செகாவத் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்

{mosimage}குடியரசுத் தலைவர் பதவிக்கு் போட்டியிடும் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் தனது பதவியிலிருந்து விலகிப் போட்டியிட வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ், RSS இயக்கத்துடன் தனக்குள்ள உறவு குறித்தும் செகாவத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
 
துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பிரச்சார மையமாக மாற்றப்படக் கூடாது என விரும்புகிறோம்.
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு எதிராக பாஜகவும், செகாவாத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.
 
எங்களாலும் செகாவத்தின் காவி படிந்த அவரது கடந்த கால வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து பல்வேறு பட்ட குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கூற முடியும்.

ஆனால் செகாவத் வகிக்கும் பதவியின் மரியாதை கருதி நாங்கள் எதுவும் கூறாமல் இருக்கிறோம்.
 
எனவே செகாவத் தனது பதவியை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் அல்லது போட்டியிலிருந்து விலக வேண்டும் என மோகன் பிரகாஷ் மேலும் கூறினார்.

இதை வாசித்தீர்களா? :   ஆதாரங்களின்றி முஸ்லிம்களைக் கைது செய்த காவல்துறையினருக்கு எதிராக தேவகௌடா!