ஆண் டாக்டர், பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

Share this:

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
 

என் கேள்வி பெண் டாக்டர்கள் இல்லாத அல்லது அவர்களால் இயலாத காம்ப்ளிகேட்டட் (சிக்கலான) சூழலில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் டாக்டர் பிரசவம் பார்ப்பது இஸ்லாத்தில் கூடுமா? கடந்த பிரசவத்தில் எனக்கு காம்ப்ளிகேஷன் ஆனதால் இருந்த பெண் மருத்துவர்கள் ஒன்றும் செய்ய இயலாததால் ஆண் கன்ல்ட்டண்ட் டாக்டர் ஒருவரை வைத்து பிரசவம் பார்த்தார்கள்.  இன்றுவரை என்மனதில் நிலை நின்று விட்ட வேதனை என் கணவர் முன்னிலையில் ஒவ்வொரு நாளும் ஆண் டாக்டர் வந்து பரிசோதித்தது என் உயிரைப் பறித்தணர்வு வந்து சென்றது. இதற்கு இஸ்லாத்தின் பார்வையில் பதில் கூறவும்.  பின்குறிப்பு: தங்கள் இணைய தளத்தின் மூலம் பெண் டாக்டர்கள்(DGO) அதிகம் படித்து வருவதற்கு உதவி செய்யுங்கள். கண்ணீருடன் பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரி.

 

தெளிவு: சகோதரிக்கு வ அலைக்கும் ஸலாம் (வரஹ்) இவரின் மனக்குமுறலுக்கு அல்லாஹ் ஆறுதல் அளிப்பானாக!

 

மார்க்கச் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது என்ற பதட்டத்தில் தெளிவுபெறும் பொருட்டு இக்கேள்வியைக் கேட்ட சகோதரிக்கு அல்லாஹ் மன ஆறுதலை அளிப்பானாக! அவரின் மனவேதனையை போக்குவானாக!

 

இஸ்லாமிய மார்க்கத்தை இலகுவாக அமைத்திருக்கும் இறைவன், அதில் மனிதர்களை நல் வழிப்படுத்திட அறிவுரைகளை வழங்கியிருக்கிறான். தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரு தனி மனிதன் இன்னொரு உயிரைக் கொலை செய்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை!

 

மாறாக, "ஒரு தனி மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழவைத்தவர் போலாவார் (005:032)" என ஆபத்திலிருக்கும் மனிதருக்கு அபயம் அளித்துக் காக்கும்படி இஸ்லாம் எடுத்துரைக்கிறது. நோயை அளித்த இறைவன், நோய்க்கான நிவாரணத்தையும் வழங்கியிருக்கிறான். நோய் தீர்க்கும் மருத்துவம் இருந்தும் அந்த மருத்துவத்தை ஏற்க மாட்டேன் என்பது தற்கொலைக்குச் சமம். "நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் (004:029)" என்று நம்மை நாமே அழிவுக்குள்ளாக்கிக் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது.

 

பெண்மை, தாய்மை நிலையை அடைந்து குழந்தையைச் சுமைப்பதை இறைவன் உயர்வாகக் கூறுகிறான். "தாய்மையடைந்த பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும் போது கஷ்டத்திலேயே பெற்றெடுக்கிறாள்" என்று பிரசவ சமயத்தில் உள்ள துன்பங்களும் திருமறையில் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது.

 

தற்காலத்திய வாழ்க்கைச் சூழலின் மாற்றங்களுக்கு ஏற்ப பெண்களின் உடல் ஆரோக்கிய நிலையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாகத் தற்காலத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது வைத்திய முறை மிகவும் அவசியமாகிறது. அதிலும் பெண்களின் பலவீனத்தைப் பொறுத்து வைத்திய முறையின் பராமரிப்பும் அதிகரிக்கும். தற்காலத்திய மருத்துவத்துறையின் வளர்ச்சியில் பெண்களும் முக்கியமாக பிரசவத்துறையில் வந்து விட்டச் சூழலில், இக்கட்டான சூழலைக் கையாளும் திறன் படைத்த அதற்குண்டான கல்வியறிவும், மன உறுதியும், அனுபவமும் உடையப் பெண்கள் மிக அரிதாகவே உள்ளனர். சாதாரணமாகவே அறுவை சிகிட்சை போன்ற நுண்ணிய, மன உறுதியுடன் கவனமாக செய்யப்பட வேண்டிய துறைகளில் பெண்களால் அதிகமாக செயல்பட இயலாமல் போகிறது எனும் எதார்த்த சூழலையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

 

இக்கேள்வி கேட்ட சகோதரிக்கு நிகழ்ந்திருக்கும் சூழல், அனைத்து நாடுகளிலும் பிரசவ நேரத்தின் பொழுது பல பெண்களுக்கு நிகழவே செய்கின்றது. அவ்வேளைகளின் பொழுது சிக்கலான (காம்ப்ளிகேட்டட்) சூழலை கையாளப் போதிய அனுபவமோ, அறிவோ, மன உறுதியோ இல்லாத பெண் மருத்துவரை வைத்துத்தான் பிரசவம் பார்ப்பேன் எனக் கூறுவது அறிவுக்குப் பொருத்தமானது அன்று. மேலும் பெண்கள் ஆண்களுக்கும், ஆண்கள் பெண்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதை இஸ்லாம் எங்கும் தடைசெய்யவும் இல்லை.

 

ருபய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) கூறியதாவது: "(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும், மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களையும், (காயமுற்றவர்களையும்) மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்." (புகாரி, 2882, 5679).

 

இயல்பாகவே அதிகமாக நாணமுடைய பெண்கள், ஆண்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்க முடிகிறது. நோய்வாய்ப்பட்டவர் ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும் பாலின பேதமில்லாமல் நோய்க்கு வைத்தியம் அளிக்க வேண்டும், அதிலும் ஆபத்தானக் கட்டமாக இருந்தால் நோயாளியின் உயிரை முக்கியமாகக் கருத்தில் கொண்டு அவருக்கு உடனடியாக ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ சிகிச்சை அளிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை என்பதை மேற்கண்ட தெளிவிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

 

உண்பதற்கு விலக்கப்பட்ட உணவுகளை இஸ்லாம் வகைப்படுத்தியுள்ளது. உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உணவுகள் இருக்கும் போது உண்ண விலக்கப்பட்ட உணவுகளை வேண்டுமென்று உண்பது பாவம். ஆனால் உண்பதற்கு எதுவுமே இல்லாத பொழுது, பாவம் செய்யும் நோக்கமில்லாமல் விலக்கப்பட்டவற்றை உண்பதற்கு இறைவன் அனுமதிக்கிறான். ("பாவம் செய்யும் நோக்கமின்றி வறுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டால் அதை அல்லாஹ் மன்னிக்கிறான். 005:003")

 

பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதில் வெட்கமடைவார்கள். கருவைச் சுமக்கும் பெண்கள், பெண் மருத்துவர்களிடமே தொடக்க கால சிகிச்சைப் பெற்று வந்தாலும் ஆபத்தான பிரசவ நேரத்தில் திறமையான மருத்துவர்தான் தாயையும், சேயையும் காப்பற்ற இயலும் என்றால் அவ்வழியைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிப்பதில் தவறில்லை. அதிலும் இக்கட்டான சூழல் உருவாகும் பொழுது, உயிரை பாதுகாப்பதே முதல் கடமையாகும். இறைவன் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.

 

இங்கு பிரசவிக்கும் பெண், தமக்கு பெண் மருத்துவரே பிரசவம் பார்க்க வேண்டும் என்று விரும்பி எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தும் ஆபத்தான கட்டத்தில் வேறு வழியின்றி ஆண் மருத்துவர் சிகிச்சை அளிக்க நேர்ந்தால் அது அவரின் சக்திக்கு அப்பாற்பட்டது. அந்த நேரத்தில் பெண் மருத்துவரிடம் தான் சிகிச்சை பெற வேண்டும் என்று இறைவன் தாங்க முடியாத சுமையைச் சுமத்திடவில்லை – நிர்ப்பந்திக்கவுமில்லை.

 

ஆகையால், பெண்கள் சாதாரண நேரத்தில் அன்னிய ஆண்களிடம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வரையறுக்கும் வழிமுறை மருத்துவத்தில், அதுவும் ஆபத்தான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நேரத்தில் பொருந்தாது. நோயாளியைக் காப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே மருத்துவர்களிடம் மேலோங்கியிருக்கும். மேலும், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் நேரத்தில் மருத்துவர், உதவி மருத்துவர் மற்றும் செவிலியர்களும் உடனிருப்பார்கள். அதனால் இஸ்லாமிய வரம்பை மீறி விட்டதாகவோ, கணவனின் மனதை வேதனைப்படுத்தி விட்டதாகவோ எண்ணி மன வேதனை அடைவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

 

எனவே சகோதரி மன உளைச்சல் அடையுமளவுக்கு இதில் எந்தப் பாவமும் இல்லை என்பதை மனதில் கொண்டு நிம்மதியாக சந்தோஷத்துடன் குடும்பத்தவருடன் உறவாடவும். உங்களின் மனதை இலேசாக்கித் தர வல்ல இறைவன் போதுமானவன்.

 

சகோதரி இக்கேள்வியினூடே சத்தியமார்க்கம்.காம் தளத்தினரிடன் வைத்திருக்கும் கோரிக்கை இக்காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. "தொலைந்த பொருளை தேடுவது போல் வாழ்க்கையில் கல்வியை தேடிக்கொண்டே இருங்கள்" என்று நாயகம்(ஸல்) அவர்கள் ஆண்/பெண் பேதமின்றி இதனைச் செய்ய வலியுறுத்தியுள்ளார்கள். கல்வியில் சமுதாயம் பின்தள்ளப்பட்டதே உலகில் இன்றைய முஸ்லிம் சமூகம் நேரிடும் பிரச்சனைகளுக்கான தலையாயக் காரணமாக சத்தியமார்க்கம் தளம் கருதுகின்றது. இதனை மனதில் கொண்டு இன்ஷா அல்லாஹ் சத்தியமார்க்கம்.காம் தனது எதிர்கால திட்டங்களில் கல்விக்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவும் எண்ணியுள்ளது. அவ்வகையில் மருத்துவத்துறையில் அதிகமதிகம் பெண்கள் படித்து வருவதற்கு சத்தியமார்க்கம்.காம் தன்னால் இயன்ற அளவு உதவிகளைச் செய்யும் இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.