அல்ஜஸீராவுக்கு இந்தியாவில் தடை!

லக அளவில் பக்கச்சார்பு இல்லாமல், துணிச்சலுடன் களத்திலிருந்து நேரடியாக  நடுநிலையுடன் செய்திகள் தந்து தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அல்ஜஸீரா அரபு தொலைக்காட்சியின் ஆங்கில ஒளிபரப்பு உலகளாவிய அளவில் சமீபத்தில் தொடங்கியது அனைவரும் அறிந்ததே.

இந்தியாவின் சில பகுதிகளில் இந்த ஒளிபரப்புத் தெரிந்தாலும், இந்தியா முழுவதும் தனது ஆங்கில ஒளிபரப்பைத் தெரியுமாறு செய்யும் துணைக்கோள் அலைவரிசையை அனுமதிக்க முறையான அனுமதி கோரி அல்ஜஸீரா இந்தியத் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது.

இந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்க மறுத்த இந்திய அரசு, “பாதுகாப்புக் காரணங்களுக்காக” இந்த ஒளிபரப்புக்கு அனுமதி அளிக்க மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதைக்குறித்து அதிருப்தி தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. சீதாராம் யச்சூரி, “இந்தத் தடை முழுக்க அமெரிக்க நிர்ப்பந்தத்தால் வந்தது” என்று தெரிவித்தார். “பாதுகாப்புக் காரணங்கள் உண்மை என்றால், இந்தத் தடைக்கான உண்மையான அந்த பாதுகாப்புக் காரணங்களை இந்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சென்ற ஆண்டு இதே போன்று அறிவிக்கப்படாத தடை ஒன்றைக் குறித்த கேள்விக்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சர் திரு பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி,  “தொலைக்காட்சிகள் முறையான அனுமதி கோரி அனுமதித்தாலேயே அது குறித்து கருத்துச் சொல்லப்படும்” என்று பதிலளித்ததைத் தொடர்ந்தே அல்ஜஸீரா இந்த அனுமதிக் கோரிக்கை வைத்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

அரபு மொழியிலான அல்ஜஸீரா ஒளிபரப்பு எவ்வித தடையும் இன்றி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில், அதன் ஆங்கில ஒளிபரப்பிற்கு மட்டும் போடப்பட்டிருக்கும் இத்தடை பல்வேறு சந்தேகங்களை மத்திய காங்கிரஸ் அரசின் மீது ஏற்படுத்துகின்றது.

இதை வாசித்தீர்களா? :   ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?