கடவுளை நம்மால் பார்க்க இயலுமா?

Share this:

இயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில்.

கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர்.

அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏழு வானத்திற்கு அப்பால் அழைத்துச் சென்று திரைமறைவில் உரையாடி அவர்களை சிறப்பித்து அனுப்பியிருக்கிறான். அந்த ஏகனை இம்மையில் பார்க்கும் சக்தி எவருக்கும் இல்லை. ஆனால் மறுமையில் திரையின்றி நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியத்தையும், நேருக்கு நேர் பேசும் பாக்கியத்தையும் சொர்க்கவாசிகளுக்கு அளிப்பேன் என்னும் வாக்குறுதியை அல்லாஹ் வழங்குகிறான். 

“அந்நாளில்(நியாய தீர்ப்பு நாளில்) சில முகங்கள் மகிழ்ச்சியுடனும் தமது இறைவனைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்.” (அல்குர்ஆன் 75:22,23)

“நிச்சயமாக அவர்கள் (நிராகரிப்பவர்கள்) தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 83:15)

மனிதன் இவ்வுலகில் செய்த நல்ல தீய செயல்களை குறித்து விசாரித்து இறைவன் தீர்ப்பு வழங்கும் மறுமை நாளில், நற்செயல்களை செய்து இறைவனிடமிருந்து பெறுதற்கரிய சுவர்க்கத்தைப் பெற காத்திருக்கும் சுவர்க்கத்துக்குரியவர்கள் இறைவனை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என மேற்கண்ட வசனம் தெளிவாக உணர்த்துகிறது.

மேலும் தீய செயலைச் செய்தவர்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள் என்பதையும் மேற்கண்ட வசனம் தெளிவிக்கிறது.

(அல்லாஹ்) அவனுக்கும் (அடியார்களுக்குமிடையே) ஒளித் திரையாக உள்ளது. அந்த ஒளித்திரையை அவன் அகற்றினால் அவன் திருமுகத்தின் ஜோதி அவன் பார்வை படும் படைப்பினங்களை எல்லாம் எரித்து விடும் என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள் (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் தூதரே! எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று நாங்கள் கேட்டோம். மேகத்தால் மறைக்கப்படாத சூரியனை நடுப்பகலில் காண்பதற்கு உங்களுக்குச் சிரமம் எதுவும் இருக்குமா? என்று திருப்பிக் கேட்டார்கள். ‘இருக்காது’ என்று நாங்கள் கூறினோம். இவ்விரண்டையும் காண்பதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படாது என்பது போலவே உங்கள் இறைவனைக் காண்பதில் சிரமப்பட மாட்டீர்கள் என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)

உங்களில் எவருடனும் உங்கள் இறைவன் பேசாமலிருக்கமாட்டான். அவனுக்கும் அவனது இறைவனுக்குமிடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்கள் என்றும் நபி-ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும். நரகவாசிகள் நரகத்தில் நுழைந்தவுடன் :

‘சுவனவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதை உங்கள் இறைவன் நிறைவேற்ற விரும்புகின்றான் என்று அழைப்பாளர் ஒருவர் கூறுவார். அதற்கு அவர்கள் ‘அது என்ன வாக்குறுதி? எங்கள் நன்மையின் எடையை அவன் அதிகப்படுத்தவில்லையா? எங்கள் முகங்கள் வெண்மையாக்கிவிடவில்லையா? எங்களை சுவர்க்கத்தில் நுழைக்கவில்லையா? நரகிலிருந்து எங்களை அவன் விடுவிக்கவில்லையா? (இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்) என்பர். உடன் இறைவன் திரையை விலக்குகிறான். அவனை அவர்கள் காண்பர். அவனைக் காண்பதை விடவும் விருப்பமான மகிழ்ச்சியான வேறு ஒன்றையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதில்லை’ என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள். (அஹமது, திர்மதி, இப்னுமாஜா)

இதிலிருந்து இவ்வுலகில் நல்லறங்கள் செய்து நல்லவர்களாக வாழ்பவர்கள் நாளை மறுமையில் இறைவனை காணும் பாக்கியத்தைப் பெறுவார்கள் என்பதை அறியலாம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.