இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி!

நிதியமைச்சர் ப்ரனாப் முகர்ஜி
Share this:

இந்தியாவில் இஸ்லாமிய முறையிலான வங்கித் திட்டத்தைத் துவக்கும் முயற்சிகளில் குறிப்பிடத் தக்க மிகப் பெரும் முன்னேற்ற நிகழ்வாகக் கடந்த 25.10.2009 அன்று ஒரு சந்திப்பு நடந்தது. இஸ்லாமியப் பொருளாதார இந்திய மைய ICIF ( Indian Centre for Islamic Finance) அமைப்பின் தூதுக் குழுவினர், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ அவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, “வட்டியில்லா இஸ்லாமிய வங்கித்திட்டம் இந்தியாவில் துவங்கிடத் தேவையான சாத்தியக் கூறுகளைப் பற்றி இந்திய ரிசர்வ் வங்க்கியின் கவர்னருடன் வெகு விரைவில் விரிவாக விவாதிப்பேன்” என்று தூதுக் குழுவினரிடம் அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

நிதியமைச்சரைச் சந்தித்த பின்னர் தூதுக்குழுவின் பிரதிநிதி அப்துர் ரகீப், “நிதியமைச்சர் அவர்களிடம் நாங்கள் சமர்ப்பித்த மூன்று பக்க அறிக்கையை அவர் மிகவும் ஆர்வத்துடன் பொறுமையாகப் படித்துப் பார்த்தார். குறிப்பாக, ‘வட்டியில்லாப் பொருளாதாரத்தைப் பரவலாக்கிடப் பெருமளவில் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை’ என்றும் இது, ‘நடைமுறையில் உள்ள வங்கிமுறைகளோடு ஒத்திசைவாக அமைய வேண்டும்’ என்றும் குறிப்பிடப் பட்டிருக்கும் ரகுராம் ராஜன் அவர்களின் நிதித்துறை சீரமைப்புக் குழு(Committee on Financial Sector Reforms – CFSR)வின் வட்டியில்லா வங்கித் திட்டத்தின் பரிந்துரைப் பகுதிகளைக் கவனமாகவும் பொறுமையாகவும் நிதியமைச்சர் வாசித்தார்” என்று கூறினார்.

வட்டியில்லா வங்கி முறை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பயனளிப்பதாகும். மலேசிய வட்டி இல்லா வங்கிகளில் 40% வாடிக்கையாளர்கள் சீனர்கள் ஆவர். பிரிட்டன் வங்கிகளின் 20% வாடிக்கையாளர்கள் முஸ்லிம் அல்லாதவர்.

மேலும், “CFSRஇன் பரிந்துரை, ‘புதுமையான வழிமுறைகளின் சேர்க்கைகள் மூலம் பொருளாதார வளர்ச்சி’ எனும் குறிக்கோளுக்கு ஒத்துள்ளது. மேலும் முறையான ஆய்வுகள் செய்து அதன் பின்னர் திட்டம் வகுத்து, நடைமுறைப் படுத்தப்படும் செயல் திட்டங்களின் மூலம் எவ்விதப் பக்க விளைவுகளோ அபாயமோ இல்லாததும் எளிதில் சாத்தியமாகக் கூடியதுமே வட்டியில்லா வங்கித் திட்டம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அப்துர் ரகீப் தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து குறிப்பிடுகையில், “வட்டியில்லா வங்கி முறை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பயனளிப்பதாகும். மலேசிய வட்டி இல்லா வங்கிகளில் 40% வாடிக்கையாளர்கள் சீனர்கள் ஆவர். பிரிட்டன் வங்கிகளின் 20% வாடிக்கையாளர்கள் முஸ்லிம் அல்லாதவர். மேலும், “இஸ்லாமியப் பொருளாதாரமும் அதன் கோட்பாடுகள் சார்ந்த சமூகநல நோக்கமும் பொறுப்பும் உள்ள முதலீகள் என்பன – அவை எதுவுமற்ற – நடைமுறையில் உள்ள வங்கித் திட்டத்திற்குச் சிறந்த மாற்றுவழியாகும்” என்று வாடிகன் ஆட்சி மன்றம் மேற்குலக வங்கிகளுக்குப் பரிந்துரைத்து இருப்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்” என்று கூறினார்.

கேரள அரசின் (Rs.1000 crore) ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் துவக்கப்பட்ட இதே அடிப்படையிலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனம் பற்றியும், அதைப் பொருளியல் ஆய்வாளர்களான Ernst & Young நிறுவனத்தினரின் ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளுக்குப் பின்னர் உலகளாவிய இஸ்லாமிய வங்கியாக மாற்றும் திட்டமும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைத் திருத்திய பின்னர் நிறைவேற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தேர்ந்து கொள்வதற்காக நிதியமைச்சரிடம் அளிக்கப் பட்ட மனுவில் குறிப்பிடப் பட்டுள்ள ஐந்து அம்சத் தீர்மானங்களுள் :

* நிர்வாக வழிகாட்டல்கள்

* நிதி ஒதுக்கீடு

* நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றல்

ஆகிய பகுதிகள் நிதியமைச்சரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன.

ரிசர்வ் வங்கியின் கவர்னரை அடுத்த வாரம் சந்தித்து இது விஷயமாகப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நிதியமைச்சர் கூறினார். மேலும் அவர் விரைவில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அங்கிருந்து நவம்பர் இரண்டாவது வாரம் திரும்பிய பின்னர் இது விஷயமாக ICIF பிரதிநிதிகளும் நிதியமைச்சகச் செயலாளர்கள், மற்றும் வங்கித்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என்று நிதியமைச்சர் கூறியதாகவும் அப்துர் ரகீப் கூறினார்.

நன்றி : www.twocircles.net

தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.