சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் 55 காவலர் பலி

{mosimage}சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதம் தரித்த நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சத்தீஸ்கர் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் பிற 39 பேர் சிறப்புக் காவல் அலுவலர்கள் (Special Police Officers)

பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ராணி போத்லி என்ற கிராமம் அருகில் நடைபெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த மற்ற 12 காவலர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த அதிகாலை இருட்டு வேளையில் கிட்ட தட்ட 400 முதல் 500 மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் எளிதில் சென்றடைய முடியாத ராணி போட்லி காவல் நிலையத்தை சூழ்ந்து கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஒருங்கிணைந்த முறையில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில், காவல் துறையினர் இருந்த வளாகத்தை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்டன. நாட்டு பெட்ரோல் குண்டுகளை வீசி பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த இடம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

அந்த வளாகத்தில் 20 காவல்துறையினரும், ஐம்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர் ஆயுதக் குழுவினரும் தங்கியிருந்தனர். இந்த தாக்குதலின் போது தப்பித்து வெளியேற முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல ஆயுதங்களை பறிமுதல் செய்து கொண்டு காடுகளுக்கு தப்பிச் சென்றனர். சத்தீஸ்கர் மாநிலம் உருவானபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்தத் தாக்குதல் குறித்து இந்தியாவின் உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டீல் இதனைக் கடுமையாக கண்டனம் செய்ததுடன், மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் கூறியுள்ளார்.

செய்தி: ராய்ட்டர்ஸ்

இதை வாசித்தீர்களா? :   பாஜக தலைவர்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்மையா?