
பதில்:
இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும்.
திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல.
கஃபாவும் அதைச் சுற்றியுள்ளப் புனித எல்லையும் இறைவனால் அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது யுக முடிவு நாள் வரைக்கும் இறைவன் அளித்த உத்தரவாதமாகும். இவ்வுத்தரவாதம் உலகின் வேறு எந்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் இறைவன் கொடுக்கவில்லை.
“நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.” (திருக் குர்ஆன் 28:57)
“இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?” (திருக் குர்ஆன் 29:67)
“அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். ” (திருக் குர்ஆன் 3:97)
“இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! ” (திருக் குர்ஆன் 14:35)
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து யுக முடிவு நாள் வரை கஃபத்துல்லாஹ்வை இறைவன் பாதுகாப்பதாக உத்தரவாதமளித்துள்ளதை அறிய முடியும். அதற்கு முன் எவரும் கஃபாவை அழிக்க முடியாது. இத்தகைய உத்தரவாதம் இருப்பதால் தான் அபாபீல் பறவைகளை அனுப்பி கஃபாவை இறைவன் பாதுகாத்தான்.
மற்ற எந்தப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய எந்த உறுதிமொழியையும் இறைவன் தரவில்லை.
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.“ (22:40)
மேற்கண்ட வசனத்திலிருந்து உலகில் உள்ள மற்ற பள்ளிவாயில்களை பாதுகாக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்குத் தான் என்பதை அறிய முடியும். மேலும் அவ்வாறு கஃபத்துல்லாஹ்வை விட்டு மற்ற எந்த பள்ளிவாயில்களையும் இடிக்க வருவோரை முஸ்லிம்கள் தடுக்க முயற்சித்தால் மட்டுமே இறைவன் உதவுவதாக வாக்களித்திருப்பதையும் மேற்கண்ட வசனத்திலிருந்து உணர முடியும். பாபரி மஸ்ஜிதோ, ஏனைய மஸ்ஜிதுகளோ இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு முஸ்லிம்கள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. அபாபீல் பறவைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எந்த உத்தரவாதமும் உலகில் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லை.