தற்கொலை செய்து கொண்டவருக்காகப் பிரார்த்திக்கலாமா?

Share this:

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.

என் அண்ணன் விஷம் குடித்து இறந்து விட்டார். அவருக்காக பிரார்த்தனை செய்யலாமா? (மின்மடல் மூலமாக ஒரு சகோதரர் அனுப்பிய கேள்வி)

தெளிவு: வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

முஸ்லிம்களுக்கு இந்த உலகம் ஒரு சோதனைக்கூடமாகும். இதில் வசிக்கும் மாந்தர்கள் இவ்வுலக வாழ்வு எனும் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டுச் சோதிக்கப்படுவார்கள். துன்பங்களைக் கண்டுத் துவண்டு போகாமலும், துயரங்களால் முடங்கிப் போகாமலும் இறைவனின் கருணையை எதிர் நோக்கிப் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் இறைவனைச் சார்ந்தே நிற்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் நிரந்தரமல்ல. இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரை அதனை இறைவன் கொசுவின் இறக்கைக்குத் தான் ஒப்பிடுகிறான். மறுமையின் நிலையான வாழ்வுக்கு முன்னால் அற்பமான இம்மை வாழ்வில் வரும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டு சஞ்சலம் அடையாமல் இறைவனின் உதவியை மட்டுமே எதிர்பார்த்து ஒரு முஸ்லிம் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அதனால் எந்தவொரு சோதனைக்கும் தற்கொலையைத் தீர்வாக இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை. மாறாக தற்கொலை செய்வதை வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

‘ஒரு மனிதருக்குக் காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ், ”என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான், எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1364)

மேற்கண்ட புகாரி. 1364வது ஹதீஸைப் போன்றே காயத்தின் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கீழ்வரும் (3062, 4204) கைபர் போர் சம்பவத்திலும் சொல்லப்படுகிறது.

நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. மக்களில் சிலர், (நபி-ஸல் அவர்களின் அச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தம் அம்புக்கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் சொன்னது உண்மை தான் என அல்லாஹ் உறுதிப்படுத்திவிட்டான். இன்ன மனிதர் தன்னை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்” என்று கூறினர். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), ‘இறைநம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது, அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்” என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். (புகாரி, 3062, 4204)

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1365, 5778)

தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுவதால், தற்கொலை செய்தவருக்காக மறுமையின் பலன் வேண்டிப் பிரார்த்தனை செய்வதிலும், அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதிலும் எவ்விதப் பயனும் இல்லை என்றறிக! அல்லாஹ் அப்படிப் பட்டதொரு மாபெரும் பாவத்தில் வீழாமல் நம் அனைவரையும் காத்தருள்வானாக!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.