தஃலீம் கிதாப் படிக்கலாமா?

Share this:

ஐயம்: தஃலீம் கிதாப் படிக்கலாமா?

– மின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர்

தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், ‘ஃபளாயிலே அஃமால்’ என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அத்தொகுப்புப் பல மொழிகளில் பெயர்க்கப் பட்டு, நாடு முழுவதுமுள்ள அல்லாஹ்வின் பள்ளிகளில் படிப்பில் இருக்கிறது. தமிழில் மவ்லவீ நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்த்த அத்தொகுப்புக்குப் பெயர் ‘அமல்களின் சிறப்புகள்’ என்பதாகும்.

இந்த நூலைப் படிப்பது பற்றித்தான் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றீர்கள் என்று நம்புகிறோம்.

நூல்களைப் படிப்பதையும் உரைகளைக் கேட்பதையும் இஸ்லாம் தடைசெய்யவில்லை. ஆனால், செயல்பாட்டைப் பொருத்தவரை படிப்பதையும் கேட்பதையும் சிந்தித்துச் செயல்படுமாறு கட்டளையிடுகின்றது. நன்மை-தீமையைப் பிரித்தறிந்து செயல்படுதற்காகவே மனிதனுக்குப் பகுத்தறிவு வழங்கப் பட்டுள்ளது:

“… தங்கள் இறைவனுடைய வசனங்கள் மூலம் நினைவூட்டப் பட்டாலும் செவிடர்களைப்போல், (அகக்கண்) குருடர்களைப்போல் அவற்றின் மீது விழுந்துவிட மாட்டார்கள் (ஆழ்ந்து சிந்தித்துச் செயல் படுவார்கள்) அல்-குர்ஆன் 25:73.

‘அமல்களின் சிறப்புகள்’ என்ற தொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம்:

  • கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தது (பக்கம் 943).
  • கையில் காசில்லாமல் ஹஜ்ஜுக்குப் போனவருக்கு நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணமுடிப்பு வழங்கியது (பக்கம் 925).
  • கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்குப் போர்வையைப் பரிசளித்தது (பக்கம் 944).
  • பசியாளிக்கு நபி (ஸல்) கிச்சடியும் குழம்பும் கொடுத்தது (பக்கம் 945).
  • கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்கு ரொட்டி கொடுத்தது (பக்கம் 797).
  • ஷாஹ் வலியுல்லாஹ்வுக்கு நெய்ச்சோறு ஒரு மரவை கொடுத்தது (பக்கம் 799).
  • அல்லாஹ்வின் மீது காதல் கொண்டால் மரணம் கிடையாது (பக்கம் 657).
  • தொழும்போது ஆப்பரேஷன் – 1 (பக்கம் 143).
  • தொழும்போது ஆப்பரேஷன் – 2 (பக்கம் 144).
  • பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுக்க நின்று தொழுது, அதிலேயே இறந்துபோகப் பந்தயம் (பக்கம் 43,44).
  • இறந்த பிறகு கபுரில் தொழுத மய்யித் ஸாபித் அல் பன்னானி (பக்கம் 129, தொழுகையின் சிறப்பு-14).
  • நாற்பது ஆண்டுகள் தூங்காத பெரியார் (பக்கம் 118, தொழுகையின் சிறப்பு-1).
  • அறுபது ஆண்டுகளாக அழுது கொண்டே இருந்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-2).
  • பதினைந்து ஆண்டுகள் படுக்காத பெரியார் (தொழுகையின் சிறப்பு-11).
  • எழுபது ஆண்டுகள் இடைவிடாது தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-15).
  • அறுபது ஆண்டுகள் இஷாவுக்கு செய்த ஒளுவோடு ஃபஜ்ருத் தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-17).
  • நாற்பது ஆண்டுகள் இரவில் அழுது, பகலில் நோன்பு வைத்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-13).
  • அரசராகப் பொறுப்பேற்றதால் மனைவியுடன் உறவு கொள்ள மறுத்த அரசர் (தொழுகையின் சிறப்பு-12).
  • பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை மட்டுமே சாப்பிட்ட பெரியார் (தொழுகையின் சிறப்பு-7).
  • நாற்பது ஆண்டுகள் இரவு முழுவதும் தொழுது, பகல் முழுதும் நோன்பிருந்தவர் (பக்கம் 132)
  • தினமும் முன்னூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 132)
  • 130 வயதுவரை தினமும் இருநூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 86)
  • ரமழான் மாதத் தொழுகையில் அறுபது தடவை குர்ஆன் ஒதி முடித்த இமாம் (பக்கம் 132)
  • ஐம்பது ஆண்டுகள் இஷாவையும் சுபுஹையும் ஒரே உளுவைக் கொண்டு தொழுத பெரியார் (பக்கம் 132)
  • முப்பது/நாற்பது/ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளுவைக் கொண்டு சுபுஹைத் தொழுத இமாம் (பக்கம் 132)
  • ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 130).
  • ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 160).
  • ஓர் இரவுக்கு ஒரு ருகூ; ஒர் இரவுக்கு ஒரு ஸஜ்தா செய்த பெரியார் (பக்கம் 161).
  • நோன்பு துறக்கும்போது வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 62).
  • ஸஹரிலும் வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 64).
  • கடும் குளிரின்போது உடைகளைக் கழற்றி வைத்துக் கொள்ள வேண்டும் (பக்கம் 64).
  • ஸஹருக்கும் இஃப்தாருக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டி போதும் (பக்கம் 65).
  • ஸஹருக்கும் இஃப்தாருக்கும் பால் கலவாத தேநீர் மட்டும் போதும் (பக்கம் 65).
  • சந்திக்காமலேயே சப்பாணியை நடக்க வைத்தவர் (பக்கம் 124).
  • தொழுகையில்லாமல் சொர்க்கத்தில் எப்படி காலம் தள்ளுவது? பெரியாரின் கவலை (பக்கம் 45)

இதுபோன்ற கதைகள் ‘அமல்களின் சிறப்பு’களில் நிறைந்திருக்கின்றன. விரிவஞ்சி, சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

மேற்காணும் கதைகளை எழுதிய ஸக்கரிய்யா ஸாஹிப் கூறுகிறார்:

“பெரியார்களுடைய இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்கு மட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோ எழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்”

மனித இயல்புக்கு அப்பாற்பட்ட கதைகளைப் பின்பற்றி வாழ்வது சாத்தியமா? கூடுமா? என்ற கேள்விகள் நம் முன் எழுகின்றன. மேற்காண்பவை அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எதிரானவை என்பது தெளிவான சிந்தனையோடு அவற்றைப் படித்துப் பார்த்தால் விளங்கி விடும். ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே. தவறைச் சுட்டிக் காட்டும்போது திருத்திக் கொள்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு. ஆனால், மார்க்கம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தப்லீக்கிலும் நிலைமை தலைகீழ்தான்.

காட்டாக,

அஷ்ரஃப்  அலீ தானவி என்பார் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத் (ஞான தீட்சை) பெற்றிருந்தனர். ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார். கனவில் அவருக்கு சக்ராத் – இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று சொல்ல முயல்கிறார். ஆனால் அதற்குப் பதிலாக அவரது வாயிலிருந்து, “லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரஃப் அலீ தானவி ரஸூலுல்லாஹ்” என்றுதான் வருகின்றது. இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதைபதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு. இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயன்றார். அதற்கும் “அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரஃப் அலீ தானவி…” என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது. உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார். அதற்கு அஷ்ரஃப் அலி தானவி அவர்கள் “இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது நல்ல கனவுதான். ஏனெனில், நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரஃப் அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை” என்று சொன்னார்கள்.

இந்தப் பிரச்சினை அன்றைய உலமாக்களுக்கிடையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்படி ஃபத்வா மார்க்கத்துக்கு முரணானது; குஃப்ரை ஏற்படுத்தக் கூடியது; எனவே உடனடியாக அதனை வாபஸ் வாங்க வேண்டுமென அன்றைய அகில இந்திய உலமாக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதற்கு மறுப்பளித்து தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் எனும் நூலில் மேற்படி அஷ்ரஃப்  அலி தானவியின் பத்வா சரியானதே என ஸக்கரிய்யா ஸாஹிப் நியாயப் படுத்தி எழுதியுள்ளார் (தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் பக்கம் 144-145).

தப்லீக் பெரியார்களுக்குப் புனித பிம்பத்தை உருவாக்குவதற்காகவும் பல கதைகள் வேறு சில நூல்கள் மூலம் புனையப் பட்டுள்ளன:

“இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்கவில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது” என்று தப்லீக்கின் அடிப்படைகளை வஹீ மாதிரி ஷேக் இல்யாஸ் கூறுகின்றார்.

இதற்கு விளக்கமாக மற்றோர் இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி, “அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்” என்கிறார். இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம். (தப்லீக்கே தஹ்ரீக், பக்கம் 57).

மிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள். அவர்களிடம் கஷ்புடைய ஞானம் இருந்தது. அதன்மூலமாக அவர்கள் நபி (ஸல்)அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம். அவர்களிடத்தில் ஷேக் ஸக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை வருகை தந்து, தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன. எனவே இந்தப் பயணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது’ என்றார்கள். (மஹ்பூபுல் ஆரிபீன் பக்கம் 52).

“ஃபனா எனும் (ஒருவகை மெய்மறந்த) நிலையில் நான் இருக்கும் போதெல்லாம் எந்த விடயத்தை முடிவு செய்வதாயினும் ஷேக் இம்தாதுல்லாஹ்விடம் ஆலோசித்தே செய்வது வழக்கம். பின்பு ஃபனா நிலையின் உயர் அந்தஸ்த்துக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களைக் கண்டு ஆலோசித்தே முப்பது வருடங்களாக எந்தவித முடிவையும் எடுத்து வருகின்றேன் …” என்று தப்லீக் பெரியார் அப்துர் ரஷீத் கன்கோயீ கூறுகிறார். (தீஸ் மஜாலிஸ், பக்கம் 311; மஹ்பூபுல் ஆரிபீன், பக்கம் 57).

“ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை தம் மஜ்லிஸில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது நபியவர்கள் அவ்விடத்தில் சற்று உயர்ந்த மஜ்லிஸில் உட்காந்திருந்தார்கள்

அவர்களுக்கு முன்னிலையில் அழகிய புத்தகங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்துக்கும் மேலே ஹஜ்ஜின் சிறப்பு என்ற தஃலீம் புத்தகம் இருந்தது. அதற்குக் கீழ் ஸலவாத்தின் சிறப்பும், அதன்கீழ் ஹயாத்துஸ் ஸஹாபா கிதாபும் இருந்தன. அவ்வேளை அங்கே யூஸூப் பின்னூரி அவர்கள் வந்து நபியவர்களும் ஜக்கரிய்யா மௌலானாவும் பேசிக் கொண்டிருப்பதைக் செவியுற்று புன்னகைத்த வண்ணமே சென்றார்கள்” என்று அப்துல் ஹமீம் கூறுகிறார் (ஆப் பைத்தீ, பக்கம் 134).

oOo

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கப்ரைச் சுட்டிக் காட்டி, “ஏற்றுக் கொள்ளத் தக்கவையும் ஒதுக்கிக் தள்ளத் தக்கவையும் எல்லா மனிதர்களது கூற்றுகளிலும் உள்ளன – இந்த மண்ணறையில் உள்ளவரின் கூற்றைத் தவிர” என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ளவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையா ஒதுக்கித் தள்ளத் தக்கவையா என்பதை இப்போது எளிதாக உங்களால் முடிவு செய்ய இயலும். அவை அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் கீழ்க்காணும் சுட்டிகளில் உள்ள விரிவான கட்டுரைகள் விளக்குகின்றன:

http://www.satyamargam.com/67

http://www.chittarkottai.com/sufiyism/sufiyism8.htm

http://www.chittarkottai.com/sufiyism/sufiyism9.htm

http://www.chittarkottai.com/sufiyism/sufiyism10.htm

http://www.chittarkottai.com/sufiyism/sufiyism12.htm

http://www.chittarkottai.com/sufiyism/sufiyism14.htm

http://www.chittarkottai.com/sufiyism/sufiyism15.htm

http://www.chittarkottai.com/sufiyism/sufiyism16.htm

http://www.readislam.net/tableeq1.htm

http://www.readislam.net/tableeq2.htm

http://www.readislam.net/tableeq3.htm

http://www.readislam.net/tableeq4.htm

http://www.readislam.net/tableeq5.htm

http://www.readislam.net/tableeq6.htm

http://www.readislam.net/tableeq7.htm

http://www.readislam.net/tableeq8.htm

http://www.readislam.net/tableeq9.htm

http://www.readislam.net/tableeq10.htm

http://www.readislam.net/tableeq11.htm

மேற்காண்பவை கேள்விக்கான பதில் மட்டுமே.

அது தவிர,

  • தன் முஹல்லாவின் பள்ளிவாசலின் உட்புறம் எப்படியிருக்கும் என்றே தெரியாத பல முஸ்லிம்களை உள்ளுக்கு இழுத்து வந்து, தொழக் கற்றுக் கொடுத்து, பல பள்ளிகளுக்குப் பயணம் செய்ய வைப்பது.
  • வணக்க-வழிபாடுகள் புரிவதில் ஆர்வத்தைக் கூட்டுவது.
  • நேரம் தவறாமல் தொழுகையில் ஈடுபடவைப்பது.
  • அழைப்புப் பணிக்காக நேரம் ஒதுக்குவது.
  • அமீருக்கு முழுமையாகக் கட்டுப் படுவது.
  • பிட் நோட்டீஸ், வால்போஸ்டர், நாளிதழ்/தொலைக்காட்சி விளம்பரம் எதுவுமே இல்லாமல் மிகப் பெரும் மாநாடுகளை நடத்துவது.

ஆகிய நல்ல செயற்பாடுகளால், ‘அமல்களின் சிறப்பு’ தொகுப்பிலுள்ள அபத்தக் கதைகளையும் மிஞ்சி, அல்லாஹ்வின் அருளால் இன்றும் தப்லீக் ஜமாஅத் சிறந்த அமைப்பாக விளங்குகிறது.

நன்மை-தீமை கலந்த அனைத்துக்கும் அல்லாஹ் தீர்வு கூறுகிறான்:


“சொல்லப் படுகின்ற(எல்லா)வற்றையும் செவியேற்று, அவற்றிலுள்ள அழகியவற்றை (மட்டும்) பின்பற்றும் அடியார்களுக்கு நல்வாழ்த்துச் சொல்வீராக! அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தாம்; இவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்” அல்-குர்ஆன் (39:18).

சத்தியத்தை, சத்தியம் என்றறிந்து பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியம் என்றறிந்து விலகி, அல்லாஹ் விரும்பும் பகுத்தறிவாளர்களாக நாம் செயல்படுவதற்கும் நம் அனைவர்க்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.