின் ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 15 அம்ச திட்டங்களில் ஒன்றாக சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் உதவி வருவதாக கூறினார்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறுபான்மையின மக்களின் திறமைகளுக்கு உரிய பங்கினை அளிக்கும் வகையில் அரசு அவர்களுக்கு உதவிடும். சிறுபான்மை இளைஞர்களின் திறமைகள் இதன்மூலம் வெளிக்கொண்டுவரப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினரில் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் சமூக, பொருளாதாரப் பின்னடைவுக்குப் போதுமான கல்விமுறையை அவர்கள் மேற்கொள்ளாததே காரணமாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை இது முற்றிலும் உண்மை என்ற அவர், இந்த ஐந்தாண்டு மற்றும் அடுத்த ஐந்தாண்டுத் திட்டங்களில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை அமைத்து அவர்களுக்குக் கல்வி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

கல்வித் திட்டங்களைப் பொறுத்தவரை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் முஸ்லிம் பெண்களின் பங்கு அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை மேம்படுத்தும் முடிவை ஏற்கனவே மத்திய அரசு எடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதுதொடர்பான சட்டமுன்வரைவு மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்றார். இது எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

இதை வாசித்தீர்களா? :   இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு; CBI கண்காணிப்பில் RSS