வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன?

Share this:

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே,

ஐயம்:
வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? – சகோதரி உம்மு ஸைனப்

 

தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

“மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்” புகாரீ 2078.

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது – புகாரீ 2391.

போன்ற நபிமொழிகளை வாழ்ந்துகாட்டும் முஸ்லிம்கள் நம் சமுதாயத்தில் பெருகினால் மட்டுமே வட்டியில்லாமல் கடன்பெற வாய்ப்புண்டு. தேவையுடையோருக்குக் கடன் கொடுத்து அல்லாஹ்வின் அருளையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை நம் சமகாலத்தில் அருகிப்போய்விட்டது.

எனவே, வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? என்று கேள்வி கேட்பதைவிட, “கடனின்றிச் செலவுகளை சமாளிப்பது எப்படி?” என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியான இக்காலகட்டத்தில் செலவுக்கேற்றவாறு வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்பதே நியாயமாக இருக்கும். அது இயலாது எனில், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்கேற்றவாறு செலவுகளைக் கட்டுப்படுத்திக் கடனின்றி வாழ்வதே சிறப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் கடன்படுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, “இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், “இறைத்தூதர் அவர்களே! கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகத் தாங்கள் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள். (ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 832, முஸ்லிம் 925, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

மற்ற நேரங்களிலும் நபி (ஸல்) அவர்கள் கடன் சுமையிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் வேண்டி பிரார்த்தனை செய்துள்ளனர்.

இறைத்தூதர்(ஸல்) எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன். அப்போது அவர்கள், “இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன். (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) நபிமொழிச் சுருக்கம் நூல்: புகாரீ 2893.

கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால், கடனாளியாக மரணமடைந்தவரின் ஆன்மா, கடன் அடைக்கப்படும் வரை தொங்கிக் கொண்டிருக்கும் அவலமும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது:
(கடனாளியாக இறந்துவிட்ட) இறைநம்பிக்கையாளரின் உயிர் அவரது கடன் அடைக்கப்படாத வரை தொங்கும் நிலையில் விடப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ 999, இப்னுமாஜா, அஹ்மத்).

கடனாளியாக இறந்து, கடனை அடைக்க எதுவும் விட்டுச் செல்லாதவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மறுத்துவிட்டார்கள் என்ற அறிவிப்பு புகாரீ 2298, முஸ்லிம் 3309, திர்மிதீ 990 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன கடனைத் தவிர” என்று அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்ற அறிவிப்பு முஸ்லிம் 3832 நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் குறித்தான காரியங்களில் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று மேற்கண்ட நபிவழி அறிவிப்புகள் எச்சரிக்கின்றன. கடன் வாங்குவதற்கு முன், கடனைத் திரும்ப செலுத்த இயலுமா? என்பதில் திட்டமிடல் வேண்டும். வாங்கிய கடனை அடைக்க நம்மிடம் சொத்துக்கள் உள்ளனவா என்பதையும் கவனத்தில் கொண்டு தகுதிக்கேற்ற வாழ்வாதார தேவைக்காக மட்டும் கடன் வாங்கினால் கடனை அடைப்பதற்கு எளிதாக அமையும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

oOo

(குறிப்பு: சகோதரியின் மற்ற கேள்விகளுக்கும் தொடர்ந்து விளக்கம் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.