
ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த கேள்வியை ஆய்வு செய்து எழுதுங்கள்….. அல்லது இதை இங்கு வெளியிடுங்கள்……..
தொழுகையைச் சுருக்கி தொழுதல் சம்பந்தமாக saheeh ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால் தொழுகையை கடமை ஆக்கிய இறைவன் தொழுகையை எப்போது சுருக்கி தொழ வேண்டும் என தெளிவாக கூறுவது, இந்த ஹதீஸ்களுடன் நேரடியாக முரண்படுவது போல் இருக்கின்றதே…… இதை எப்படி விளங்குவது….?
அதாவது.., கஸ்ர் தொழுகை பற்றி, குர் ஆன் கூறுவது….
4:101 وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا ۚ إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُّبِينًا
“நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் பயந்தால் , அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்” (4:101).
கஸ்ர் தொழுவது பிரயானத்தில்தான் அதுவும் காபிர்கள் தீங்கு செய்வார்கள் என பயந்தால் மட்டுமே……இந்த தொழுகையை சுருக்க இறைவன் அனுமதி தருகிறான்…
இதில் “காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால்,……….” என்று ஒரு நிபந்தனையை கூறுகிறான்…..
இதில் இருந்து நாம் தெளிவாக விளங்குவது, காபிர்களின் தீங்கு எதுவும் இல்லை என்றாகி தொழ எந்த பயமும் இல்லை என்ற நிலையில் சுருக்கி தொழ எந்த அவசியமும் இல்லை ..அப்படி சுருக்கி தொழவும் முடியாது..
எனவே சாதாரண பிரயாணத்தில் அதுவும் இந்த காலத்தில் காபிர்களின் எந்த தீங்கும் இல்லாத நேரத்தில், நாம் சுருக்கி தொழுவது குற்றம் ஆகாதா?
– மின்னஞ்சல் வழியாக சகோ. ஹஸன்
oOo
தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
இன்று எவ்வித அச்ச நிலையும் இல்லை என்று கூறி, “பிரயாணத்தில் சுருக்கித் தொழவேண்டிய அவசியமில்லை; சுருக்கித் தொழவும் முடியாது” என்று நாமே சட்டத்தை ஏற்படுத்தாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விளக்கத்தை ஆய்வுசெய்யக் கடமைப்பட்டுள்ளோம்! ஏனெனில், இறைவேதத்துக்கு விளக்கம் பெறவேண்டுமெனில், முதலாவதாக நாம் அணுகுவதற்கு முழுத் தகுதி உடையவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம்.
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “நீங்கள் பூமியில் பயணம் செய்தால், இறைமறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும்போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை” (4:101) என்றுதானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டதே? என்று கேட்டேன்.
அதற்கு உமர் (ரலி), “நீங்கள் ஐயம் கொண்டது போன்று நானும் கொண்டதுண்டு. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது ‘(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என பதிலளித்தார்கள்” என உமர் (ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர்: யஃலா பின் உமைய்யா (ரலி) (நூல்கள்: முஸ்லிம் 1108, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)
“நிராகரித்தோர் தீங்கிழைப்பார்கள் என அஞ்சினால் தொழுகையைச் சுருக்கித் தொழுதுகொள்ளுங்கள்” என அல்குர்ஆன் 4:101 வசனத்திற்கான இதே சந்தேகத்தை நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கான விளக்கமாக ”சுருக்கித் தொழுதல் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடையாகும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நான் (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் (ஒரு பயணத்தில்) இருந்தபோது இப்னு உமர் (ரலி), லுஹ்ருத் தொழுகையை எங்களுக்கு இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பிறகு தமது ஓய்விடம் நோக்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்; அவர்கள் அமர்ந்தபோது அவர்களுடன் நாங்களும் அமர்ந்தோம். அப்போது தாம் தொழுதுவிட்டு வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தார்கள். அங்குச் சிலர் நின்றுகொணடிருப்பதைக் கண்டு, “அவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். “கூடுதல் (ஸுன்னத்) தொழுகைகளைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்” என்று நான் பதிலளித்தேன். “கூடுதல் தொழுகைகளை தொழுபவனாக நானிருந்தால் எனது (கடமையான) தொழுகையை (பயணத்தில்) நிறைவாகத் தொழுத்திருப்பேனே! என் சகோதரர் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக (ஸுன்னத் தொழுகைகளை) அவர்கள் தொழுததில்லை.
நான் அபூபக்ரு (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். பிறகு நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (33:21) என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்றார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) வழியாக ஹஃப்ஸிப்னு ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) (நூல்கள்: புகாரி 1102, முஸ்லிம் 1112, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
இறை நிராகரிப்பாளர்களால் அச்சமடையும் நிலையெல்லாம் நீங்கி, மக்கா வெற்றி கொள்ளப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, எவ்வித அச்ச நிலையும் இல்லாமல் இருந்தும் நபியவர்கள் மரணிக்கும்வரை பயணத்தில் தொழுகைகளைச் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்று அறிவிப்புகளிலிருந்து அறிகிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகும் அவர்களைப் பின்பற்றியே நபித் தோழர்களும் பயணத் தொழுகையைச் சுருக்கித் தொழுதிருப்பதாக புகாரி 1102 மற்றும் முஸ்லிம் 1112 ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. எனவே, இன்றும் பயணத்தில் தொழுகையைச் சுருக்கித் தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருப்பதால் சுருக்கித் தொழுவது நபிவழியைப் பின்பற்றியதாகுமே தவிர, குற்றம் ஆகாது!
(இறைவன் மிக்க அறிந்தவன்).