அசத்தியத்தை இறைவன் மன்னிப்பானா?

Share this:

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்…  எனது பெயர் மபாஸ். நான் எனது சகோதரியுடன் சண்டை செய்துவிட்டு ஆத்திரத்தில் நீ என் மையித்துக்கும் வரக் கூடாது என்றும் நானும் உனது மையத்திற்கு வரமாட்டேன் என்றும் கூறி அல்குர்ஆன் மீது ஆத்திரத்தில் சத்தியம் செய்துவிட்டேன். அஸ்தவ்பிருல்லாஹ். அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும். பிறகு உடனே இரண்டு ரக்கத் சுன்னத் தொழுது அழுது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டேன். கலிமா மொழிந்தேன, தவ்பா சொன்னேன் இப்போது நான் செய்த சத்தியத்தை அல்லாஹ் மன்னிப்பானா? வேறு ஏதாவது செய்யவேண்டுமா? தயவுசெய்து எனக்கு பூரண விளக்கம் தரவும். – மபாஸ்

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ், …அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்” (அல்குர்ஆன் 005:106, 107 இன்னும் அனேக வசனங்களில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்திட குர்ஆன் கற்றுத் தருகிறது)

அல்லாஹ்வைத் தவிர வேறு எவர் மீதும், எதன் மீதும் சத்தியம் செய்தலாகாது. அல்லாஹ்வின் தன்மைகளைக் கூறி தன்மையின் மீதும் சத்தியம் செய்யலாம். ”உள்ளங்களைப் புரட்டக் கூடியவன் மீதாணையாக” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்தியம் செய்துள்ளார்கள்.

குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட நூலாகும். அதைப் படித்து அறிவுரைப் பெற்று அதன்படி வாழ்க்கை நெறியினை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு வழிகாட்டியாக குர்ஆன் அருளப்பட்டது. மறாக, அதன் மீது சத்தியம் செய்வதற்காக அல்ல என்பதில் கவனம் தேவை!

”யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறு எவர் மீதும் எதன் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஏனெனில்) குறைஷியர் தம் முன்னோர் மீது சத்தியம் செய்துவந்தனர். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”உங்கள் முன்னோர் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள், புகாரி 3836, முஸ்லிம் 3383)

சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 2679, முஸ்லிம் 3382)

சகோதரி என்பவர் இரத்த உறவுடையவர். தந்தைக்குப் பின் சகோதரியின் பொறுப்பாளனாக சகோதரர் அதிகம் தகுதியுள்ளவர். இரத்த உறவைப் பற்றி இறைமறை சுருக்கமாக இவ்வாறு கூறுகிறது,

…அல்லாஹ்வையும் மேலும் இரத்த உறவுகளை (த் துண்டித்து நடப்பதையும்) அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)

இரத்த உறவின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இரத்த உறவுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதற்காகவும் இறையச்சத்துடன் இரத்த உறவு இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இரத்த உறவுகளுக்கு இஸ்லாம் வழங்கும் கண்ணியம் எந்த மதங்களிலும் இல்லாதது. ஆகவே, இரத்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி, இரத்த உறவுகளைத் துண்டிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது இஸ்லாம்.

எனினும், ”மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்” (17:11) என்கிற இறைவாக்குப்படி ஆத்திரத்தில் அவசரமாக வெளியிட்ட வார்த்தைகளை மன்னிக்க அல்லாஹ் போதுமானவன். கோபம் காரணமாக கூறிய வார்த்தைகளை உடனடியாக தவறென்று உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பா கேட்டு மீண்டுவிட்டீர்கள். கையோடு உங்கள் சகோதரியிடமும் நீங்கள் பேசிய வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டால் தவறுக்கான பரிகாரம் ஆகிவிடும். ஏனெனில், ”பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை இறைவன் மன்னிப்பதில்லை” இது நபிமொழி!

வாளால் கொய்வது தலை என்றால் வார்த்தையால் கொய்வது மனது. என்பதை நினைவில் நிறுத்தி, கோபத்தை விழுங்கி, எவருடைய மனமும் புண்படாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவோம்!

”கோபத்தை விழுங்குபவனே சிறந்த அறப் போராளி”

அவர்கள் செல்வ நிலையிலும், வறிய நிலையிலும் (நல்லறங்களில்) செலவு செய்வார்கள். இன்னும் கோபத்தை விழுங்கி, மனிதர்களை மன்னிப்பவர்களாகவும் இருப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.

இன்னும் அவர்கள் மானக்கேடான ஒரு காரியத்தைச் செய்து விட்டாலோ அல்லது தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைவு கூர்ந்து உடனே தங்களது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்யன்றி பாவங்களை மன்னிப்பன் யார்? அவர்கள் அறிந்து கொண்டே, தாம் செய்யும் தவறில் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 03:134,135)

(இறைவன் மிக்க அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.