கருவில் வளரும் குழந்தையை …

ஐயம்:-
இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது மீண்டும் அவர் கருவுற்றிருக்கிறார். பொருளாதார வசதிக் குறையைக் கருத்தில் கொண்டு, குழந்தை பிறந்தால் வளர்க்க முடியுமா? என்ற கவலையோடு கருவில் வளரும் குழந்தையை வேண்டாம் என்று நினைக்கிறார். அந்தச் சகோதரி இப்படிச் செய்யலாமா? குர்ஆன் ஹதீஸ்படி விளக்கம் கூறவும்.

– சகோதரி Parjana (மின்னஞ்சல் வழியாக)


தெளிவு:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …

அதிக மனித இனப் பெருக்கத்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடும் என்றும் ”நாமிருவர் நமக்கிருவர்” என குழந்தைப் பேற்றைத் திட்டமிடாமல், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தை வறுமை வாட்டி வதைத்துவிடும் என்றும் உலக நாடுகள் மக்களை அச்சுறுத்தின!

அதற்காகக் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையும் மக்களிடையே அறிமுகம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுவதற்காக மக்களிடையே செய்யப்பட்ட பிரச்சாரங்களும் விளம்பரங்களும் எல்லா இடங்களிலும் மலிந்து காணப்பட்டன. இவற்றைக் கடந்தகால, நிகழ்கால நாட்டு நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், “கு.க திட்டங்களைத் தீவிரமாகப் பின்பற்றினால் மனித இனம் அடியோடு அழிந்துவிடும் பேராபத்தும் உள்ளன” என்கிற குரலும் மக்களிடையே எழுந்தன!

ஒரு பழைய செய்தி:

சண்டிகார்: “இந்துக்களே, நீங்கள் இனி, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை பின்பற்ற வேண்டாம். இந்துக்கள் ஜனத்தொகை கணிசமாக குறைந்து வருகிறது. அதனால், கு.க. திட்டங்களை கைவிட்டு விடுங்கள்”

யார் இப்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் தெரியுமா? ‘ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்க்’ என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் சுதர்சன்தான் அவ்வாறு வேண்டுகோள் விடுத்தவர்.

பல்வேறு தரப்புகள் மூலம் எடுத்த கணக்கெடுப்புகளில், குடும்பக் கட்டுப்பாட்டு முறையை இந்துக்கள்தாம் அதிகம் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை என்று தெரியவந்துள்ளது. இதுதான் ஆர்.எஸ்.எஸ். உட்பட பல இந்து அமைப்புகளின் அச்சத்துக்கு காரணம்.

இன்னொரு செய்தி:

“ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை” என்ற சட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்திய சீனாவில், இப்போது பெண்கள் பற்றாக் குறையாக உள்ளனர். சீன அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது. சீன மணமகன்களுக்கான மகளிரை அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய சீன அரசு முடிவுசெய்துள்ளது.

மனித இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் மனித இனம் அழியும் வாய்ப்புகள் உள்ளனவே தவிர, இனப் பெருக்கத்தால் பஞ்சம் – வறுமை ஏற்படும் வாய்ப்பேதுமில்லை என்பதை இன்றைய மக்கள் தொகை அதிகரித்தும் வறுமையின்றி எல்லாமும் எல்லாருக்கும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன என்கிற உலக நடப்பே போதிய சான்றுகளாகும்! இதில் முக்கிய வேறுபாடு யாதெனில், கிடைப்பதில் கூட/குறைய கிடைக்கும் விகிதாச்சாரம் மட்டுமே.

இதை வாசித்தீர்களா? :   மூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா?

கேள்விக்கும் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்திற்கும் தொடர்பில்லையே என்று தோன்றினாலும், “கருவில் வளரும் குழந்தை பிறந்தால் வளர்க்க முடியுமா?” என்று நினைப்பது எதிர்காலத்தில் வறுமையை அஞ்சுவதாகவே உள்ளது. வறுமையைக் கொண்டு அச்சுறுத்தப்பட்டு கு.க திட்டம் பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவே மேற்கண்ட சிறு விபரங்கள்.

இனி, கேள்விக்கான விளக்கத்துக்கு வருவோம்.

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள்மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எதையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான் (அல்குர்ஆன் 6:151).

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளை) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும் (அல்குர்ஆன் 17:31).

“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; உங்களுக்கும் குழந்தைகளுக்கும் நாமே உணவு அளிக்கின்றோம்” என்று அல்லாஹ் கூறுகிறான். நம் பெற்றோர் குழந்தையாக இருந்கும்போது அவர்களின் பெற்றோருக்கும், அதற்கு முன்னுள்ள நம் முன்னோருக்கும் சொல்லப்பட்ட வசனம். இன்றும் வறுமையை அஞ்சி குழந்கைளை அழித்திட நினைக்கும் பெற்றோருக்கும் பொருத்தமாகவுள்ளது.

இந்த வசனத்திலிருந்து, மனிதனின் முயற்சி ஒரு பக்கம் இருந்தாலும், செழுமையும், வறுமையும் மனிதனின் கைவசத்தில் இல்லாதது. இறைவன்தான் உணவளிப்பவன் என்பதை வலியுறுத்திப் பல வசனங்கள் குர்ஆனில் அருளப்பட்டுள்ளன. இவ்வித வசனங்களை அறியாத அல்லது அவற்றில் திடமான நம்பிக்கை இல்லாதவர்கள், “எதிர்காலத்தில் குழந்தையை வளர்க்க முடியாது” எனத் தவறாகக் கருதி, கருவில் வளரும் உயிரை அழித்திட முன்வருவர். இஸ்லாத்தின் பார்வையில் இது தவறான முடிவு! மற்றும் தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும்.

தற்காலிகக் கருத்தடையை இஸ்லாம் அனுமதித்துள்ளது. தாம்பத்திய உறவில் கருத்தரிக்காமல் இருக்கப் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்று, ‘அஸ்லு’ – ‘புணர்ச்சி இடைமுறிப்பு’ செய்துகொள்ளலாம் என நபிவழி அறிவிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் உடலுக்குக் கேடு விளைவிக்காத நவீன கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி தற்காலிகக் கருத்தடை செய்து கொள்ளலாம்.

ஆனால், கருத்தரித்தப் பின்னர் கருவை அழிப்பது சிசுக் கொலையாகும்!

உயிருடன் புதைக்கப்பட்ட(பெண் குழந்தையான)வள், என்ன பாவத்திற்காக கொல்லப்பட்டாள்? என வினவப்படும்(அப்)போது … (அல்குர்ஆன் 81:8,9).

இதை வாசித்தீர்களா? :   தொழுகையைச் சுருக்கித் தொழுதல் (கஸ்ரு)

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில், பெண் குழந்தைகள் உயிருடன் புதைத்துக் கொலை செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து மேற்கண்ட வசனம் பேசுகிறது! இதன் அடிப்படையில் கருவில் வளரும் குழந்தை “ஏன் கொலை செய்யப்பட்டது?” என்கிற கேள்விக்கு உள்ளாகாமல், கருவை அழிப்பதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்!

குறிப்பு: கர்ப்பப் பை பலவீனம், மற்றும் நோய் காரணமாக கருவுற்றதால் தாயின் உயிருக்கு அபாயம் என்றிருக்குமானால் தொடக்கத்திலேயே கருச் சிதைவு செய்துவிடுவதில் தவறில்லை. “எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை!” (அல்குர்ஆன் 2:286) என்பதே இஸ்லாம்.

(இறைவன் மிக்க அறிந்தவன்).