குஜராத் போலி என்கவுண்டர்: தொடரும் அதிர்ச்சிகள்! (Updated)

லஷ்கரே தொய்பா தீவிரவாதி எனக் காரணம் கூறி கொலை செய்யப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் விவகாரத்தின் தொடர் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இது நாடு முழுவதும் மக்களிடையே அரசுக்கு எதிராக பலத்த எதிர்ப்பினையும் விளைவித்து வருகின்றது.

சொக்ராபுதீனை போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளான வன்சாரா (எல்லைப் பகுதி டி.ஐ.ஜி), ராஜ்குமார் பாண்டியன் (உளவுத்துறை எஸ்.பி.) மற்றும் தினேஷ் (ராஜஸ்தான் எஸ்.பி.) ஆகியோர் கைது செய்யப்பட்டு மே 1ம் தேதி வரை சி.ஐ.டி. போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து குஜராத் மாநில சி.ஐ.டி. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சொக்ராபுதீன் அவரது மனைவி கவுசர்பீ, மற்றும் என்கவுன்டரில் கொல்லப்பட்ட துளசிராம் பிரஜபதி ஆகிய மூவரையும் அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட குவாலிஸ் கார் உட்பட 2 வாகனங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

சொக்ராபுதீனை சுட்டுக் கொன்ற பிறகு அவரது மனைவி கவுசர்பீயை அடைத்து வைத்திருந்த காந்திநகர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு பங்களாவையும் சி.ஐ.டி போலீசார் கைப்பற்றி உள்ளனர். சொக்ராபுதீனை சுட்டுக்கொன்ற போலீசார், கவுசர்பீயையும் சுட்டுக் கொன்றுவிட்டு சடலத்தை சபர்கந்தா மாவட்டத்தில் இலோல் நகரப் பகுதியில் ஆள்நடமாட்ட இல்லாத இடத்தில் வைத்து எரித்துள்ளனர்.

சடலத்தை எரிப்பதற்காக சபர்மதி பகுதியில் விறகு கட்டைகளை வாங்கி இலோல் நகருக்கு கொண்டு சென்றதற்கான ஆதாரமும் சி.ஐ.டி போலீசிடம் சிக்கி உள்ளது. கவுசர்பீ அடைத்து வைக்கப்பட்ட பங்களாவின் உரிமையாளர், அதன் காவல்காரர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போலி என்கவுன்டர் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சொக்ராபுதீனின் மனைவி கவுசர்பீயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியுமா? என்பது குறித்து நாளை தெரிவிக்குமாறு சி.ஐ.டி. போலீசாரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு உடனடியாக பதில் அளித்த சி.ஐ.டி. போலீசார், “கவுசர்பீயும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம். இதை நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகமான உள்ளன” என்று தெரிவித்தனர்.

போலி என்கவுன்டர் விவகாரம் குஜராத் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குஜராத்தை சேர்ந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா கூறுகையில், “முதல்வர் மோடியும், போலீஸ் துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மோடியின் உத்தரவின் பேரில் சொக்ராபுதீன் கொல்லப்பட்டுள்ளார். இதே பாணியில் மேலும் சிலர் கொல்லப்பட்டு இருக்கலாம். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

இதற்கிடையில் போலி என்கவுன்டர் வழக்கில் கைதான 3 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜி. ரஜினிஷ் ராய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில் குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த போலி என்கவுண்டரில் பங்குபெற்ற மேலும் 25 போலீசார் விரைவில் கைதாவார்கள் என்று தெரிகிறது.

இதை வாசித்தீர்களா? :   மாலேகான் பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி

கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி வன்சாராவின் அளவுக்கதிகமான சொத்துக்களை குறித்து விசாரணை செய்ய ஊழல் தடுப்புத் துறையிடம் சி.ஐ.டி தரப்பு கோரிக்கை வைக்கும் என்றும் கருதப்படுகின்றது. இதற்கிடையில் குஜராத்தில் நடந்த என்கவுண்டர்கள் அனைத்தைக் குறித்தும் சி.பி.ஐ விசாரணை தேவை என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. பாராளுமன்றத்தில் அங்கத்தினர்களான அனைத்து கட்சியை சார்ந்த எம்.பிக்களும் நேற்று இக்கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா நடத்தினர். “குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு துவக்கம் குறித்ததும், ஊக்கம் அளித்ததும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி என்றும், எனவே இவ்வழக்கில் குஜ்ராத் அரசின் தலையீடு வருவதற்கும், விசாரனை முழுமை பெறாமல் தடைபடுவதற்கு சாத்தியக் கூறு இருப்பதாகவும், எனவே இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட வேண்டும்” எனவும் சி.பி.ஐ தேசிய கவுன்சில் செயலர் டி.ராஜா கருத்து தெரிவித்தார்.

கைது செய்யப்பட வேண்டிய அதிகாரிகள் யார், யார் என்பதை, சொக்ராபுதீன் படுகொலை பற்றி விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி கீதா ஜோக்ரி ஏற்கனவே அறிக்கையாக சமர்ப்பித்து விட்டார்.

இறுதியாகக் கிடைத்த தகவல்கள்: (01-05-2007)

 

நீதிபதி தருண் சாட்டர்ஜியின் முன்னிலையில் நேற்று நடந்த இவ்வழக்கின் விசாரணையின் போது, போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப்பட்ட சொக்ராபுத்தீனின் மனைவியையும் சுட்டுக்கொன்றதோடு உடல் பாகங்களை எரித்து அழித்ததாக குஜராத் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இவ்விவரத்தை குஜராத் அரசு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் KTS துல்ஸி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய முயன்ற லஷ்கரே தொய்பா தீவிரவாதி என்ற காரணம் காட்டி சொக்ராபுத்தீனை சுட்டுக் கொன்றதன் பின்னரே அவர் மனைவியையும் ரகசிய பங்களாவில் அடைத்து வைத்து மூன்று நாட்களுக்கு பின்னரே கொன்று எரிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் அவர் மனைவியை பங்களாவில் அடைத்து வைத்ததற்கான காரணம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. அம்மூன்று நாட்களும் அவர் மனைவியை முதிர்ந்த காவல்துறை அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொன்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

சொக்ராபுத்தீனை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த மறுநாள் குஜராத் அரசு, “சர்வதே தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ள தீவிரவாதியை போலீஸ் சுட்டுக் கொன்றதாக” அறிவித்ததோடு மட்டுமல்லாமல் சொக்ராபுதீனை சுட்டுக் கொன்ற போலீசாருக்கு அரசு பதக்கங்களும், சன்மானங்களும் வழங்கி கௌரவிக்கவும் செய்திருந்தது.

இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று காவல்துறை அதிகாரிகளும், நரேந்திரமோடியை கொலை செய்ய முயன்ற தீவிரவாதிகள் என்று காரணம் காட்டியே, கடந்த இரு வருடத்தில் 30க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. தீவிரவாத எதிர்ப்புப்படையில் அங்கத்தவர்களாக உள்ள ஏனைய போலீசாரிடம் இவ்வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் நடத்திய அனைத்து என்கவுண்டர்களும் போலியானவை என்றும், குஜராத் கலவரத்திற்குப் பின் நரேந்திரமோடிக்கு எதிராக நாட்டில் எழுந்துள்ள அவப்பெயரை களையவும், அவர் மீது அதிகார வட்டத்திலும், மக்கள் மத்தியிலும் அனுதாபத்தை தோற்றுவிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல்கள் தான் அனைத்து என்கவுண்டர்களும் என தெரிவித்துள்ளனர்.

நேற்றைய விசாரணையின் போது இவ்வழக்கு தொடர்பான அறிக்கையை சி.ஐ.டி போலீசார் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர். அதிலும் அடங்கியுள்ள தகவல்கள் பல அதிர்ச்சி தருவனவாக உள்ளன.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

* சொக்ராபுத்தீனை கொலை செய்ய திட்டம் வகுப்பதில் குஜராத் அரசு பங்கு வகித்திருந்தது.


* சொக்ராபுத்தீனை கொலை செய்வதற்கு முன்பு குஜராத் காவல்துறை அமைச்சரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான அமித் ஷாவுடன் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருந்தனர்.


* சொக்ராபுதீனை சுட்டுக் கொன்ற உடன் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் சம்பவத்தை அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.


* சொக்ராபுத்தீன் கொல்லப்பட்டதில் சிக்கல்கள் எழுந்தவுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் அது தொடர்பாக சி.ஐ.டி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதனை குஜராத் அரசு ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தது.


* உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பிரகாரம் இவ்வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சி.ஐ.டி துறையினரின் விசாரணையை முடக்குவதற்கும் குஜராத் அரசு முயன்றது.