
ஐயம்:-
அஸ்ஸலாமு அலைக்கும்
சந்திரனும் பிளந்து விட்டது என்பதன் பொருள் மருகியுள்ளதா? அல்லது உண்மை நிகழ்ச்சியா? (நிச்சயமாக அறியாமையில் அறிந்து கொள்ளும் நல்லெண்ணத்தில் மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளேன். தவறு இருப்பின் மன்னிக்கவும். அஸ்தஃபிருல்லாஹு அளீம்)
– abdul rahiman aneeefa
தெளிவு:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அந்த (மறுமை) நேரம் அண்மி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது! (அல்குர் ஆன் 54:1)
இறைமறையின் 54:1வது வசனம், சந்திரன் பிளந்து இரு துண்டுகளாகிய நிகழ்ச்சியை மறுமைநாள் நெருக்கத்தின் ஓர் அடையாளமாகக் குறிப்பிடுகின்றது. அறிவியல் பார்வையில், பெருவெடிப்பு நிகழ்விலிருந்து துவங்கப்பட்ட அண்டத்தின் இயக்கம் விரிவடைந்து கொண்டே சற்றும் பிசகாமல் கோள்களும் நட்சத்திரங்களும் ஈர்ப்பு விசையினால் ஒன்றையொன்று விலகிச் செல்லாமல் அனைத்தும் ஒரு குழுவாக, சீராகச் செயல்படுகின்றன.
இந்த அண்டத்தினைப் படைத்து இயக்கிக் கொண்டிருப்பவன் ஈடு இணையற்ற தன்னிகரில்லா அல்லாஹ் ஒருவனே என்பதையும் இறைமறை வசனங்கள் பகிரங்கமாக அறிவிக்கின்றன. அணுவளவும் பிசகின்றி இப்பிரபஞ்சத்தை இயக்கும் வல்லோன் அல்லாஹ், அதில் ஒரு துணைக் கோளாகிய சந்திரனை சுக்கு நூறாக்கி, உடைந்த துண்டுகளை ஒன்றுபடுத்தி மீண்டும் முழுச் சந்திரனாகப் படைத்திட ஆற்றலுள்ளவன். சந்திரனை முதலில் படைத்தவனுக்கு அதை மீண்டும் படைப்பது மிக எளிது. அதனால் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்ததும் பின்னர் அவற்றை முன்புபோல் ஒன்றுபடுத்தியதும் அல்லாஹ்வின் ஆற்றலுக்கு சாத்தியமற்ற காரியமல்ல!
சந்திரன் பிளந்து விட்டது எனக் கூறுவது இறைமறையின் வசனம் என்பதால், சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்ததும், அவை மீண்டும் ஒன்றாகி முழுச் சந்திரனாகியதும் நடந்த உண்மை நிகழ்வாகும் என்பதைக் கலப்பற்ற ஈமானோடு நம்புவோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையில் இறைவனின் தூதர்தானா என்பதை உண்மைப்படுத்திட ஓர் சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டனர். அதன் உண்மைச் சான்றாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து சந்திரனை இரண்டு துண்டுகளாக்கி அற்புதம் நிகழ்த்திக் காட்டப்பட்டது என்பது இந்நிகழ்வின் வரலாற்றுப் பின்னணியாகும். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்குமுன் இச்சம்பவம் நிகழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்தான அறிவிப்புகள் கூறுவதாவது:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (இதைப் பார்த்து நினைவில் இருத்தி) சாட்சியாளர்களாக இருங்கள்” என்று கூறினார்கள். (அதன்) இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹிரா) மலையின் திசையில் சென்றது. அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (நூல்கள் – புகாரி 3636, 3869, 3871, 4864, 4865 முஸ்லிம் 5396, திர்மிதீ, அஹ்மத்)
அறிவிப்பாளர் மஸ்ரூக்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் “மக்காவில் (சந்திரன்) பிளந்தது” என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
முஸ்லிம் நூலின் அறிவிப்பு:
நாங்கள் மினா எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், ”(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல் – முஸ்லிம் 5396)
”முஹம்மது எங்களுக்கு கண்கட்டி வித்தை – சூனியம் – செய்துவிட்டார்” என மக்கள் பேசியது:
அவர்கள் எந்தவோர் அத்தாட்சியைக் கண்டாலும் புறக்கணித்து, இது தொடராக நிகழும் சூனியமே என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 54:2)
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. ஒரு துண்டு அந்த மலையிலும், மற்றொரு துண்டு இந்த மலையிலும் தென்பட்டது. ”முஹம்மது நம் கண்களைக் கட்டிவிட்டார்” என்று மக்கள் கூறினர். வேறு சிலர் ”இவர் கண்களைக் கட்டியிருந்தால் எல்லா மக்களின் கண்களையும் கட்டியிருக்க முடியாதே” என்றனர். அறிவிப்பவர் ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) (நூல்கள் – திர்மிதீ 3343, அஹமத்)
சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்து, அவற்றில் ஒரு துண்டு மலையின் மேற்பகுதியிலும், மற்றொரு துண்டு மலைக்குக் கீழ்பகுதியிலும் சென்று, சந்திரனின் இரு துண்டுகளுக்கிடையே மலையின் காட்சியை மக்கள் கண்டிருக்கின்றனர். இரு துண்டுகளாகப் பிளக்கப்பட்ட சந்திரன் இரண்டு பிளவுகளாகத் தனித் தனியாக காட்சியளித்திருக்கிறது என்பதை மேலதிக விளக்கமின்றி மேற்காணும் அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். அல்லாஹ்வின் அற்புத நிகழ்வாகிய சந்திரன் இரண்டு துண்டுகளாகிய காட்சியைக் கண்டபிறகும், “இது கண்கட்டு சூனியம்” என்று மக்களில் ஒரு சாரார் புறக்கணித்தனர் என்கிற செய்தியையும் இறைமறையும், நபிவழி அறிவிப்புகளும் தெரிவிக்கின்றன.
சந்திரன் பிளக்கப்பட்ட சம்பவத்தின் அறிவிப்புகளை அனஸ் இப்னு மாலிக் (ரலி) மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளனர்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர் தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாக(ப் பிளந்திருக்க)க் காட்டினார்கள். எந்த அளவிற்கென்றால், மக்கா வாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள். அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல்கள் – புகாரி 3637, 3868, 4867, முஸ்லிம் 5398)
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் – புகாரி 3638, 4866, முஸ்லிம் 5400)
சந்திரன் பிளக்கப்பட்ட சம்பவத்தின் போது நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் சிறுவயதினராக மதீனாவில் இருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சம்பவம் நடந்தபோது பிறந்திருக்கவில்லை. ஆகவே, இவ்விருவரும் சந்திரன் பிளந்த சம்பவத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பில்லை. இருவரும் மற்றவரிடம் கேட்டு அறிவித்துள்ளனர் என விரிவுரையாளர்கள் ஹதீஸின் விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
அறிவியல் பார்வையில் அரபியன் பிளவு
துணைக் கோளாகிய நிலவில் இறங்கிய விண்கலம், படம் எடுத்து அனுப்பிய படங்களில் ஓர் ஆப்பிளை நேர் இரண்டு துண்டுகளாக வெட்டி அதை மீண்டும் ஒட்டியது போல் ஒரு நேர்கோடு தெரிகின்றது. அதனால் இதற்கு அரபியன் பிளவு என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர் என்று நிரூபணமில்லாத ஒரு செய்தியும் உண்டு (படம்).
இறைமறை வசனங்கள் அரபு மொழியில் இறங்கின. சந்திரன் பிளந்துவிட்டது என்ற வசனத்தின் மீது அரபியரே முதன் முதலில் நம்பிக்கை கொண்டனர். இதன் அடிப்படையில் நிலாவில் இறங்கிய விண்கலம் எடுத்து அனுப்பிய நிலவுப் படங்களில் தெரியும் வெட்டி ஒட்டிய ஆப்பிளைப் போன்று இருக்கும் நிலாக் கோட்டிற்கு அரபியன் பிளவு என்று சொன்னாலும் அது உறுதி செய்யப்பட்ட விஞ்ஞானமல்ல! படங்களைப் பார்த்து உறுதிப்படுத்தலாமெனில், சந்திரன் பிளக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நிலாப்படமும் வேண்டும். அப்போதுதான் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்த முடியும்.
எனவே, அரபியன் பிளவு என்ற அறிவியல் கூற்று அனுமானம் என்பதால் அதை ஏற்கவோ மறுக்கவோ உறுதியான சான்றுகள் எதுவும் இதுவரையில் இல்லை! எதிர்காலத்தில் தக்க சான்றுகளுடன் உறுதிப்படுத்தப்படுமானால் அவற்றை வரவேற்போம்!
இறை மறுப்பாளர்களின் விமர்சனம்
“சந்திரன் பிளந்து விட்டது” என்ற குர்ஆன் வசனத்தைக் குறிப்பிட்டுத் தற்கால சில பிறமதத்தினரும், இறைமறுப்பாளர்களும் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் விமர்சித்துள்ளனர். பொதுவாக, “மனிதனுக்கு மிகக் குறைந்த அறிவே வழங்கப்பட்டுள்ளது” என அல்லாஹ் கூறுகின்றான். நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சியை அது நடந்ததா இல்லையா என்பதை மனிதனின் சிற்றறிவைக் கொண்டு தீர்மானிக்க முடியாது. செய்தியின் நம்பகத்தன்மையைக்கொண்டே உறுதிப்படுத்திட வேண்டும். முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள இறைச்செய்திக்கு மேலான செய்தி என்று எதுவும் இல்லை! சந்திரன் பிளக்கப்பட்டது என்ற இறைமறை வசனத்தைக் கேட்டவுடன், படித்தவுடன் ”அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; எதைச் செய்வதற்கும் ஆற்றல் பெற்றவன்” என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையிலான எண்ணம், அவனைப் புகழ்பாடுமேயன்றி இறைமறை வசனங்களை சந்தேகிக்காது!
(இறைவன் மிக்க அறிந்தவன்).