
“மறைந்தார் அப்துல் ஜப்பார் … போபால் இருண்ட பக்கத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு ஒளி தந்தவர்”
கடந்த சில நாட்களாக இந்திய ஊடகங்ளில் இடம்பெற்ற போபால் நகர்வாசியும் யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்ட வீரருமான அப்துல் ஜப்பார் என்பவரைப் பற்றி அறிந்துகொள்வோம்:
இந்திய நாட்டின் வரலாற்றில் பல்வேறு இருண்ட பக்கங்களில் ஒன்று போபால் விஷவாயுத் துயரம். அந்த இருண்ட பக்கத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர் அப்துல் ஜப்பார். 32 வருடங்கள் ஆகியும் போபால் துயரம் தீராத நிலையில், அப்துல் ஜப்பாரின் (14.11.2019) மரணம் பாதிக்கப்பட்ட போபால் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது! உலகம் சந்தித்த எத்தனையோ மோசமான சூழலில் மறக்க முடியாத ஒன்று போபால் விஷவாயுத் துயரம்.
1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் தேதி இரவு முதல் விடிகாலை வரை நடந்தது அக்கொடுந்துயரம். ‘மீதைல் ஐசோ சயனடைடு’ இதுதான் அந்த எமவாயுவின் பெயர்! ‘யூனியன் கார்பைடு’ என்ற மிகப்பெரிய பூச்சிக் கொல்லி நிறுவனத்தில் இருந்து விஷக்காற்று சப்தமின்றி வெளியேறி, தூங்கிக் கொண்டிருந்தவர்களை அப்படியே பரலோகம் கொண்டு போய்விட்டது. விழித்துக் கொண்ட மக்களை இரவோடு இரவாக அலறி அடித்து ஓடச் செய்தது. மூக்கைத் துளைத்து உள்ளே புகும் வாசம்; மூளைக்கு ஏறும் விஷ நெடி; கும்மிருட்டில் ஒரு புகை மண்டலம்; சுற்றி என்ன நடக்கிறது? எந்தப் பக்கம் ஓடுவது என்றே தெரியாமல் மக்கள் திணறி விழித்தனர்.
கண் பார்வை
அவர்களுள் அப்துல் ஜப்பார் என்ற 27 வயது இளைஞரும் ஒருவர். தான் தப்பித்து ஓடுவதற்காக இல்லை, தன் அம்மாவை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்பதற்காகத்தான். ஸ்கூட்டரில் உட்காரவைத்து, 40 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ‘உபைதுல்லா கஞ்ச்’ என்ற இடத்தை அடைந்துவிட்டாலும், துரத்தி கொண்டே வந்த போபால் துயரம், அப்துல் ஜப்பாரின் அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோரை அபகரித்துக் கொண்டதுடன் ஜப்பாரின் கண் பார்வையையும் பறித்துக் கொண்டு போனது.
விஷவாயு
போபாலுக்கு ஜப்பார் வந்த சமயம், கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேரின் மரணக் குவியல்களும், ஒப்பாரி ஓலங்களும், மரணத் தருவாயில் இழுத்துக் கொண்டிருக்கும் உயிர்களும் கண்டு உறைந்து நின்றார். பாதிக்கப்பட்டவர்களைத் தன்னால் முடிந்த அளவு ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்த்தார். ஏன் பிணங்களைக்கூட ஆஸ்பத்திரியில் கொண்டு போய் ஒப்படைத்தார். ஆனால், நாள் ஆக.. வாரம் ஆக.. மாதம் ஆக.. பல உயிர்கள் ஒவ்வொன்றாகச் சரிந்தன. 8,000 பேர் விஷவாயுவினால் காவு வாங்கப்பட்டனர். உடலில் என்னென்ன உறுப்புகள் உள்ளதோ அவ்வளவு உறுப்புகளையும் விஷவாயு அரிக்கத் தொடங்கியது.
போராட்டம்
இப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடுவது என முடிவெடுத்தார் ஜப்பார். ஊரில், தெருவில், முச்சந்தியில் போராட்டங்கள் வலுவாயின. “யூனியன் கார்பைட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் எங்களைக் கைவிட்டுவிட்டார்கள். எங்களுக்கான போராட்டம் இது” என்று சொல்லித்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
இழப்பீடு
“கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதை விடுத்து, இந்தப் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு இழப்பீடும் நீதியும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். உயிரிழந்தவர்களுக்காகவும் உயிர்பிழைத்தவர்களுக்காகவும், நீதி, நிவாரணம் கிடைக்க ‘போபால் கேஸ் பீடிட் மஹிலா உத்யோக் சங்காதன்’ என்ற அமைப்பை ஜப்பார் தொடங்கினார்.
பேரணிகள்
1987ஆம் ஆண்டு, “போபால் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கம்” என்ற அமைப்பை ஆரம்பித்தார். இந்த அமைப்பின் மூலம் ஜப்பார் செய்த நன்மைகளைப் பட்டியலிட்டாலும் மாளாது. “எங்களுக்கு எதற்குக் கருணை? வெறும் பணத்தைப் புரட்டி எத்தனை பேருக்குத் தர முடியும்? எவ்வளவு நாள் தர முடியும்? வேலை வாய்ப்பு ஒன்றே இதற்குத் தீர்வு” என்ற உறுதியான கொள்கையை சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தார் ஜப்பார். அவர் நடத்திய எதிர்ப்புப் பேரணிகள் நாடாளுமன்றத்தை அன்றே புரட்டி போட்டன.
இழப்பீடு
1989ஆம் ஆண்டு, யூனியன் கார்பைட் நிறுவனம், பாதிக்கப்பட்ட 1 லட்சம் பேருக்கு இழப்பீடு அளித்தது. இறுதியில், ஜப்பாரின் விடாத சட்டப்போராட்டத்தின் மூலம் 5 லட்சம் பேருக்கு சுப்ரீம் கோர்ட் இழப்பீடு வழங்கியது. யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக ஏறத்தாழ 35 ஆண்டுகள் போராடிய ஜப்பாரால், பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேருக்கும், இறந்த 25 ஆயிரம் பேருக்கும் இழப்பீடு பெற்றுத்தரவும் முடிந்தது.
விஷவாயு
இது வெறும் கோர்ட் சமாச்சாரம் என்று மட்டும் நினைத்து ஒதுங்கிவிடவில்லை ஜப்பார். சொந்தமாக ‘சுயமரியாதை நிலையம்’ என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தந்தார். இப்போது ஜப்பாரின் புண்ணியத்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டில் அடுப்பெரிகிறது!
அவமானம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடம்பு சரியில்லாமல் போனது. போபால் நினைவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். “இந்த ஆஸ்பத்திரியில் சரியான வசதிகள் இல்லை. ரொம்பவும் அலைக்கழிக்கிறார்கள். ஒரு அரசு ஆஸ்பத்தியில் இப்படி அடிப்படை வசதி இல்லாதது அவமானமா இருக்கு” என்று நண்பர்களிடம் ஜப்பார் வருத்தத்துடன் சொல்லி உள்ளார்.
கருப்புத் துயரம்
என்றாவது ஒருநாள் அநீதிக்கு முறையான நீதி கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டே காத்திருந்து, சென்ற வியாழக்கிழமை (14.11.2019) மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் ஜப்பார். தன்னுடைய 62 வயது வரை போபால் மக்களுக்கான போராட்டத்தை அவர் முடித்துக் கொள்ளவே இல்லை. நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய கருப்புத் துயரத்துக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் கடைசி வரை நீதி கேட்டுப் போராடி, அது கிடைக்காமலேயே உயிரைவிட்டுவிட்டார் “ஜப்பார் பாய்”!
நன்றி : ஒன் இண்டியா
யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் முதன்மை அதிகாரி வாரன் ஆண்டர்சன் இவ்வழக்கின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படுவார் என நாடே எதிர்பார்த்த நிலையில், பிணையில் அமெரிக்கா சென்றவர் திரும்பி வரவேயில்லை. இழப்பீடு குறித்து வாய் திறக்காத அமெரிக்கா, ஆண்டர்சனுக்கு ஆதரவாக இருந்தது. அவர் கடந்த 2014-ல் உயிரிழந்தார்.