திருமறையைப் பற்றிய தவறான புரிதல்கள்

Share this:

புகழனைத்தும் இறைவனுக்கே! 

 

அலிஃப், லாம், மீம்!.

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

{mosimage}(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற(வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.  (அல்குர்ஆன் – 2:1-5)

இவை அல்குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் அறிமுக வசனங்களாகும். இந்த அற்புதமான வசனங்களுக்குள்ளேயே, ரத்தினச் சுருக்கமாக  அல்குர்ஆன் எப்படிப்பட்டது? அது யாருக்கு நேர்வழி காட்டும்? அத்தகைய நேர்வழி பெற்றவர்களுடைய தன்மைகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதையும் அழகாகச் சொல்லி, அவர்களே வெற்றியாளர்கள் என்றும் மனிதர்களின் இறைவன் பிரகட னப்படுத்துகிறான்.

எனவே, உலக மக்கள் தம்மிடையே ஜாதி, மத, இன, மொழி, வேறுபாடுகளை மறந்து, சிந்தித்துத் தெளிவு பெறுவதற்காக, இறைவனால் இறக்கிவைக்கப்பட்ட, வாழும் அற்புதமான இறைமறை குர்ஆனில் என்ன தான் இருக்கிறது என்பதைப் பகுத்தறிவுடன் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருமே மிகவும் ஆழமாக அலசி ஆராய்ந்து, அது காட்டும் நேர்வழியை அறிந்து கொள்ள நிச்சயமாகக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

அல்குர்ஆன் எனும் மாபெரும் அறிவுக் கருவூலத்தை, இதுவரை பல்லாயிரக்கணக்கான உலக அறிஞர்கள், அரபுமொழிப் பண்டிதர்கள், மகான்கள் எல்லோரும் அக்குவேறு ஆணிவேறாக வருடக்கணக்கில் அலசி ஆராய்ச்சி செய்து, தத்தமது கருத்துக்களையும், வியப்புக்களையும், தாம் பெற்ற அனுபவங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவ்வாறு ஆராய்ச்சி செய்த அவர்கள் அனைவருமே, “இது மனிதனால் உருவாக்கப்பட்ட வெறும் வாசகங்கள் அடங்கிய புத்தகம் இல்லை” என்ற உண்மையினை ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்களே தவிர, எவருமே தாங்கள் முழுமையாக ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டதாகக் கூறவில்லை.

சட்டம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், வரலாறு, விவசாயம், பொறியியல், வானியல், மருத்துவம், சமூக நல்லுறவு, கொடுக்கல், வாங்கல், குடும்ப வாழ்க்கை, குற்றவியல், ஒழுக்கம், சுத்தம், நற்பண்புகள் என மனிதன் அறிந்த, அறியாத, கற்பனைக்குக்கூட எட்டாத பல்வேறுபட்ட மனிதன் வாழத் தேவையான உண்மைத் தத்துவங்களுடன், மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ள அத்தனை இயல்புகளையும், ஒன்று கூட விடாமல் மிகத்தெளிவாகவும், நூற்றுக்கு நூறு மிகச் சரியாகவும் அணு அணுவாக விவரித்து இருக்கும் அல்குர்ஆனின் அற்புதத் தன்மையினை சொற்களுக்குள் அடக்கிவிடமுடியாதென்பதை, அதை வாசிக்கும் எவரும் அனுபவப்பூர்வமாக உணர்வர்.

அவ்வாறிருக்க, திருமறைக்கு விளக்கம் சொல்லும் பாசாங்கில் குறுகிய காலத்தில் ‘திடீர்’ புகழ் பெறுவதற்காக மேதாவிகள் என்று அறிமுகமாகியுள்ள சிலர் இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பிக்கும் விஷம நோக்கில், அதற்கு விளக்கம் அளிக்கிறோம் என்ற பெயரில், இறைமறை குர்ஆனில் காணப்படும் சில வசனங்களுக்கு, உண்மையான விளக்கங்களை விடுத்து தமது சுய அறிவிற்கேற்பத் திரித்துப் பொருள் கொடுத்து முஸ்லிமல்லாதவர்களையும், ஏன் இஸ்லாத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்களையும் கூடத் தமது தவறான விளக்கங்கள் மூலம் குழப்பி வருகிறார்கள். மேலும், முன் பின் வசனங்கள் மற்றும் இறக்கியருளப்பட்ட சந்தர்ப்பங்களை இவர்கள் தங்களின் குழப்பவாதத்திற்கு வசதியாக மறைத்தும் விடுகிறார்கள்.

இத்தகையவர்களின் தவறான அணுகுமுறை கொண்ட பிரச்சாரங்களைக் கண்ணை மூடிக் கொண்டு எவ்வித சிந்தனையோ, ஆராய்ச்சியோ இன்றி தங்களின் அறியாமையினால் இவர்களின் சூழ்ச்சியில் சிக்குண்ட சிலரைப் பார்க்கின்றபோதும், இவர்களின் பிரச்சாரங்கள் போன்றவற்றை எதேச்சையாக காண்கின்ற போதும் புதிதாக இஸ்லாத்தில் இணைய  விரும்புபவர்களுக்கு, “சரியான இஸ்லாம் எது? அல்குர்ஆன் தெளிவாக எதைச் சொல்கின்றது? நபி (ஸல்) அவர்களின் உண்மையான முன்மாதிரி என்ன?” என்பனவற்றைப் புரிந்து கொள்வதில் பல சிக்கல்களும், சிந்தனைக் குழப்பங்களும் ஏற்படுகின்றன.

ஏதோ துரதிர்ஷ்டவசமாக, இத்தகையவர்களின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகும் முஸ்லிம் அல்லாதவர்களும், முஸ்லிம்களில் சிலரும், இஸ்லாத்தை வன்முறை மார்க்கம் என்பன போன்ற தவறான அபிப்பிராயங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க இஸ்லாமிய அறிஞர்கள் சிலரின் தவறான போதனைகளால் சில இஸ்லாமிய சகோதரர்கள் கூட, “அல்குர்ஆன் பிரதிகளை பிற சமயத்தவர்களிடம் ஒப்படைப்பது தவறானது; அதை உடல் சுத்தம் இல்லாதவர்கள் தொடக்கூடாது” என்பன போன்ற பிழையான கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதால், அல்குர்ஆனின் பிரதிகளும், அதன் உண்மையான யதார்த்தங்களும் உலக மக்கள் அனைவரையும் முறையாகச் சென்றடைவதில்லை.

ஆனால் உண்மை அவ்வாறன்று. அல்குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருமே, வாசித்தறிந்து தெளிவுபெற வேண்டிய வேதம் என்பதனையும், அது படிக்கத் தெரிந்த சிந்தனை சக்தி கொண்ட அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய மிக எளிய மொழி நடையிலேயே, எளிதில் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய எடுத்துக்காட்டுகளுடன் இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அல்லாஹ்வே அல்குர்ஆனில் தெளிவாகக் கூறி இருக்கிறான்.

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.(அல்குர்ஆன் – 81:27)

நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் – 54:32)

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்குர்ஆன் – 39:27)

இன்னும் சில பிற சமய அன்பர்கள் மற்றும் குர்ஆனை படிக்கத்/சிந்திக்கத் தெரியாத முஸ்லிம்களில் சிலர், இஸ்லாம் தொடர்பாக  தங்களுக்கேற்படும் ஏதாவதொரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, முஸ்லிம் அறிஞர்கள் என தங்களால் இனங்காணப்பட்ட, குறிப்பிட்ட ஒருவர் அல்லது இருவரின் கருத்துக்களை மட்டும் அறிந்து கொண்டு  அந்த விளக்கங்கள் தவறாக இருந்தாலும் கூட  அறியாமையினால், “இப்படித்தான் இஸ்லாத்தில் சொல்லப் பட்டிருக்கிறது போலும்” என்று தவறாக நினைத்துக் கொள்கின்றார்கள்.

அது மட்டுமல்லாமல், கேட்கப்படும் சந்தேகங்களுக்கு அக்குறிப்பிட்ட ஓரிரு நபர்களால் விடையளிக்க முடியவில்லை அல்லது அவர்களுக்கு விடை தெரியவில்லை என்றால், “இஸ்லாத்தில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடையாது” என்று தவறாக முடிவெடுக்கவும் செய்கிறார்கள்.

மேலும், இஸ்லாத்தை சரியான முறையில் அறியாது  வெறுமனே முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருக்கக்கூடிய ஒரு சிலர் செய்யும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் பிற சமயத்தவர்களிடம் இஸ்லாம் பற்றி இருக்கக்கூடிய நல்ல எண்ணங்களைச்   சிதைப்பதோடு தவறான எண்ணங்களை வளர்த்தும் விடுகின்றன.

இவ்விடத்தில் முஸ்லிமல்லாத சகோதரர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் என்பது, இதமான அணுகுமுறைகளையும், அறிவார்ந்த வழிகாட்டுதல்களையும் கொண்ட, ஒரு முழுமையான இனிய வாழ்க்கைத் திட்டமாகும். முஸ்லிம் பெயர்கொண்ட சிலர் அதனை துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டு, “இஸ்லாம் என்றால் இதுதானா?” என வெறுப்படையாது, உண்மையானதும் மிகச் சரியானதுமான இஸ்லாத்தை அறிந்து கொள்ள அதற்குரிய பொருத்தமான வழிகளை அவர்கள் நாட வேண்டும்.

அதற்கு உண்மையை அதன் சரியான வடிவில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு, ஆகக் குறைந்தது ஒரே ஒரு தடவையாவது, அல்குர்ஆனை முழுமையாக படித்துப் பார்க்க முயல வேண்டும்.

அது அவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் மறக்க முடியாத பல திருப்பு முனைகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.

நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன!எவர் அவற்றை(கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும். எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும். ‘நான் உங்களைக் காப்பவன் அல்லன்’ (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன் – 6:104)

கட்டுரையாக்கம்: முஹம்மது மஸாஹிம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.