பத்திரிகை நேர்மை(?)யின் பல்லிளிப்பு!

Share this:

கடந்த இரு நாட்களாகக் கர்நாடகாவை மையமாக வைத்து இந்திய ஊடகங்கள் பல “இஸ்லாமியத் தீவிரவாதக்” கூக்குரல் எழுப்பி வருகின்றன.
 
நடந்த சம்பவம் இது தான்:
 

மருத்துவம் படிக்கும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் வாகன ஓட்டுனர் உரிமம் இன்றி கர்நாடகா மங்களாபுரம் பகுதியில் உள்ள காட்டு எல்லைப்பகுதியில் வாகனம் ஓட்டி வரும் பொழுது காவல்துறையினரிடம் பிடிபடுகின்றனர்.
 
அவர்கள் சென்ற அந்தக் காட்டுப்பாதையில் சற்று உள்ளே சென்றால் அங்கு ஒரு தர்கா உள்ளது. அந்த தர்காவில் பறக்கும் பச்சை வண்ணக் கொடியும் உள்ளது. விஷயம் இவ்வளவு தான்.

அவர்கள் பிடிபட்ட ‘நிமிட’ நேரத்தில், விஷயம் அறிந்த புலனாய்வு(!) செய்யப் புறப்பட்ட ஏதோ ஒரு பத்திரிக்கையின் இஸ்லாமிய எதிர்ப்புத் திமிர் நிறைந்த, ‘நிருபர்’ என்ற போர்வையில் உலவும் ஒருவர் கொடுத்த விவரம் அடுத்த நாளில் இருந்து இந்திய ஊடகங்கள் ஒவ்வொன்றாக எவ்வித ஆய்வும் இன்றி வெளியாக ஆரம்பித்தன.
 
கொடுத்த புலனாய்வு(?) அறிக்கை இப்படி:
 
“பாகிஸ்தான் ISI-யுடன் தொடர்புடைய லஷ்கரே தொய்பாவைச் சேர்ந்த மூன்று அதிபயங்கரத் தீவிரவாதிகள் கர்நாடகா காட்டுப்பகுதியில் அதிபயங்கர ஆயுதங்களுடன் கைது; அவர்கள் ஆயுதப் பயிற்சி எடுக்கும் தர்காவைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துத் தீவிரவாதிகளைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து RDX போன்ற பயங்கர வெடிமருந்துகளும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்கள் ஆயுதப் பயிற்சி செய்யும் அக்காட்டுப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்திலிருந்து அடுத்தச் சில தினங்களில் கர்நாடகாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இயங்கும் தகவல் தொழில் நுட்ப(ஐடி) அலுவலகங்களைத் தகர்க்க அவர்கள் திட்டமிருந்தது தெரிய வந்தது”
 
இது போதாதா நம் காகிதப் புலிகளுக்கு?. இந்த சிறு இழையைப் பிடித்துக் கொண்டு கடந்த இரு நாட்களாக இந்தியாவின் பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் காது, மூக்கு வைத்து பக்கங்களை “தீவிரவாதிகள் கைது” என நிறைத்துக் கொண்டாடி வருகின்றன.
 
இதற்கிடையில் சம்பவமறிந்து விஷயத்தின் உண்மை நிலவரம் அறிய வேண்டி நேரடியாகச் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்ட ஒரு சில பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு அச்செய்தி முழுமையாகத் தவறானது என்ற தகவல் கிடைத்தது. ஏற்கெனவே “முஸ்லிம் தீவிரவாதிகள் கைது” தலையங்கம் தீட்டி விட்ட பத்திரிக்கை தர்மம்(!) பேணும் ஊடகங்களுக்கு அதனைக் கேட்க காது எங்கே திறந்து உள்ளது. தொடர்ந்து கூறியக் கதையையே இன்னும் மெருகூட்டி எழுதி வருகின்றன.
 
இதற்கிடையில் சம்பவத்தைக் குறித்துக் கருத்துக் கேட்டபொழுது பெங்களூர் ஐஜி சங்கர் பிதரி கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
“கர்நாடகா காவல்துறை கைது செய்த அந்த மூன்று இளைஞர்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்ற எந்த ஒரு தகவலும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர்களிடமிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்பட்டன என்றச் செய்தி தவறானதாகும். அவ்வாறு எந்த ஓர் ஆயுதமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்படவில்லை.”
 
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு? யாரோ கூறிய தவறான தகவலை கடந்த இரு நாட்களாக வாந்தி எடுத்துக் கொண்டாடிய ஊடகங்கள் இனி தங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்ளப் போகின்றன?.

மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் அந்த மூன்று இளைஞர்களைத் தவறாகப் படுபயங்கரத் தீவிரவாதிகள் என உலகம் முழுவதும் புகைப்படங்களுடன் அறிமுகப் படுத்தியாயிற்று. இனி அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? மனதால் உடைந்துப் போயிருக்கும் அந்த இளைஞர்களின் மனதுக்கு உறுதியளித்து அவர்களைச் சமூகத்தின் முன் தலைநிமிர்த்தி இந்தியக் குடிமகன்களாக நடைபோட வைக்க என்ன செய்ய வேண்டும்?
 
தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடை எழுதுவது தான் யாரோ?


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.