குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-4)

ஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா? மன்னிப்பானா? எது சரி?
•மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)
•மன்னிப்பான் (4:153, 25:68-71)

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3

தெளிவு:

”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான். அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (அல்குர்ஆன், 4:48,116)

”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.” (அல்குர்ஆன், 4:116)

லுக்மான் தம் புதல்வருக்கு, நல்லுபதேசம் செய்யும் போது ”என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (அலகுர்ஆன், 31:013)

”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.” (அல்குர்ஆன், 5:72)

ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயல்கள் அனைத்தும் பெரும் பாவம், வழிகேடு, மாபெரும் அநீதி என இறை வசனங்கள் குறிப்பிடுகின்றது. இறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரும் மன்னிக்கப்பட மாட்டார்; இணை கற்பித்தவருக்கு சொர்க்கம் விலக்கப்பட்டுள்ளது என்பதும் இறைவாக்கு.

முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என எவ்வித பாகுபாடின்றி, இறைமறை வசனங்களும், நபிமொழிகளும் இறைவனுக்கு இணை வைப்பதைக் கடுமையாக எச்சரிக்கின்றன. இந்த எச்சரிக்கையை நபிமார்களுக்கும் இறைவன் அறிவித்திருக்கின்றான்

”(நபியே) நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன், 39:65,66)

இறைவனுக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டேன் எனக் கண்டிப்புடன் சில குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. இறைவனுக்கு இணை கற்பித்தலை மன்னித்தேன் என்றும் குர்ஆனில் வசனங்கள் உள்ளனவே, இவை முரண்பாடுதானே என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

ஒரே குற்றத்திற்கு மன்னிக்கமாட்டேன், மன்னித்தேன் என்கிற தீர்ப்பு முரணாகத் தோன்றினாலும், இரண்டும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உள்ளவையாகும். இறைவனுக்கு இணை கற்பித்து அதே நிலையில் மரணித்துவிட்டால், இணை வைத்ததற்கான பாவமன்னிப்புக் கோருவதற்கான அவகாசம் இல்லாமல் போய்விடும். இணை வைத்த பாவம் மன்னிக்காத குற்றமென இறைவன் அறிவித்திருப்பதால் இணை கற்பித்தலை மறுமையிலும் இறைவன் மன்னிக்க மாட்டான்.

இணைவைத்ததை மன்னித்தேன் என்று கூறுவது, உயிருடன் உள்ளவர்களுக்குக் கூறப்பட்டதாகும். மனிதன் தவறு செய்பவனே தவறிலிருந்து திருந்திக் கொண்டால் அதற்கான பாவமீட்சி உண்டு என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இணை கற்பித்தல் எனும் பெரும் பாவத்தைச் செய்திருந்தாலும் “வாழ்கின்ற காலத்திலேயே” பாவத்தைவிட்டு முற்றிலுமாக விலகி, மன்னிப்புக் கோரினால் அவற்றை மன்னிப்பதாக இறைவன் கூறுகின்றான். கேள்வியில் குறிப்பிட்டுள்ள குர்ஆன் 4:153வது வசனத்தில் மன்னித்தோம் என்று கூறுவது இந்த வகையைச் சார்ந்ததாகும்:

(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள், அதையும் நாம் மன்னித்தோம். இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம். (அல்குர்ஆன் 4:153)

இதை வாசித்தீர்களா? :   இஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும்

இதையொட்டிய மற்றொரு வசனம்:

இஸ்ரவேலர்களை நாம் கடல் கடக்கச் செய்தோம். பின்னர் அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்து வந்தனர். அவர்கள் தம் (கடவுள்) சிலைகளை வழிபடுவதில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ”மூஸாவே! இவர்களுக்குக் கடவுள் இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக” என்றனர். அதற்கு அவர் ”நீங்கள் அறியா மக்களாக இருக்கிறீர்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் 7:138)

கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது படையினரிடமிருந்தும் நபி மூஸா (அலை) அவர்களையும், அவரைப் பின்பற்றிய இஸ்ரவேலர்களையும் கடல் கடக்கச் செய்து இறைவன் காப்பாற்றினான். இதன் பின்னர், சிலை வழிபாடு செய்து கொண்டிருந்த கூட்டத்தாரைக் கடந்து செல்லும்போது, எங்களுக்கும் இதுபோன்ற கடவுள் வேண்டும் எனக் கூறி காளைக் கன்று உருவத்தில் சிலை வடித்து, சிலை வணக்கம் செய்தனர்.

நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருந்த, இறைவனுக்கு இணை கற்பிக்கும் சிலை வழிபாடுகளையே, செய்த தவறுக்குப் பாவமன்னிப்புக் கோரிய பின்னர், இறைவன் மன்னிக்கின்றான்.

மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை (வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:54)

4:153 வது வசனத்துடன், 25ம் அத்தியாயத்திலிருந்தும் 68-71 வசனங்கள் தொடரையும் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது அவற்றையும் காண்போம்:

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும், இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்கள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செயல்கள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார். (அல்குர்ஆன் 25:68-71)

இறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரது செயலையும் இறைவன் மன்னிக்கமாட்டான். இணை கற்பிக்கும் செயலுக்கு பாவமன்னிப்புக் கோராமல் அதே நிலையில் மரணித்துவிட்டால் தவ்பா செய்யும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் மறுமை நாளில் வேதனை செய்யப்படும். அந்த வேதனையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவார். வாழும் காலத்தில், இறைவனுக்கு இணைவைத்த செயலுக்கு தவ்பா – பாவமன்னிப்புக் கோரி, நற்செயல்கள் செய்தால் அவர் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடியவராவார் இதைத்தான் 25:68-71 வசனங்கள் விளக்குகின்றன.

இதை வாசித்தீர்களா? :   நோய்க் கிருமிகளும் வெறி நாய்களும்!

எடுத்துக் காட்டாக: இஸ்லாம் மீள் எழுச்சிப் பிரச்சாரம் தொடங்கியபோது சத்திய இஸ்லாத்தை ஏற்றவர்கள், இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் அறியாமையின் காரணியாக சிலை வழிபாடுகளில் மூழ்கியிருந்தனர். பின்னர், “இம்மையிலேயே” ஏக இறைவனை நம்பிக்கை கொண்டு இறைவனுக்கு  இணைவைத்த செயல்களுக்கு பாவமன்னிப்புக் கோரி, நல்லறங்கள் செய்வதையும் மேற்கொண்டதால் அவர்கள் “இம்மையிலேயே” சுவனவாசிகள் என்றும் இறைவன் அறிவிக்கின்றான்.

குர்ஆன் 4:48,116 வசனங்களில் ”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்…” என்று கூறுவது இணைவைத்த நிலையிலேயே மரணித்து விடுபவர்களுக்கு உள்ள எச்சரிக்கையாகும். 4:153 மற்றும் 25:68-71 ஆகிய வசனங்கள் கூறுவது, இறைவனுக்கு இணைவைத்தாலும் ஏக இறைவனை ஏற்று, வாழ்கின்ற காலங்களில் அதற்கான தவ்பாவை வேண்டினால் இணைவைத்த பாவம் மன்னிக்கப்படும் என்பது பொருளாகும். இருவகையான கருத்துக்களை உள்ளடக்கிய இருவகை வசனங்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கே பொருந்தும். ஆகவே, குர்ஆனில் முரண்பாடு இல்லை!

மேலும், மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் பாவமன்னிப்புக் கோருவதையும் இறைவன் ஏற்கமாட்டான். இதற்கு ஃபிர்அவ்னின் மரணத்தை முன்னுதாரணமாக இறைவன் கூறுகிறான்:      

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது) (அல்குர்ஆன் 10:90-92)

ஒருவர் மரணத்தின் வாயிலில் இருக்கிறார் என்று அறுதியிட்டு எவரும் கூற இயலாது. அனைத்தும் அறிந்த இறைவன், ஃபிர்அவ்ன் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது தவ்பா செய்ததை ஏற்கவில்லை என்பதை படிப்பினைக்காக அவனது அடியார்களுக்கு வரலாற்றைக் கூறுகிறான்.

அறியாமல் பாவம் செய்துவிட்டு விரைவிலேயே பாவமன்னிப்புக் கோருகின்றவர்களுக்குத் தான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கிடைக்கும். அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.

பாவங்கள் செய்துகொண்டே இருந்துவிட்டு, இறுதியில் இறப்பு நெருங்கும்போது ”நான் இப்போது பாவமன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறுகின்றவர்களுக்கும், இறைமறுப்பாளர்களாகவே மரணிப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்கு வதைக்கும் வேதனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:17,18)

(இறைவன் மிக்க அறிந்தவன்)