முஸாஃபர் நகர் : இந்து பயங்கரவாதிகளின் இன்னொரு வெறியாட்டம்

தேர்தல் வெற்றிகளை அடைய, அரசியல்வாதிகள் எந்த ஒரு  கீழ்த்தரமான எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு, உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் கலவரங்கள், மிக மோசமான உதாரணம்.

‘சாலையில் சென்ற ஓர் இளம்பெண்ணை கல்லூரி மாணவன் ஒருவன் கேலி செய்தான்’ என்ற ஒரு பிரச்னை, அரசியல்வாதிகளால் திட்டமிட்டு ஊதிப் பெரிதாக்கப்பட்டு, 48 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக வீதியில் அலைய வைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேலையில், இந்தக் கலவரங்களை உ.பி. மாநிலத்தின் தனிப்பட்ட பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது!

இந்தியத் தலைநகர் டெல்லியில் இருந்து 145 கி.மீ. தூரத்தில், உ.பி. எல்லைக்குள் இருக்கிறது முஸாஃபர் நகர். இதன் அருகில் உள்ள சற்றே பெரிய கிராமம், கவால். இந்தப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி, சாலையில் சென்றுகொண்டு இருந்த இளம் பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ஷா நவாஸ் குரேஷி என்கிற வாலிபர் கிண்டல் செய்திருக்கிறார்.

உடனே அவரை அழைத்து அந்தப் பெண்ணின் சகோதரர்கள் சச்சின் சிங், கௌரவ் சிங் ஆகியோர் கண்டித்துள்ளனர். அது கைகலப்பாக மாற, ஷா நவாஸ் அந்த இரண்டு சகோதரர்களால் அடித்துக் கொல்லப் பட்டார். கொலையான ஷா நவாஸ், ஓர் இஸ்லாமியர், கொலை செய்தவர்கள் ஜாட் இந்துக்கள். இதனால் இது மதரீதியான வன்முறையாக உருப்பெற்று, மற்றொரு குழுவினர் திரண்டு வந்து சிங் சகோதரர்களைக் கொலை செய்துவிட்டனர். ‘ஈவ்-டீஸிங்’ வழக்கு, மூன்று பேரின் உயிர்களைப் பறித்தது.

உள்ளூர் அரசியல்வாதிகள் இதை மத மோதலாகத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைத்தார்கள். அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில் மக்களிடம் பிரிவினையைத் தூண்டி தூபம் போட ஆரம்பித்தனர். குறிப்பாக, பா.ஜ.க. மற்றும் சங் பரிவாருடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பான பாரதிய கிசான் சங்கம் போன்றவையும், பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸும் மக்கள் அடித்துக்கொண்டு சாவதை மேலும் விரைவுபடுத்த விரும்பினார்கள். இரு தரப்பையும் தனித்தனியே அழைத்து உசுப்பேற்றினார்கள்.

விளைவு, அடுத்து வந்த நாட்களில் முஸாஃபர் நகர் பெரும் கலவர பூமியானது. எண்ணிக்கையில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், இந்து மத வெறியர்களால் தேடித் தேடி வேட்டையாடப்பட்டனர்.

அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 48. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள், சொந்த ஊர்களில் இருந்து வேறு இடங்களுக்கு அகதிகளாக வெளியேறிவிட்டனர். அவர்கள், 70-க்கும் அதிகமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு, பல்லாயிரம் போலீஸ், துணை ராணுவப் படைகள் என முஸாஃபர் நகர் பகுதி கடும் கண்காணிப்பின் கீழ் இருந்தாலும், பதற்றம் இன்னும் அடங்கவில்லை.

இதை வாசித்தீர்களா? :   ஏவுகணைத் தொழில் நுட்பத்தின் முன்னோடி - திப்புசுல்தான் (இந்திய பாதுகாப்புத்துறை அறிவிப்பு)

”நான் கர்ப்பிணி என்று தெரிந்தும்கூட யாரும் என்னைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. எதிர்படும் அனைவரின் கைகளிலும் கத்திகளும் கம்புகளும் இருந்தன. என்னைக் கொல்வதற்காகத் துரத்தினார்கள். நான், என் வீட்டில் இருந்து 40 கி.மீ. ஓடி வந்துதான் என் குழந்தையைப் பெற்றெடுத்தேன்!” என்று கண்ணீருடன்  சொல்கிறார் நூர்ஜஹான்.

பெரும் ஆயுதங்களுடன் தங்களை வீதி வீதியாகத் துரத்தி கொலை செய்த இந்துத்துவ வெறியர்களின் முகங்கள், இஸ்லாமியர்களை அச்சுறுத்துகின்றன.

‘முஸாஃபர் நகரில் மறுபடியும் அமைதி திரும்பினாலும் அங்கு செல்ல மாட்டோம்’ என்கிறார்கள் கலவரத்தால் பாதிக்கப் பட்டவர்கள். இந்தத் திட்டமிட்ட வன்முறைகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதை தனியார் தொலைக் காட்சிகளின் புலனாய்வு செய்திகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தின. ஆரம்பத்திலேயே இந்த வன்முறையைத் தடுத்திருக்கக்கூடிய சாத்தியம் இருந்தும், வழக்குப் பதிவுசெய்ய வேண்டாம் என தங்களை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்தியதாக, காவல் துறை அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் ஒரு  எம்.எல்.ஏ., இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கொல்லப்படும் வீடியோ காட்சியை யூ-டியூபில் உலவவிட்டுள்ளார். அது ப்ளூ டூத் வழியாக செல்போன்களுக்கு இடம் மாறி, கலவரம் பெரிய அளவில் பரவக் காரணமாக அமைந்துவிட்டது. இதுவும் இப்போது அம்பலமாகியுள்ளது.

இந்த வன்முறையை நிகழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சோமுக்கு, சிறை அதிகாரிகள் சல்யூட் வைத்து ராஜமரியாதை செய்யும் படங்களும் வெளியாகியுள்ளன. அந்தப் படங்களே ஆயிரம் உண்மைகளை உணர்த்துகின்றன!

நன்றி: விகடன் (அக்டோபர் 02, 2013)