ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்

Share this:

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் செய்ய வேண்டிய அமல்கள் யாவை என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.

ஃ’பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் கத்தம் – ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துஆக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ஆம் நாளை, ‘ஷப்-ஏ-பராஅத்’ எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகின்றார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் சிலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின், ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். ‘ஷப்-ஏ-பராஅத்’ இல் உள்ள  ‘ஷப்’ என்பது அரபிச் சொல் கிடையாது; ‘இரவு’ என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். ‘ஏ’காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு ‘ஷப்-ஏ-பராஅத்’ என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்துவிட்டனர். ஆனால் இது நபி (ஸல்) மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.

எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் . இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்  (புகாரி 7306, முஸ்லிம் 3242).

இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும், நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.

நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:

  1. அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை),
  2. அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி),
  3. ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.

இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம் 3083. அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)

நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி (ஸல்) காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.

நபி (ஸல்) மற்ற எல்லா மாதங்களையும்விட – ரமலானுக்கு அடுத்தபடியாக – ஷஃ’பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.

ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்” என்று ஆயிஷா (ரலி) கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார்.(அபூதாவூத், நஸயி).

நபி (ஸல்), ‘நோன்பை விடவேமாட்டார்களோஎன்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் நோன்பிருக்க மாட்டர்களோஎன்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம் 1956).

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லைஎன்று கூறிய போது, நபியவர்கள், “மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ’பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்” என கூறினார்கள் (- நஸயி, அஹ்மத்).

இதற்கு மாற்றமாக ஷஃ’பான் மாதத்தில், பிறை 15இல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு ‘பித்அத்’தான காரியமாகும்.

நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்), நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்காக துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல; துஆச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்துவர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) காட்டித்தந்த வழியாகும்.

வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் தாராது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நம் மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நம் ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.

இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துஆச் செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்), பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.

ரமளானுக்கு ஒரிருநாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம் (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ).

மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.

அதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாகக் குர்ஆன் ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.

அற்புதமான இந்த ஷஃ’பான் மாதத்தை, பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!

ஆக்கம்: அப்துல்லாஹ்

20.08.2007

(மீள் பதிவு)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.