இச்சைக் கசிவினால் குளிப்பு கடமையாகுமா? நோன்பு கூடுமா?

Share this:

ஐயம்: நோன்பு வைத்திருக்கும்பொழுது, மனைவியிடம் இச்சையுடன் பேசினால் ஒரு மாதிரியான திரவம் வெளியாகிறது. இதனால் குளிப்புக் கடமையாகுமா? நோன்பு கூடுமா? (சகோதரர் இம்ரான்)

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

பெருந்துடக்கு நோன்புக்கு இடையூறு அல்ல. நோன்பாளிக்கு உறக்கத்தில் ஸ்கலிதமானால் அவர் நோன்பைத் தொடரலாம். தொழுகைக்குக் குளிப்புக் கடமையாகும்.

“நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள்!” (அறிவிப்பாளர் – ஆயிஷா (ரலி) உம்மு ஸலமா (ரலி) நூல்கள் – புகாரி 1930, முஸ்லிம் 2033, 2035, திர்மிதீ 710)

ஒரு மனிதர் (ஒரு விஷயத்தில்) தீர்ப்புக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நான் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் (ஃபஜ்ர்) தொழுகையின் நேரம் என்னை வந்தடைந்தால், அப்போதும் நான் நோன்பு நோற்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் (ஃபஜ்ர்) தொழுகை நேரம் என்னை வந்தடைகிறது. அப்போதும் நான் நோன்பைத் தொடரவே செய்கிறேன்” என்று விடையளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களைப் போன்றவர்கள் அல்லர். அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே?” என்று சொன்னார். அதற்கு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கைளவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும், எவற்றிலிருந்து நான் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களைவிட அதிகமாக அறிந்தவனாகவும் இருக்கவே நான் விருப்பப்படுகிறேன்” என்றார்கள். (அறிவிப்பவர் – ஆயிஷா (ரலி) நூல் – முஸ்லிம் 2034)

நோன்பாளி வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல் நோன்பை முறித்து விடும். நோன்பாளி தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பரிகாரத்திற்குரிய குற்றமாகும். இச்சை நீர் வெளிப்படுவது நோன்பை முறித்துவிடாது. அதற்காக உளூச் செய்தாலே போதுமானது.

இச்சைக் கசிவு (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக் கேட்க வெட்கப்பட்டு) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிக்) கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். ”அதற்காக உளூ (அங்கத் தூய்மை)செய்வதுதான் கடமை, (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (அறிவிப்பவர் – அலீ (ரலி) நூல்கள் – புகாரி 132, 178, 269 முஸ்லிம் 508, 509 நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக்)

”'(அவ்வாறு இச்சைக் கசிவு வெளிப்பட்டால்) உளூ செய்துகொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை) இன உறுப்பைக் கழுவிக் கொள்வீராக’என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று மேலதிகமாக புகாரி 269வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

பாலுணர்வு ஏற்படும்போது இன உறுப்பிலிருந்து வெளிவரும் பசை போன்ற இளகிய வெண்மை நிற நீர் போன்ற இச்சைக் கசிவில், விந்து வெளியாகும்போது ஏற்படும் துள்ளல் இருக்காது. இது வெளியேறினால் குளிப்புக் கடமை இல்லை, ஆனால் உளூ முறிந்துவிடும். இன உறுப்பைக் கழுவிக் கொண்டு, உளூச் செய்தால் போதும், நோன்பு முறியாது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.