கனடாவுக்கு ஆள்கடத்தல் செய்ய முயன்ற பாஜக MP கைது

Share this:

பணத்திற்குக் கைமாறாக கடவுச்சீட்டு (Passport) முறைகேடு புரிந்து கனடா செல்ல முயன்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் பாபுபாய் கட்டாரா, டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டார்.

குஜராத் மாநிலம் தாஹோத் மக்களவைத் தொகுதியிருந்து வெற்றிபெற்ற திரு.பாபுபாய், தனது மனைவி சாரதா பென் பெயரில் பரம்ஜித் கவுர் என்ற பெண்ணையும் தன் மகன் ராஜேஷ் பெயரில் அமர்ஜீத் என்ற நபரையும் கனடாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றார்.

அவர் தனது மனைவியின் முறையான அரசுமுறை (Diplomatic) கடவுச்சீட்டில் அவரது படத்தை வெட்டி எடுத்து அவ்விடத்தில் பரம்ஜீத் கவுரின் படத்தை ஒட்டி இந்த மோசடியைச் செய்திருந்தார்.

விமான நிலைய அதிகாரிகளின் வழக்கமான குடியுரிமைச் சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் இந்த கடவுச்சீட்டுகள் இதற்கு முன்னர் மும்முறை இந்தியாவிலிருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப் பட்டிருந்தது. அப்போதும் பாபுபாய் இதேபோல வேறு வேறு நபர்களைக் கடத்தினாரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த செயலுக்காக திரு பாபுபாய் 35 இலட்சம் ரூபாய் அன்பளிப்புப் பெற்றுள்ளார் என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் AI-184 ஏர் இந்தியா விமானம் முலம் டொராண்டோ செல்லத் தயாராக இருந்தார்கள்.

பின்னர் டெல்லி காவல்துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 419, 422, 468, 471 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மக்களவை உறுப்பினர் ஒருவர் இவ்வாறு மனிதக்கடத்தல் (Human Trafficking) வேலையில் ஈடுபடுவது இது முதன்முறையன்று. இதற்கு முன்னர் இராஜஸ்தான் மாநிலம் பயானா தொகுதியைச் சேர்ந்த முன்னாள் பாஜக மக்களவை உறுப்பினர் கங்காராம் கோஹ்லி ஒன்பது நபர்களை நெதர்லாந்து நாட்டுக்குக் கடத்தியிருப்பதாகவும் அவர்கள அனைவரும் அங்கு சென்றபின் காணாமல் போய் விட்டதாகவும் CBI விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே மதவெறியூட்டி தேர்தல் ஆதாயம் தேட முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பாஜக, உடனடியாக திரு பாபுபாயைக் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்வதாகக் கூறியுள்ளது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.