
அன்றாடவாழ்க்கையில் ஒருவர் பயன்படுத்தி வரும் பேட்டரி, வாட்ச், லேப்டாப் ஆகியவற்றை கைவசம் வைத்திருந்து, காவல்துறையிடம் பிடிபட்ட நபர் “முஸ்லிம்” எனில் அவர் அந்த நொடியிலேயே பயங்கரவாதியாகவும், வாயில் நுழையாத ஒரு அரபிப் பெயர் கொண்ட ஏதேனும் இயக்கத்துடன் வலிய தொடர்பு படுத்தப்பட்டு, இந்தியாவின் இன்னின்ன நகரங்களைத் தகர்க்க சதியா? என்று ஊடகங்கள் பீதி ஆய்வு செய்து TRP யோடு சேர்த்து மக்களின் BP ஐயும் அடிக்கடி ஏற்றுவது வாடிக்கை!
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள், நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உணர்ந்து, பொறுப்புடன் நேர் வழிகாட்டி நடத்திச் செல்பவையாக இருக்க வேண்டுமேயொழிய, அசத்தியத்திற்கு துணை செல்லக் கூடாது.
ஆனால், ஊடகங்களின் ஊகங்களும்கூட ஓட்டு வியாபாரிகளைப் போன்றே மதச் சார்பு நிலையைக் கடைபிடித்து வருவது, இந்தியாவை பிடித்திருக்கும் சாபம்!
மும்பை தானே-யில், டாம்பிவாலி நகர பாஜக-வின் துணைத் தலைவர் தனன்ஜெய் குல்கர்னி என்பவரின் கடை மஹாவீர் பகுதியில் உள்ளது. பயங்கரவாத ஆயுதங்களை இவர் விற்பனை செய்து வருவதாக வந்த புகாரின் பெயரில், கடந்த ஜனவரி 15, 2019 ஆம் தேதியன்று சுவாரஸ்யம் இன்றி சோம்பலாகச் சென்று சோதனையை ஆரம்பித்த குற்றப் பிரிவு காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.
பல்வேறு ரகங்களில் நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கொலைகாரக் கத்திகள் உட்பட, மூட்டை மூட்டையாக நாசகார ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையிலேயே இத்தகைய பயங்கரவாத ஆயுதங்களை நீண்ட காலமாக விற்பனை செய்து வருவதை இவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதுவரை இந்தியாவில் எத்தனை இடங்களில் இவர் மூலம் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றுள்ளன என்பது, காவல்துறையின் அடுத்த கட்ட விசாரணையில் தெரியவரும்.
சட்டவிரோதமாக நாசகார ஆயுதங்களை வைத்திருக்கும் The Arms Act, 1959 இன் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதியப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது! எம்மதமும் பயங்கரவாதத்தைப் போதிப்பது கிடையாது! தீவிரவாதமும், வன்முறையும் மதத்தின் பெயரால்தான் அரங்கேறுகின்றன என்பதில் எவருக்கும் ஐயமில்லை.
செய்தித் தாள்களில் வருவது மட்டுமே உண்மை என்று கோலொச்சிக் கொண்டிருந்த காலம் மலையேறி, மறைக்கப்படும் செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலம் அறியப்பட்டு மக்களின் அறியாமை அகன்று கொண்டிருக்கும் கால கட்டம் இது. அவ்வகையில், நிகழ்வுகளை அப்பட்டமாக மூடி மறைக்காமல், செய்தி எனும் அளவிலாவது வெளிக் கொண்டு வரும் ஊடக நிறுவனங்களுக்கு நன்றி!
நாம் இப்போது கேள்விக்கு வருவோம்!
ஒரு நாசகாரச் செயல் நடந்தவுடன் அதனை பெரிதுபடுத்தி பரபரப்புக்குள்ளாக்கி லாபம் பார்க்க எண்ணும் ஊடகங்கள் கூட, கையும் களவுமாக பிடிபட்டவர் பாஜக / RSS இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்த நொடியில் செய்தியில் பதத்தை மாற்றிப் பம்முவது ஏன்?
மாட்டின் பெயரால் படுகொலை செய்தவரை “பசு பாதுகாவலர்” என்றும்…
பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பவரை “பிரமுகர்” என்றும்…
தீவிரவாதத்தில் ஈடுபட்டவரை “நபர்” என்றும்…
வன்முறையில் ஈடுபட்டவரை “தொண்டர்” என்றும்…
யாரையோ திருப்திப் படுத்த வெகு ஜாக்கிரதையாகத் தலைப்பிடும் ஊடகங்கள், ஜனநாயத்தின் தூண்கள் என்று சொல்லிக் கொள்ள இனி வெட்கப் படட்டும்!
-அபூஸாலிஹா
ஊடகங்களில் வெளியான செய்திகள்:
https://www.ndtv.com/cities/swords-guns-knives-seized-from-bjp-workers-shop-in-thane-1978726