பாஜகவினர் என்னைக் கொல்லத் திட்டமிட்டனர் – உமாபாரதி

சத்தர்பூர்: பாஜகவினர் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் மத்தியபிரதேச முதல்வரும், முன்னாள் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனசக்தி கட்சியின் தலைவருமான உமாபாரதி குற்றம் சாட்டினார். இடைத்தேர்தல் பிரச்சார வேளையில் தனக்கும் தனது கட்சி பிரச்சாரகர்களுக்கும் எதிராக பாஜகவினர் நடத்திய தாக்குதலும் தான் பயணம் செய்த ஹெலிகாப்டருக்குத் தீவைக்க நடத்திய முயற்சியும் இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் உமாபாரதி கூறினார்.

காவல்துறை இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முன்வர மறுக்கிறது. தனிப்பட்ட முறையில் என் மீதுள்ள பகையைத் தீர்க்க பாஜகவினர் தன்னைத் தாக்கவும் தேர்தல் பிரச்சார வேளையில் மிக மோசமான வார்த்தைகளில் தன்னை அவமானப்படுத்தவும் செய்ததாக உமாபாரதி மிகுந்த மனவேதனையுடன் தன் முன்னாள் சகாக்கள் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

ஒருகாலத்தில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாகவும், முக்கிய தேசியத்தலைவர்களில் ஒருவராகவும் இருந்த உமாபாரதி பாபர் மசூதி இடிப்பு போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியப் பல மறைமுக திட்டங்களுக்கு அத்வானியுடன் கரம் கோர்த்து முன்வரிசையில் நின்று வீரியத்துடன் செயலாற்றியவராவார்.

பின்னர் அத்வானியுடன் எழுந்த பிரச்சனையைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலக்கப்பட்டார். அதன் பின் பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியைத் தொடங்கியதோடு பாஜகவின் முக்கிய தேசியத் தலைவர்களான அத்வானி மற்றும் வாஜ்பாயின் மீது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்பது போன்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்தார்.

இச்சூழலில் அவர் தன்னை பாஜக கொலை செய்ய திட்டம் தீட்டிச் செயல்படுகிறது என குற்றம் சுமத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை வாசித்தீர்களா? :   மும்பையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு குறை பிரசவத்தில் குழந்தை: சிவசேனா தலைவர் கைது