
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் இன்று (18/05/2007) மதியம் தொழுகை வேளையின் போது பயங்கர குண்டு வெடித்தது. இதில் 5 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மரண எண்ணிக்கை மேலும் உயரும் என கருதப்படுகின்றது.
ஹைதராபாத்திலுள்ள மக்கா பள்ளிவாசல் கி.பி. 1617 ஆம் வருடம் கட்டப்பட்ட மிகப் பழமையான, இந்தியாவிலேயே மிகப்பெரிய பள்ளிவாசலாகும். ஆந்திர மாநிலத்திலேயே மிக அதிகமாக மக்கள் கூடும் பஜார் பகுதியைக் கொண்ட இந்த பள்ளிவாசலில் இன்று மதியம் வெள்ளிக் கிழமை தொழுகைக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கூடியிருக்கும் வேளையில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. உடனடியாக வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் பள்ளிவாசலின் புறப்பகுதியிலிருந்து மேலும் மூன்று குண்டுகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்தனர்.
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் சிறப்புவாய்ந்த சார்மினாருக்கு மிக அருகாமையில் இருக்கும் இப் பள்ளிவாசலில், வெள்ளிக் கிழமைகளின் போது இமாமின் உரையைத் தொடர்ந்த ஜும்ஆ தொழுகைக்கு முன் 10 நிமிட நேரம் ஜும்ஆவின் முன் சுன்னத் தொழுகைக்காக ஒதுக்குவது வழக்கம். இன்றும் வழக்கம் போல் ஜும்ஆ தொழுகைக்காக மக்கள் காத்திருந்த அந்த 10 நிமிட வேளையில் திடீரென இந்த குண்டு வெடித்துச் சிதறியது. ஒருவேளை தொழுகை ஆரம்பித்த பின் இது நிகழ்ந்திருக்குமானால் உயிரிழப்பு மிக அதிகமாக இருந்திருக்கும்.
இதனைத் தொடர்ந்து கண்டறிந்து செயலிழக்கச் செய்யப்பட்ட மூன்று குண்டுகளையும், முந்தைய குண்டு வெடிப்பு நேரத்தையும் வைத்து கணக்கிடும் பொழுது, இது ஓர் திட்டமிட்ட வெறிச்செயல் என்பது புலனாகிறது. இதனை செய்தவர்கள் யார் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதே போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் கொல்கத்தா மற்றும் பெங்களூருக்கும் விடப்பட்டதால் அங்குள்ள பள்ளிவாசல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் கேட்டறிந்த தற்போது டில்லியில் இருக்கும் ஆந்திர முதல்வர் திரு. ராஜசேகர் ரெட்டி அவர்கள் தொடர் நடவடிக்கைகளை விரைந்து நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஹைதராபாத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் அதற்கு நேர் எதிராக கவலையளிக்கும்படியான தகவலை தெரிவிக்கின்றன. பள்ளிவாசலில் தொழுகைக்கு முன் ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து மக்கள் மிகவும் கொந்தளிப்பதாகவும், ஆங்காங்கே மக்களிடையே கலவரம் நிகழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமக்கு இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகவும் உயிருக்குப் போராடி வருபவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் டெல்லி ஜூம்மா பள்ளிவாசலில் 14 உயிர்களைப் பலிகொண்ட குண்டுவெடிப்பிற்கும் தற்போது ஹைதராபாத் மக்கா பள்ளிவாசலில் வெடித்த குண்டுவெடிப்பிற்கும் தொடர்பு உள்ளதாக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், கடந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் மாலேகான் தொடர் குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் பலர் அநியாயமாய் உயிர்நீத்ததும் நினைவிருக்கலாம்.
கடந்த வருடத்தில் பள்ளிவாசல்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் வழக்கில் இன்னும் நிலுவையில் உள்ள சமயத்தில் அடுத்தடுத்து தொழுகையாளிகள் பெருமளவில் கூடும் தினமான வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து நடத்தப்படும் இக்கொலைவெறிச் சம்பவங்கள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பின்மையை வெளிப்படையாகக் காட்டுகிறது.