
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
முதலில் அல்லாஹ்வுக்கும் அடுத்து உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது வினா என்னவென்றால் நாங்கள் தொழிலுக்காக சவூதி அரபியா வந்த இடத்தில் இங்கிருந்து உம்ரா செய்யலாமா?
அடுத்தது என்னுடன் இருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் சொன்னது உம்ரா கட்டாயக் கடமை என்று. தயவு செய்து பதில் தரவும். காரணம் எனக்கு எனது குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய முக்கிய பல கடமைகள் உள்ளன. உங்கள் பதிலை எதிர்பார்த்த வண்ணம். சலாம்
மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஹஸன்.
தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்…
அன்புச் சகோதரர் ஹஸன்,
''தொழிலுக்காக சவூதி அரபியா வந்து உம்ரா செய்யலாமா?'' இந்த முதல் கேள்வியை எடுத்துக்கொள்வோம். தொழுகை, நோன்பு எனும் இறைவணக்கம் போன்று இறைவனை வணங்கும் சில வழிபாடுக் கிரியைகளை உள்ளடக்கியதுதான் ஹஜ்ஜும், உம்ராவும். எனவே, உங்கள் கேள்வியான உம்ராவோடு ஹஜ் குறித்தும் மிகச் சுருக்கமாக இங்குக் குறிப்பிடப் படுகின்றது.
பிற இறைவணக்கங்களை (பூமி, ஆகாயம்) எங்கிருந்து வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். உம்ராவை மக்கா நகரில் அமைந்த இறையில்லம் கஅபாவில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும்! ஹஜ்ஜுக் கடமையில், கஅபாவோடு அதை அடுத்துள்ள மினா, அரஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் வழிபாடுகள் செய்ய வேண்டும். தொலைதூரத்து நாடுகளிலிருந்தும் ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்ற புனித இறையில்லம் அமைக்கப்பெற்ற மக்காவுக்குச் சென்றுவர வேண்டியிருப்பதால் அதற்கான பயண ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.
'ஹஜ்(ஜுக்குரிய காலம்) குறிப்பிட்ட சில மாதங்களாகும். அந்த மாதங்களில் ஒருவர் (தம்மீது) ஹஜ்ஜைக் கடமையாக்கிக் கொண்டால்…'' (அல்குர்ஆன் 2:197)
''அந்த ஆலயத்தில், அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை'' (அல்குர்ஆன் 3:97)
பயணத்திற்கான பொருள் வசதி மற்றும் சென்றுவர உடல் வலிமை உள்ளவர்கள் மீது ஹஜ் எனும் இறைவணக்கம் கடமை என்பதை மேற்கண்ட இறைவசனங்களிலிருந்து விளங்கலாம். தொழிலுக்காக வந்த இடத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?
''(ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்து) இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை'' (அல்குர்ஆன் 2:198)
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடை வீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினர்கள். அப்போது ''உங்கள் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை'' என்ற (2:198) வசனம் இறங்கியது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஹஜ்ஜுக் காலங்களில்" என்பதையும் சேர்த்து ஓதியிருக்கிறார். (நூல்: புகாரி 1770. 2050, 2098, 4519)
ஹஜ்ஜுக் கிரியைகளை நிறேவேற்றும்போது அதோடு வியாபாரம் போன்ற தொழில்களையும் செய்து கொள்வது குற்றமில்லை என இறைவசனமும், நபிவழி அறிவிப்பும் தெளிவுபடுத்துகின்றன. தொழிலுக்காக வந்த இடத்தில் உம்ராச் செய்யக்கூடாது என்று சொல்பவர்கள் அவர்கள் சொந்தக் கருத்தையே சொல்கிறார்கள். நாமறிந்து அதற்கான மார்க்கச் சான்றுகள் எதுவுமில்லை!
உம்ரா கட்டாயக் கடமையா?
ஹஜ்ஜைக் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும். உம்ராவை நிறைவேற்ற குறிப்பிட்ட நாட்கள் எதுவுமில்லை. எல்லா மாதங்களிலும் எல்லா நாட்களிலும் இஹ்ராம் அணிந்து உம்ரா செய்து கொள்ளலாம். ஹஜ்ஜைவிட உம்ராவுக்கு கிரியைகளும் குறைவானது. கஅபாவை வலம் வருவது, ஸஃபா மர்வாக்கிடையே ஒடுவது தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல் ஆகிய வழிபாடுகளோடு உம்ராக் கடமை நிறைவேறி விடுகின்றது.
''மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம், நூல்: முஸ்லிம் 2599)
வசதியுள்ளவர்கள் மீது ஹஜ் செய்வது கடமை என்பது போல் உம்ராச் செய்வதும் கடமையாகும் என்று கூறுவதற்கு குர்ஆன் வசனமும், நபிவழி அறிவிப்பும் இல்லை!
உம்ராவின் சிறப்பை வலியுறுத்தி ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன!
ஓர் உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும்… (நூல்கள்: புகாரி 1773. முஸ்லிம் 2624. திர்மிதீ 855. நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா. முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றள்ளது)
''ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)
நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்.
நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்! என்ற அறிவிப்பு புகாரி 1778, 1780, 4148. முஸ்லிம் 2404, 2406, ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளன.
உம்ராவின் சிறப்பைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதாலும், நபி (ஸல்) அவர்கள் உம்ராச் செய்திருப்பதாலும் உம்ராச் செய்வது சிறப்பு மற்றும் – நபிவழி – சுன்னத்தாகும். ஆனால், உம்ரா கட்டாயக் கடமை என்று நிறுவ மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை!
உம்ரா கட்டாயக் கடமை; உம்ரா கடமை இல்லை என்ற இரு வேறுபட்ட கூற்றுகளும் அறிஞர்களின் கருத்தாகவே உள்ளன. எனவே உம்ரா கட்டாயக் கடமை என்று உங்களிடம் கூறிய முஸ்லிம் சகோதரரிடம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேளுங்கள்! கிடைத்தால் எங்களுக்கு அனுப்புங்கள், அதை நன்றியுடன் பரிசீலிப்போம், இன்ஷா அல்லாஹ்.
(இறைவன் மிக்க அறிந்தவன்).