தர்க்கம் தரும் துக்கம்…!

Share this:

தர்க்கம் என்பது இன்று நம்மிடையே பிரிக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது தன்னுடைய கொள்கையை நிலைநாட்ட அல்லது தன் வாதத்தை நிலைநிறுத்த உண்மையா? பொய்யா? என்றுகூட மனிதன் யோசிப்பதில்லை. வாதத்தில் வெல்லவேண்டும் என்பதில் மட்டும் குறிக்கோளாக இருப்பதால் உண்மை பொய்யை அவன் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பது தான் உண்மை. தர்க்கித்தல், வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுதல் என்பன மனித இயல்புகளில் உள்ளதாகும். ஆனால் எடுத்ததற்கெல்லாம், எது விசயமானாலும் தர்க்கம் செய்யும் இயல்பு கொண்டவனாக ஒருவன், குறிப்பாக ஒரு முஸ்லிம் இருக்கலாகாது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

 

அதிகம் தர்க்கம் செய்பவனே அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்புக்குரியவன்! (புகாரி)

 

மேற்குறிப்பிட்ட நபி மொழி முஸ்லிம் திர்மிதி, இப்னுமாஜா, நஸாயீ போன்ற ஹதீஸ் கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது. இது கூறும் கருத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் விளக்கும் வகையிலும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன.

 

இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

 

மனிதன் அதிகமாகவே தர்க்கம் செய்கின்றவனாக இருக்கின்றான். (ஸுரதுல் கஹ்ஃபு: 54)

 

மனித இயல்புடன் கலந்த இப்பண்பை மாற்றி மனித இனத்தை நெறிப்படுத்தும் வியத்தில் அல்குர்ஆனும், ஹதீஸும் அதிகக் கவனம் செலுத்துகின்றன. வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதற்கான அனைத்து வழிகளையும் அவை தடை செய்துள்ளன. சத்தியத்திற்காகவோ, அசத்தியத்திற்காகவோ வாதாட்டத்தில் ஈடுபட்டு கருத்துப் பிளவு கொண்டு பிரிந்திருப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது!

 

அபூதர்தா (ரலி), அபூஉமாமா (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) போன்றோர் பின்வரும் சம்பவத்தை அறிவிக்கின்றனர்:

 

ஒரு நாள் நாம் மார்க்க விசயமொன்று பற்றித் தர்க்கம் செய்துகொண்டிருந்த சமயம் அல்லாஹ்வின் தூதர் எம்மிடம் வந்தார்கள். முன்னொரு போதும் இல்லாதவாறு கடுங்கோபத்துடன் காணப்பட்ட அவர்கள் அவ்விடத்ததை விட்டு எம்மை விரட்டினார்கள். பின்னர் எம்மை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்:

 

ஓ! முஹம்மதின் சமூகத்தினரே! சற்றுத் தாமதித்துச் செல்லுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்தினர் அழிந்தது இதன் மூலம் தான். தர்க்கம் செய்வதை விட்டு விடுங்கள். அதனால் ஏற்படும் நன்மை குறைவாகவே இருக்கிறது. இறைவிசுவாசி தர்க்கம் செய்வதில் ஈடுபட மாட்டான். தர்க்கம் செய்வதை விட்டு விடுங்கள். தர்க்கம் செய்பவனுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. தர்க்கம் செய்வதை விடடு விடுங்கள். தர்க்கம் செய்பவனாக இருப்பதே பாவங்கள் அனைத்துக்கும் போதுமானது. தர்க்கம் செய்வதில் அறவே ஈடுபடாதீர்கள். தர்க்கம் செய்பவனுக்காக மறுமையில் அல்லாஹ்விடத்தில் நான் பரிந்து பேச மாட்டேன். தர்க்கம் செய்பவதை விட்டு விடுங்கள். உண்மை பேசுகின்ற நிலையிலும் தர்க்கம் செய்வதை விட்டு விடுகின்றவனுக்கு சுவர்க்கத்தின் சுற்றுப் புறத்திலும், அதன் மத்திய பகுதியிலும் இருப்பார்கள்.” 

 

இவ்வாறு எச்சரிப்பது மட்டுமல்லாமல் அப்படியே சில நேரங்களில் விதண்டாவாதம் செய்யக்கூடியவர்களிடம் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டுமென்றும் இறைவன் கூறுகின்றான்

 

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ஸலாம் ‘ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள் (அல்குர்ஆன் 6:35)

 

விதண்டாவாதத்தைத் தவிர்த்து நல்ல முறையில் விவாதித்தால் பலனும் அல்லாஹ்வின் அருளும் கிடைக்கும்.

அபு உமாமா அல்-பஹிலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், “எவர் ஒருவர் தான் சரியான கருத்திலிருந்த போதிலும் தர்க்கம் புரிவதிலிருந்து தவிர்த்துக் கொள்வாரோ அவருக்கு ஜன்னத்தில் (சுவர்க்கத்தில்) ஒரு வீடு கிடைக்க நான் உத்திரவாதமளிக்கின்றேன்; இன்னும், எவர் ஒருவர் விளையாட்டிற்காகவெனினும் பொய் பேசுவதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு ஜன்னத்தின் (சுவர்க்கத்தின்) நடுவில் ஒரு வீட்டிற்கு நான் உத்திரவாதமளிக்கின்றேன்; இன்னும் எவரிடம் நன்னடத்தையுள்ளதோ அவருக்கு ஜன்னத்தின் (சுவர்க்கத்தின்) உயர்ந்த இடத்தில் ஒரு வீட்டிற்கு நான் உத்திரவாதமளிக்கின்றேன்”.

ஒரு பிரச்சினையை வைத்து தர்க்கம் செய்து பிரிவினையை உருவாக்குவதை விட்டும் விலகிக் கொள்ளும் முகமாக, ஒருவர் தான் சரியான கருத்தில் இருப்பினும் தன்னுடைய உரிமையையும் கூட விட்டுக் கொடுத்து பின் வாங்கும் மனப்பான்மை மிகவும் உயர்ந்த தகுதியும் தரமும் வாய்ந்ததாகும். உண்மையை நிலைநாட்ட அழகிய முறையில் விவாதம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கும் அதேவேளை, அவ்விவாதத்தின் மூலம் மற்றவர் மீது காழ்ப்புணர்வும், கர்வமும், அகந்தையும் ஏற்படாமலும் அதன் மூலம் சமூகத்தில் பிரச்சனை எழுந்து சமூகம் பிளவுபடாமல் இருக்கவும் வலியுறுத்துகின்றது. அந்நிலையில் உண்மை தன் பக்கம் இருப்பினும் எவர் அதிலிருந்து பின்மாறுகின்றாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு வீடு எழுப்பப்படுகின்றது.

அதேபோன்று ஒருவர் இஸ்லாமிய ஷரீஆக்க(சட்டங்க)ளான அல்லாஹ் மற்றும் அவன் தூதர்(ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு உண்மையிலேயே முக்கியத்துவம் அளிப்பாராயின், அவர் கட்டாயம் பொய்யானவற்றை அரட்டையிலோ அல்லது நகைச்சுவைக்காகவோ பயன்படுத்துவதை விட்டும் கூட ஒதுங்கிக் கொள்வார். சாதாரணமாக மக்கள் இது போன்ற சூழ்நிலைகளில் பொய்யானவை பேசப்படுவதை பொருட்படுத்துவதில்லை. இன்னும் சிலர் இதற்கு அங்கீகாரமும் அளிப்பர். ஆயினும் அல்லாஹ் இதை அங்கீகரிக்கவில்லை. இது எவ்வித தீங்குமற்ற துச்சமான   நிலையிலுள்ள ஒரு தவறாக இருப்பினும் பொய்யை விட்டு முழுமையாக ஒதுங்கிடவே தனது அடியார்களுக்கு அவன்(அல்லாஹ்) கட்டளையிடுகின்றான். அப்படிப்பட்டவர்களுக்கு பரிசாக சுவனத்தின் மத்தியில் இருப்பிடம் அமைக்கப்படுகின்றது.

எல்லா தராதரத்திலும் நல்லொழுக்கம்என்பது நிகரற்ற மதிப்புடையது. ஏனெனில் ஒருவரிடம் சிறந்த பண்புகள் குடிகொள்ளாமல் எந்த தவறும், தீமையும் அவரிடமிருந்து முழுமையாக அப்புறப்படுத்த முடியாது. நல்லொழுக்கமென்பது எல்லா விதமான நன்மைகளையும் மிஞ்சக்கூடிய(தன்மை வாய்ந்த)தாகும். நல்லொழுக்கமுடையவர்கள் எப்பொழுதும் உயர்ந்த இடத்திலேயே மதிக்கப்படுவர். இதனாலேயே நல்லொழுக்கம் உடையவர்களுக்கு சுவனத்தின் உயர்ந்த இடத்தில் இருப்பிடம் அமைக்கப்படுகின்றது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.