நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

ஐயம்: அன்பு சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
 இஸ்லாம் ஒரு விஷயத்தைத் தடை செய்கிறது என்றால் அது முழு மனித குலத்துக்கும் கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு மதுவை ஒரு முஸ்லிம், தான் அருந்தாவிட்டடலும் ஒரு முஸ்லிமல்லாதவனுக்கு விற்றாலும் இலவசமாகக் கொடுத்தாலும் பெருங்குற்றமே.

நாயினால் ஏற்படும் தீங்குகள் ஒரு புறம் இருக்கட்டும். நாய் விற்ற காசினால் என்ன கேடு?

இங்கு ஏன் அப்படிக் கேட்கிறேன் என்றால் நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

நன்றி!

மின்னஞ்சல் வழியாக கோதரர் இப்னு ஹமீது.

தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…

"ஒரு முஸ்லிம், தன்னிடமுள்ள நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறதா?" என்பது தங்களின் முழுமையான கேள்வியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

தங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு, நாய் வளர்ப்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், நாயை வளர்ப்பவர்/வைத்திருப்பவர்தாம் அதை அன்பளிப்புச் செய்ய இயலும்!

சரியான விளக்கம் பெறுவதற்காகத் தங்கள் கேள்வியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:

முதலாவதாக, முஸ்லிம்களுள் மிக மிகச்சிலர் ஆசைக்காக/ஃபாஷனுக்காக, 'செல்லப் பிராணி' என்ற பெயரில் நாய் வளர்ப்பதும் வீட்டுக்குள் நாயை வைத்துக் கொண்டு கொஞ்சுவதும் எங்குச் சென்றாலும் 'நாய் பிரியா வாழ்க்கை' நடத்துவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்நடைமுறை, மேட்டுக்குடி முஸ்லிம்கள் சிலரிடத்தும் சேரிவாழ் சொற்ப முஸ்லிம்களிடத்தும் காணப் பட்டாலும் இவ்விரு வகையினரும் இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்கவில்லை என்றே முடிவு செய்ய வேண்டியதிருக்கிறது. காரணம், இஸ்லாத்தில் நாயை வளர்ப்பதற்கு இரு காரணங்கள் மட்டுமே உள்ளன. அதில் முதலாவது வேட்டைக்காக வளர்ப்பதாகும்.

அனுமதிக்கப் பட்ட மாமிச உணவுகளைப் பற்றி விவரிக்கும்போது, ''… அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள் …" (அல்குர்ஆன் 5:4) என்று கூறுவதன் மூலம் வேட்டையாடும் பிராணியை வளர்த்து, பயிற்சி அளிப்பதை நமக்கு அல்லாஹ் அனுமதித்திருக்கிறான்.

"வேட்டைக்குப் பயன்படுத்தப் படும் பிராணி" என்று குர்ஆன் பொதுவாகக் குறிப்பிட்டாலும் ஹதீஸ்கள் மூலம் "வேட்டைநாய்" என்ற தெளிவான சொல்லாக்கத்தில், வேட்டைக்காக நாய் வளர்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி கிடைக்கிறது:

''கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர, (வேறு காரணங்களுக்காக) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்குக் குறைந்துவிடும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, 5480, 5482. முஸ்லிம், 3202)

இதை வாசித்தீர்களா? :   லெட்டர் ஆஃப் க்ரெடிட் தயாரிப்பது கூடுமா?

"…விளை நிலங்களையும் காவல் காக்கும் நாய்களைத் தவிர'' என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (நூல்கள்: புகாரி 2322, 2324. (முஸ்லிம், 3211)

மேற்காணும் இரு நபிமொழிகளில் (1)வேட்டைக்கும் (2)காவலுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்கு முஸ்லிம்கள் நாய் வளர்க்கலாம் என்ற அனுமதி உண்டு. ஆனால், அந்த அனுமதி, மனிதர்களின் புழக்கத்துக்காகப் பயன்படுத்தப் படும் "வீட்டுக்கு உள்ளே நாயை வளர்ப்பதற்குத் தடை" என்ற கட்டுப்பாட்டோடு கூடியதாகும்:

ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். [ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிப் பின்னர் கேட்டபோது] "உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை" என்றார். அவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்: புகாரி, 3227).

நாய்கள் குறித்து அறிவிக்கப்படும் நபிமொழிகளிலிருந்து, ஃபேஷனுக்காக நாய் வளர்ப்பதையும் அதைச் செல்லப் பிராணியாக வீட்டில் அனுமதிப்பதையும் இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்துள்ளது என்பது தெளிவு. அதேவேளை, மனிதனுக்குப் பயன் இருப்பதால் காவலுக்காகவும் வேட்டையாடுவதற்காகவும் பயிற்சி அளிக்கப்பட்ட நாய் வளர்ப்பதில் தவறில்லை என்று நாம் விளங்க முடிகிறது.

இரண்டாவதாக, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காகவும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புக்காகவும் காவல்துறையினர் 'மோப்ப நாய்'களை வளர்க்கின்றனர். அவர்களுள் முஸ்லிம்களும் அடங்குவர். ஆனால், அவர்கள் 'மோப்ப நாய்'களை வீட்டுக்குள் வளர்ப்பதில்லை. எனவே, 'மோப்ப நாய்'கள், 'வேட்டை நாய்'களின் வரிசையில் வந்து விடுகின்றன.

இனி, உங்கள் கேள்வியான 'நாய் அன்பளிப்பு' பற்றிப் பார்க்கலாம்:

தமது பயன்பாட்டிற்காக காவல்/வேட்டை நாயை வைத்திருப்பவர் புலம்பெயர்ந்து செல்லும்போது தனது நாயை தன்னுடன் கொண்டு செல்ல முடியாமல், அல்லது காவல்/வேட்டைக்கு இனி நாயின் கட்டாயம் இல்லை என்றாகி விட்டால் காவலுக்கும் வேட்டைக்கும் நாய் தேவைப்படும் ஒருவருக்கு அந்த நாயை அன்பளிப்புச் செய்யலாம்.

''சம்பாத்தியத்திலேயே மோசமானவை விபச்சாரியின் வருமானம், நாய் விற்ற காசு, இரத்தம் உறிஞ்சி எடுப்பவர் பெறும் கூலி ஆகியவை ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ராஃபிவூ பின் கதீஜ் (ரலி) (நூல்: முஸ்லிம், 3192, திர்மிதீ 1196).

ஃபேஷனுக்காக நாய் வளர்ப்பதற்குத் தடை இருப்பதால் அதை அன்பளிப்புச் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்).