பண மதிப்பு நீக்க அறிவிப்பும், விடை கிடைக்கா கேள்விகளும்..!

Share this:

ந்த ஆண்டில் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்த பிரச்சினைகளில் மிக முக்கியமானது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எனக் காரணம் சொல்லி, நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் தோன்றி, அதிக மதிப்புக் கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

“இது மக்களுக்குப் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் மக்கள் இன்னல்களை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் எளிதாகப் பணத்தை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (நவம்பர் 11ம் தேதி) முதல் ஏடிஎம் மையங்களில் பண வழங்கல் சீராகும்”  என அரசு அறிவித்தது. ஆனால் ஒரு வாரத்துக்குப் பின்னர் நிலைமை சீரடையவில்லை. மாறாக மோசமான சூழலை எட்டியிருந்தது.

4,5 நாட்கள்… 50 நாட்களானது !

புதிய நோட்டுகள் கிடைக்கப்பெறவில்லை. பெருநகரங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் வந்தாலும் அதை ஏ.டி.எம். இயந்திரங்களில் வைக்க முடியவில்லை. இதனால் பணப்புழக்கம் முடங்கியது. அதன் பின்னர், “நிலைமை சீரடைய 50 நாட்கள் ஆகும்” என அறிவித்தார் பிரதமர் மோடி. சில தினங்களில் நிலைமை சீரடையும் எனச்சொன்னவர்கள், இப்படித் திடீரென 50 நாட்கள் ஆகும் என அறிவித்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“புதிய நோட்டுகளைப் புழக்கத்துக்குவிட்டிருப்பது மிகப்பெரிய நடவடிக்கை. இதனால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களைச் சீர்செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. உங்களிடம் நான் 50 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளேன். அதற்குள் நிச்சயம் உங்கள் சிரமம் முழுமையாய்ப் போக்கப்படும்” என தெரிவித்திருந்தார் மோடி. அதையும் மக்கள் நம்பினார்கள்.

இப்போது அவர் சொன்ன 50 நாட்களை நாம் கடந்து விட்டோம். ஆனால் நிலைமை சீரடையவில்லை. இந்த 50 நாட்களில் மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 105 சாமானியர்கள் வங்கி முன் பணம் எடுக்க வரிசையில் காத்திருந்து உயிரிழந்திருக்கிறார்கள். தொழில் நகரங்கள் முடங்கி, தொழிலாளர்கள் சொல்ல முடியாத சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வங்கிகளில் கால் கடுக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள். வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலுமே ‘பணமில்லை’ என அறிவிப்பு வைக்கும் மோசமான சூழல் ஏற்பட்டது.

இதையெல்லாம் யோசிக்கவே இல்லையா?

4,5 நாளில் பிரச்சினை சீராகும் எனச் சொல்லப்பட்டது. பின்னர் 50 நாட்கள் என்றார் மோடி. இப்போது 50 நாட்களும் கடந்து விட்டன. இன்னும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலான ஊர்களில் கிடைக்கவில்லை. வங்கிகளில் பணம் கிடைப்பதே பெரும் பாடு. அப்படி கிடைத்தாலும் அது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகத்தான் கிடைக்கும்.  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு நீங்கள் எதையும் வாங்க முடியாது. அப்படி வாங்க வேண்டும் என்றால் அதில் 75 சதவீதத்துக்கு மேல் உங்களின் செலவு இருக்க வேண்டும். அதாவது 1,500 ரூபாய்க்கு மேல் நீங்கள் ஏதாவது பொருளை வாங்கினால் தான் உங்களுக்குச் சில்லறை கிடைக்கும் என்ற நிலை தான் நீடிக்கிறது.

கருப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுப்பது, ஊழல் ஒழிப்பு எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அறிவிக்கப்பட்டு 50 நாட்களாகியும் இன்னும் மக்களின் பாதிப்புச் சீராகவில்லை என்பது அரசின் மிக  மோசமான திட்டமிடலையே காட்டுகிறது. ஏன் இப்படி மோசமான சூழல் உருவாகிறது என்பதைப்பற்றி விசாரித்த போது, மிக அடிப்படையான விஷயங்களை எல்லாம் யோசிக்காமலா இவ்வளவு பெரிய விஷயத்தை செய்தார்கள்? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன்னர், அது தொடர்பாக அமைச்சரவை விவாதிக்க வேண்டும். அதில் அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அதெல்லாம் நடந்ததா என சந்தேகம் கொள்ள வைக்கிறது அரசின் செயல்பாடுகள். மத்திய அரசின் இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியடைந்து விட்டதாக விமரிசனங்கள் எழத்துவங்கிவிட்டன. கருப்புப் பணம் என எதுவும் ஒழிந்ததாகத் தெரியவில்லை. ஊழல் ஒழியும் சாத்தியமும் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னர் எதற்குத்தான் இந்த நடவடிக்கை?

புதிய நோட்டுகள் புழக்கத்தில் விட முடியுமா?

அதிகப் புழக்கத்தில் உள்ள பெரு மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுகளை நாம் செல்லாது என அறிவிக்க இருக்கிறோம் என்கிற போது அதில் உள்ள சிக்கலை யோசித்திருக்க வேண்டாமா? அதில் முதல் பிரச்சினை புதிய நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது.

இந்தியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 86 சதவீதம், 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான். எண்ணிக்கையில் சொல்ல வேண்டும் என்றால் சுமார் 2,400 கோடி நோட்டுகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். மீதமுள்ள 14 சதவீதம் மட்டுமே அதாவது சுமார் 400 கோடி நோட்டுகள் மட்டுமே 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள்.

2,400 கோடி நோட்டுகளைச் செல்லாது என அறிவித்துவிட்டதால், அத்தனை நோட்டுகளையும் ஒரே நேரத்தில் அச்சடித்துவிட முடியாது. ரிசர்வ் வங்கியில் ஒரு மாதத்திற்கு 300 கோடி ரூபாய் நோட்டுகளைத்தான் அச்சிட முடியும். அப்படியென்றால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 2,400 கோடி நோட்டுகளுக்குப் பதில் புதிய நோட்டுகளைப் புழக்கத்தில் விட 8 மாதங்களோ, அதற்கு மேலோ தான் ஆகும் என்கிறார்கள்.

அதனால் தான் இன்று வரை பெருநகரங்கள் தவிர மற்ற நகரங்கள் ஏ.டி.எம்.கள் மூடிக்கிடக்கின்றன. வங்கிகள் பணமில்லாமல் இருக்கின்றன. பெருநகரங்களிலேயே ஏ.டி.எம்.கள் திறப்பது என்பது அபூர்வமான செயலாக மாறிப்போய் விட்டது. புதிய நோட்டுகளைப் புழக்கத்தில் விட எத்தனை நாள் ஆகும் என்பதைக்கூட யோசிக்காமல் தான் அரசு இதை செய்ததா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

புதிய ரூபாய் நோட்டும், ஏ.டி.எம். இயந்திரமும்…

அடுத்து ஏ.டி.எம். சிக்கல். செல்லாது அறிவிப்பின் தொடர்ச்சியாக, ‘நவம்பர் 9, 10ம் தேதிகளில் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டிருக்கும். 11ம் தேதி ஏ.டி.எம். மையங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்’ என அரசு அறிவித்தது. ஆனால் அறிவித்துப் பல நாட்களாகியும் ஏ.டி.எம். திறக்கப்படவுமில்லை; புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கவும் இல்லை. ஏன் என்று விசாரித்தால், “புது நோட்டுகள் ஏ.டி.எம். இயந்திரங்களில் பொருத்த முடியாது. அதற்கு ஏ.டி.எம். இயந்திரங்களின் சாஃப்ட்வேர், ஹார்டுவேரில் மாற்றங்கள் செய்ய வேண்டும்” என பதில் வந்தது. புதிய ரூபாய் நோட்டுகளை அளவில் சிறியதாக, விரும்பிய நிறத்தில், விரும்பிய எழுத்தில் பொறுமையாக வடிவமைத்தவர்கள், இந்த நோட்டுகள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பொருந்துமா என யோசிக்காமல் போனது ஆச்சரியமளிக்கிறது. இது ஏன் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.

கருப்புப் பணம் ஒழியுமா?

கருப்புப் பண ஒழிப்பு தான், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குச் சொல்லப்பட்ட முதல் காரணம். ஆனால் இதுவும் சாத்தியமில்லை என்றே சொல்கிறார்கள். “நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் மதிப்பு என்பது 15 லட்சத்து 44  ஆயிரம் கோடி ரூபாய். பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், இதில் கணிசமான அளவு பணம், அதாவது பதுக்கப்பட்ட கருப்புப் பணம் ஒழியும் எனச் சொன்னது அரசு. இப்போதையை நிலையில் கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ரூபாயும் வங்கி கணக்கில் வந்து சேர்ந்து விடும். அதாவது கருப்புப் பணம் என மிக மிகச் சொற்பப் பணம் அடையாளம் காணப்பட்டாலே ஆச்சரியம் தான்,” என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

கருப்புப் பணம் ஒழியும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதற்கு மாறாக பல தொழிலதிபர்கள் வீடுகளில் கட்டுக் கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதில் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்தவர்களும் அடக்கம். அதே நேரத்தில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க வங்கி முன் பல மணி நேரம் காத்திருந்து உயிர் விட்ட சாமானியர்களும் இருக்கிறார்கள் என்பது தான் வேதனை. இவை எல்லாம் நிகழ வாய்ப்பிருக்கும் என்பதை அரசு யூகிக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. உண்மையில் இந்தத் திட்டத்தால் கருப்புப் பணம் ஒழிந்ததா, ஒழிக்கப்படுகிறதா என்பதற்கு இன்று வரை பதில் இல்லை.

கள்ள நோட்டு, ஊழல் ஒழிப்பு சாத்தியமா?

கருப்புப் பணம் பெருமளவு மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்து வந்த போது, செல்லாது அறிவிப்புக்குச் சொன்ன இன்னும் இரு காரணங்கள் கள்ள நோட்டு, ஊழல் ஒழிப்பு. “கள்ள நோட்டுகளின் அளவு என்பது மிகக் குறைவு. அதற்காக இவ்வளவு பெரிய நடவடிக்கையா? அதுமட்டுமில்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுக்குக் கள்ள நோட்டை அச்சிடுபவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு ஏன் அச்சிடமாட்டார்கள்?” என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. அதேபோல் “1000 ரூபாயாக இருந்த போது லஞ்சமாக வாங்கி ஊழல் செய்து பணத்தைப் பதுக்கியவர்கள். தற்போது அதற்கு பதில் 2 ஆயிரம் ரூபாயாக கிடைக்கும் போது இன்னும் எளிதாகப் பெரு மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுகளை லஞ்சமாகப் பெறவும், எளிதில் பதுக்கவுமே வாய்ப்பாக அமையும். எப்படி ஊழல் ஒழியும்?” என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

பணமில்லாச் சமுதாயம் இந்தியாவில் சாத்தியமா?

கருப்புப் பணம் ஒழிய வாய்ப்புக் குறைவு, கள்ள நோட்டு, ஊழலை நிச்சயம் இந்தத் திட்டம் ஒழிக்காது எனச் சொல்லப்பட, செல்லாது அறிவிப்புக்குச் சொல்லப்பட்ட மற்றொரு காரணம் பணமில்லாச் சமூகத்தை உருவாக்குவது. இதற்கும் வாய்ப்பு இல்லை என்றே பொருளாதார வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

“இந்தியாவில் 97 சதவீதம் பரிவர்த்தனை, பணத்தின் மூலமாகவே நடக்கிறது. இந்தச் சூழலில் திடீரென பணமில்லா சமுதாயத்தை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை. 97 சதவீதம் பணப் பரிவர்த்தனையை அதிகபட்சம் 80 சதவீதம் வரை குறைக்கலாம். ஆனால் பணமில்லாச் சமூகமாக எப்படி மாற்ற முடியும்?” என்ற கேள்வி வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டது.  ஏழைகள் இல்லாத நாடு என சொல்லப்படும் ஜெர்மனியிலேயே பணப்பரிவர்த்தனை என்பது 75 சதவீதத்துக்கும் அதிகம். அப்படியிருக்க வளர்ந்து வரும், ஏராளமான ஏழைகளைக் கொண்ட இந்தியாவில் பணமில்லாப் பரிவர்த்தனை என்பது சாத்தியமே இல்லை. அப்படியே அதை நோக்கிய பயணத்தைத் துவங்கினாலும், அதற்கும் செல்லாது அறிவிப்புக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள். இதற்கும் அரசிடம் இருந்து பதில் இல்லை.

நவம்பர் 8ம் தேதி முதல் இன்று வரையிலான இந்த 50 நாட்களில் மக்கள் சந்தித்த பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 105 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பல திருமணங்கள் நின்று விட்டன. மருத்துவ செலவுகளுக்குக்கூட பணமில்லாமல் ஏராளமானோர் தவித்தனர். தொழில் முடக்கத்தால் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவித்தனர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு சாமானியன் வங்கியில் கால் கடுக்க நின்று கொண்டிருந்த போது, கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் தொழிலதிபர்களின், அரசியல் பிரமுகர்களின்  வீடுகளில் இருந்தன. தொழில் முடங்கியதால் தொழிலாளர்களும், சாமானியர்களும் வருத்தப்பட்டிருந்த போது, விஜய் மல்லையாவுக்கு 1201 கோடி ரூபாய் கடனை, கணக்கில் இருந்து நீக்கியது எஸ்.பி.ஐ. வங்கி. பணமில்லாமல் ஏழை, நடுத்த திருமணங்கள் நிறுத்தப்பட்ட நேரத்தில் தான், பி.ஜே.பி. பிரமுகர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் 650 கோடியில் நடந்தது.

எல்லோருக்குமாக அல்லாமல், இந்த 50 நாட்கள் சாமானியர்களுக்கு மட்டும் சோதனை தந்து சென்றிருப்பது தான் ஆச்சரியம்.

நன்றி : விகடன்.காம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.