கும்பகர்ணனை போல மோடி அரசு தூங்குகிறது: சுப்ரீம் கோர்ட் குட்டு

Share this:

புதுடெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கும்பகர்ணணைப் போல தூங்கிக் கொண்டிருக்கிறது என சுப்ரீம் கோர்ட் விமர்சித்துள்ளது.மத்திய அரசு மிகவும் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், பிரதமர் மோடி மிகவும் கடினமாக உழைத்து வருகிறார் எனவும் பாஜ தலைவர்கள் பிரசாரத்தின் போது கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய அரசு கும்பகர்ணனை போல தூங்கிக் கொண்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட் குட்டியுள்ளது.

உத்தரகண்டில் உள்ள அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆகிய நதிகளில் அமைக்கப்பட்டு வரும் 24 நீர் மின் உற்பத்தி திட்டங்கள் காரணமாக சுற்றுசூழல் மற்றும் அங்குள்ள மீன்வளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பல முறை வாய்ப்பு கொடுத்தும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அறிக்கை தாக்கல் செய்ய பல முறை அவகாசம் அளித்த போதும் மத்திய அரசு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த அறிக்கையை எதிர்பார்த்து திட்டங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தன்னை மிகவும் வலிமையாகவும் திறமையாகவும் செயல்பட்டு வருவதாக கூறி கொள்கிறது. ஆனால் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது ராமாயணத்தில் வரும் கும்பகர்ணனின் நடவடிக்கையை போல உள்ளது.

நமக்கு மின்சாரம் தேவைதான். அதே நேரத்தில் சுற்றுசூழல் பாதிக்கப்படாமல் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து யோசிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் கூறுகையில், இது தொடர்பாக 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் மத்திய அரசு சார்பில் 2 பேரும், மற்ற 11 பேரும் நியமிக்கப்பட்டனர். இதில் மத்திய அரசு பிரதிநிதிகளை தவிர மற்ற அனைவரும் ஒரு மனதாக சுற்றுசூழல் மற்றும் மீன்வளம் பாதிக்கப்படும் என்றே கருத்து தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரகண்டில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து அக்டோபர் 29க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்முரசு (10-10-2014) | தினகரன் | Indian Express


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.