கடன் + முதலீடு

Share this:

அஸ்ஸலாமு அலைக்கும்.

கீழ்க்கண்ட வியாபார உடன்படிக்கைக்கு இஸ்லாமியச் சட்டங்கள் யாவை?

என் கணவரின் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக என் கணவரின் நண்பரொருவர் 15,575 திர்ஹம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தைக் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் கடனாகக் கொடுத்துள்ளார்:

 

  1. இரு தரப்பினரும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டுக் கடனைத் திரும்பப் பெறவோ/தரவோ கூடாது.

  2. ஒவ்வொரு மாதமும் அந்த மாத விற்பனையைக் கணக்குப் பார்த்து, லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை அவருக்குக் கொடுக்க வேண்டும்

  3. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் கொடுத்தவரின் முதலீட்டைத் திருப்பிக் கொடுக்கும்போது தங்கத்தின் விலை உயர்ந்திருந்தால் 100 கிராம் தங்கத்திற்கான அப்போதைய சந்தை மதிப்புத் தொகை திருப்பித் தரப்பட வேண்டும்.  தங்கத்தின் விலை குறைந்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குமுன்னர் இருந்த ஆரம்ப மதிப்பீடான 15,575 திர்ஹம் திருப்பித் தரப்பட வேண்டும்.

இந்த வியாபார நடவடிக்கை ‘ரிபா’வாகக் கருதப்படுமா எனத் தெளிவு படுத்தவும்.  உடனடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.  ஜஸாக்கல்லாஹ்.

– மின்னஞ்சல் வழியாக, சகோதரி கதீஜா.

பதில்:
இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிக் கேட்கப் பட்டிருப்பதால் அவற்றைச் சான்றுகள் மூலம் இங்குப் பார்ப்போம்:

நீண்டகாலக் கடன்/முதலீடு ஆகியவற்றுக்குக் காலவரையறை செய்து கொள்ளுமாறு இறைமறை வசனம் 2:282 வலியுறுத்துகிறது. அதன்படி இரண்டாண்டுகள் காலவரையறை நிர்ணயித்துக் கொண்ட வகையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உடன்படிக்கையின் முதலாவது விதி இஸ்லாமிய வரையறைக்குட்பட்டதாகும்.

ஆனால், அதே வசனம் கூறும் வேறு அம்சங்களை மீறுவதாக இரண்டாவது மூன்றாவது விதிகள் அமைந்துள்ளன. அவை யாவை எனப் பார்ப்போம்:

“ஓரிறை நம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு உங்களுக்குள் கடன் கொடுத்து-வாங்க நேரும்போது, அதை எழுதிப் பதிந்து கொள்ளுங்கள். எழுத்தர், இருவருக்கும் நீதியாக, அல்லாஹ் அவருக்குக் கற்பித்தவாறு எழுதித்தர மறுக்கக் கூடாது. பதியவேண்டிய சொற்களை, கடன் பெறுபவர் தம்மிறைவனான அல்லாஹ்வின் அச்சத்தோடு கூறவேண்டும். கடன் பெறுபவர் அறிவு முதிர்ச்சியற்றவராகவோ வலுவற்றவராகவோ சொல்லுதிர்க்க இயலாதவராகவோ இருப்பின் அவருடைய பொறுப்பாளர் நீதியுடன் பதிவுச் சொற்களைக் கூறவேண்டும். … அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். உங்களுக்கு அல்லாஹ்தான் (சீரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுத் தருகிறான். அல்லாஹ் அனைத்தையும் ஆழ்ந்தறிபவன் ஆவான்” (2:281).

ஒரு நடப்பு வணிகத்தின் முதலீட்டை 900 கிராம் தங்கம்/மதிப்பீடு எனக் கொள்வோம். நண்பரின் கடன் முதலீடு 100 கிராம் தங்கம் சேர்த்து 1000 கிராம் தங்கம்/மதிப்பீட்டில் நடைபறும் வணிகத்தில், மாதக்கணக்குப் பார்த்து நிகர இலாபத்தில் 10% கடன் முதலீடு தந்திருப்பவருக்குத் தருவதாக உடன்படிக்கை எழுதிக் கொள்வதிலும் கொடுப்பதிலும் தவறேதுமில்லை. ஆனால், ஒருமாதத்தில் நடைபெற்ற வணிகத்தில் நட்டமாகிவிட்டால் நிகர நட்டத்தில் 10% தொகையை கடன் கொடுத்த முதலீட்டாளர் பொறுப்பேற்றுக் கொள்ள இசைந்தால் மட்டுமே அவர் இஸ்லாமியப் பார்வையில் ‘வணிகப் பங்காளி’ ஆவார்.

ஏனெனில், வட்டி என்பது ‘இலாபம்’ எனும் ஒருவாசலை மட்டும் உடையது. வணிகம் என்பது ‘இலாபம்-நட்டம்’ ஆகிய இருவாசல்களை உடையது. அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்தான் (அல்குர் ஆன் 2:275):

“வட்டிப் பொருளை உண்பவர்கள், ஷைத்தானால் பாதிக்கப்பட்டு, பித்துப் பிடித்தவன் தட்டுத் தடுமாறி எழுந்து வருவது போன்றே (மறுமையில்) வருவர். ஏனெனில், ‘வணிகம் வட்டியைப் போன்றதே’ என்று அவர்கள் கூறி(அல்லாஹ்வின் சட்டத்தை ஏளனமாய்க் கருதி)னர். அல்லாஹ் வணிகத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்துள்ளான் …”

இருதரப்பினரும் இணங்கி எழுதிக் கொள்ளும் கணக்குப் பார்ப்பது என்பது, வாரமொருமுறையோ மாதமொருமுறையோ ஆண்டுக்கொருமுறையோ விகிதாச்சாரப் பங்கு என்பது இலாபத்திலும் நட்டத்திலும் இருக்க வேண்டும். இரண்டாவது விதிமுறையில் ‘நட்டம்’ என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.

மாதக்கணக்குப் பார்த்து இலாப-நட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பின்னர், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அசல் முதலீடான 100 கிராம் தங்கத்தை/மதிப்பீட்டை – தொடக்க விலையைக் காட்டிலும் கூடுதலோ குறைதலோ – அன்றைய விலை நிலவரப்படி திரும்பப் பெற்றுக் கொள்வது மட்டுமே கடன் முதலீடு கொடுத்தவரின் உரிமை.

கடன் முதலீட்டில் குறைவு செய்யாமல் திருப்பிக் கொடுக்க வேண்டியது கடன்பெற்ற உங்கள் கணவரின் கடமை. ஏனெனில், கடன் என்பது அமானிதமாகும். அல்லாஹ் கூறுகிறான்:

“நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்”
அல்குர் ஆன் 4:58

கடன் முதலீட்டோடு சிறிய/பெரிய கூடுதலான தொகை எதையாவது சேர்த்துக் கொடுப்பது கடன் வாங்கியவரின் விருப்பத்தைப் பொருத்தது:

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்: “நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். ‘இரண்டு ரக்அத் தொழுவீராக!” என்று கூறினார்கள். எனக்கு நபி(ஸல்) தர வேண்டிய கடன் ஒன்றும் இருந்தது. அந்தக் கடனை திருப்பி தந்ததுடன் மேலதிகமாகவும் தந்தார்கள்” (புகாரீ-443).

எனவே, மூன்றாவது விதிமுறையில் கூறப்பட்டிருப்பதும் இஸ்லாமியக் கொடுக்கல் வாங்கலில் அடங்கவில்லையாதலால்,

  • இரண்டாவது விதியாக, தொழிலில் மாதக்கணக்குப் பார்த்து இலாபத்திலும் நட்டத்திலும் விகிதாச்சார அடிப்படையில் கடன் முதலீடு கொடுத்தவர் பங்கு பெறுவது என்றும்

  • மூன்றாவது விதியாக, கடன் முதலீடான 100கிராம் தங்கத்தின் மதிப்பீடு, தொழிலில் முதலீடு செய்யப்படும்போது இருந்த மதிப்பைப் போன்றே திரும்பப் பெறும்போது இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் 100கிராம் தங்கம் அல்லது உடன்படிக்கை முடிவுக்கு வந்து, திருப்பிப் பெறும்போதுள்ள 100கிராம் தங்கத்தின் மதிப்பீடு மட்டுமே கடன் முதலீடு கொடுத்தவரது உரிமை

என்றும் உடன்படிக்கையில் திருத்தம் செய்து கொண்டால் இஸ்லாமிய அடிப்படையில் அனைத்தும் அமைந்துவிடும்.

மேற்காணும் விளக்கம் 100 கிராம் தங்கம், திருப்பிப் பெறத்தக்கக் கடன்+வணிகமுதலீடு எனும் கருத்தில் எழுதப்பட்டது.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.