
ஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:
குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால் குரான் 13 வருடங்களாக சிறுகச் சிறுகவே இறங்கியது என்று படித்துள்ளேன். அப்படி இருக்க ரம்ஜான் என்பது துவங்கிய மாதமா அல்லது வந்து முடிந்த மாதமா? – (மின் மடல் மூலம் சகோதரர் சம்பத்)
தெளிவு:
அன்புச் சகோதரர் சம்பத் அவர்களே,
“இக்குர்ஆன் உலக மாந்தர் அனைவருக்கும் ஓர் நேர்வழிகாட்டியே அன்றி வேறில்லை” எனத் திருமறை குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான். அந்த வகையில் திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் தான் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் நிலவும் சூழலில், அது எங்களுக்கும் உரியது தான் என்ற கருத்து தொனிக்க உரிமையுடன் அதில் எழுந்த சந்தேகத்தைக் குறித்து இங்கு கேள்வி எழுப்பிய தங்களின் ஆர்வத்திற்கு நன்றி! நாம் நேர்வழியில் என்றென்றும் நிலைத்திருக்க உதவி இறைவன் புரிவானாக!
திருக்குர்ஆன் நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு 23 வருட காலமாக அருளப்பட்டதாக இருக்க ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் இறங்கியதாக முஸ்லிம்கள் கருதுவதில் தங்களுக்கு எழுந்த சந்தேகம் நியாயமானதே!
நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் 40 ஆவது வயதிலிருந்து அவர்கள் மரணித்த அவர்களின் 63 ஆவது வயது வரை சுமார் 23 வருடங்களாக சிறுகச் சிறுக காலச் சூழல்களுக்குத் தக்கவாறு திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது உண்மை தான்.
அதே போன்று சகோதரர் சம்பத் அவர்களுக்கு சந்தேகம் வந்த,
“தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! ‘இதை’ பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் அருளினோம் ” (அல்குர்ஆன் 044:002,003)
என்ற திருக்குர்ஆன் வசனம் கூறுவதும் உண்மையே. இவ்வசனத்திற்கு ரமலான் மாதத்தின் பாக்கியமிக்க அந்த லைலத்துல் கத்ர் இரவில், தற்போதைய முழு புத்தக வடிவிலான குர்ஆன் முழுமையும் அவ்வோர் இரவிலேயே அருளப்பட்டதாக அர்த்தம் கொண்டதாலேயே சகோதரருக்கு இச்சந்தேகம் வந்துள்ளது.
ஆனால் இவ்வசனத்தின் பொருள் அவ்வாறன்று. இங்கு குறிப்பிடப்படும் ‘இதை’ என்ற ‘திருக்குர்ஆன்’ வார்த்தை சுட்டுவது முழுக்குர்ஆனை இல்லை. அவ்விரவில் முதன்முதலாக இறக்கப்பட்ட திருக்குர்ஆனின் சில வசனங்களையே இவ்வசனம் சுட்டுகின்றது.
எவ்வாறு முழுக்குர்ஆனை திருக்குர்ஆன் என்கின்றோமோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களையும் குர்ஆன் என்றே திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான்.
இதற்குச் சில உதாரணங்களை திருக்குர்ஆனிலிருந்தே காணலாம்:
குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்விகள் கேட்டால் … (அல்குர்ஆன் 005:106)
இந்தக் குர்ஆன் எனக்கு வஹீயாக – அருளப்பட்டது … (அல்குர்ஆன் 006:019)
இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை… (அல்குர்ஆன் 010:037)
மேற்கண்ட இந்த வசனங்களெல்லாம் அருளப்பட்ட நேரத்தில் மொத்தக் குர்ஆனும் முழுமையாக அருளப்பட்டிருக்கவில்லை. ஆயினும் மேற்கண்ட வசனங்களைப் போல் குர்ஆனின் பல இடங்களில், அதுவரை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டிந்த வசனங்களை குர்ஆன் என்றே இறைவன் குறிப்பிட்டுகிறான் . இதிலிருந்து திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் குர்ஆன் என்ற பொருளையே உணர்த்துவதை அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் திருக்குர்ஆன் (ரமளான் மாதத்தின்) “பாக்கியமிக்க இரவில் அருளப்பட்டதாக” குறிப்பிடும் அந்த வசனத்தை, “(ரமளான் மாதத்தின்)பாக்கியமிக்க இரவில் (திருக்குர்ஆன்) வசனம் அருளத்துவங்கியதாகவே” பொருள் கொள்ள வேண்டும்.
திண்ணமாக, நாம் இ(ந்த மறையை அருளுவ)தை மாண்புறு இரவொன்றில் அருளி(த் தொடங்கலா)னோம். (அல்குர்ஆன் 097:001)
எனவே குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது என்பது, குர்ஆன் 23 ஆண்டு காலமாகச் சிறுகச் சிறுக அருளப்பெற்றது என்பதற்கு முரணானக் கருத்து இல்லை. நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் 40 ஆவது வயதில் ரமலான் மாதத்தில், குர்ஆனின் ‘அலக்’ என்ற 96வது அத்தியாயத்தின் முதல் 5 வசனங்கள் முதன்முதலாக அருளப்பட்டது. இவ்வாறு ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கப்படத் துவங்கியதையே இறைவன், “பாக்கியமிக்க (ரமலான் மாத)இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக்” குறிப்பிடுகின்றான். ஆரம்பத்தில் ஐந்து வசனங்கள் மட்டுமே அருளப் பட்டிருந்த சூழலில், வசனங்களும் ‘குர்ஆனையே குறித்து நிற்பதால் ரமளான் மாதத்தில் குர்ஆன் இறங்கியது என்பதில் எவ்வித முரணுக்கும் இடமில்லை!
(இறைவனே மிக்க அறிந்தவன்)