நேசம்!

நேசம் அன்பு என்பது உணர்வுப்பூர்வமானது. அது இல்லாமல் இவ்வுலகம் இல்லை எனலாம். இவ்வுலகத்தின் இயக்கமே உயிர்கள் தங்களுக்கிடையில் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் நேசத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்றால் மிகையில்லை. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களக்கு பிரியமானவர்களுக்கிடையில் நேசத்தால் கட்டுண்டு கிடக்கின்றனர்.

பிறந்த நிமிடம் பாசத்தால் தன் தாயோடு பிணையும் மனிதன், இறக்கும் வரை அந்த பாசத்திற்குக் கட்டுப்பட்டு அதனோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்து மடிகின்றான். அவன் மற்றவர்கள் மீது காட்டும் நேசத்தின் அளவுக்கு தகுந்தது போல் அவன் இறந்த பின்னும் இவ்வுலகில் நினைவு கூரப்படுகின்றான். அந்த வகையில் மனிதர்கள் தமது வாழ்வில் தாம் சந்திக்கும் பலரில் சிலரையாவது உளப்பூர்வமாக உண்மையாக நேசிக்கின்றனர். அந்த நேசம் சிலரது வாழ்வில் தமது உயிரை துச்சமாக மதித்து இழப்பது வரையில் கொண்டு சென்று நிறுத்தி விடுகின்றது.

படைத்த இறைவனுக்கு அடிபணிந்த ஒரு முஸ்லிமை பொறுத்தவரை நேசம் என்பதும் மற்றவரை உளப்பூர்வமாக நேசிக்க வேண்டும் என்பதும் மார்க்கத்தோடு தொடர்புடைய மிக முக்கியமான ஒன்றாகும். மார்க்கத்தை முழுமையாக அறியாத ஒரு முஸ்லிமை நோக்கி, ஒரு முஸ்லிமின் முழுமையான நேசத்திற்கு உரித்தவராக யார் இருக்க வேண்டும்? யாரின் மீது ஒரு முஸ்லிம் உண்மையான நேசம் கொள்ள வேண்டும்? முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலான நேசத்திற்குரியவராக யாரை ஆக்கிக் கொள்ள வேண்டும்? என்று கேள்வி கேட்கப்பட்டால் அவர் எவ்வித தயக்கமும் இன்றி, “அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள்” என்று சொல்வார்.

உங்களில் ஒருவர் முஃமின் ஆக முடியாது. எதுவரையில் என்றால் தன் உயிரையும் தன் பிள்ளைகளையும், பெற்றோரையும், எல்லா மக்களை விடவும் நான் அவனுக்கு பிரியத்திற்குள்ளவனாக ஆகும் வரையில்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதுதான் இஸ்லாம். இஸ்லாத்தின் அடிநாதமே இதுதான். ஒருவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்கின்றார் என்றால் அதன் அர்த்தம், அவர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறிய அனைத்தையும் உண்மை என்று ஒப்புக் கொண்டார் என்றும் அதனை தமது வாழ்வியல் நெறியாக கடைபிடிக்க வாக்கு கொடுக்கின்றார் என்பதும் ஆகும்.

இன்று உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம்கள், தமது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை அமைத்துக் கொண்ட முஸ்லிம்கள், அதனை இவ்வுலகுக்கு தமது வாழ்வை அர்ப்பணித்து வெளிச்சமிட்டு காட்டிய முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்வை போன்று தமது வாழ்வை அமைத்துக் கொள்வதாக மனதில் உறுதி கொண்ட முஸ்லிம்கள் இன்று அவ்வாறு தான் வாழ்கின்றார்களா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இதை வாசித்தீர்களா? :   இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்!

ஒருவரை உளப்பூர்வமாக நேசித்தல் என்பது வெறுமனே நான் இன்னாரை நேசிக்கின்றேன் என்று கூறுவதனாலோ, அவரை பலவாறாக புகழ்வதனாலோ முழுமை பெற்று விடுவதில்லை. உளப்பூர்வமான நேசத்தின் வெளிப்பாடு என்பது அவரை அப்படியே அடியொற்றி வாழ்வதன் மூலமும், அவரது கொள்கைகளை, கருத்துக்களை தங்களது வாழ்வில் வெளிப்படுத்துவதன் மூலமுமே பூர்ணமடையும்.

ஆனால் இன்று முஸ்லிம்கள் அப்படித்தான் வாழ்கின்றார்களா?. ஒவ்வொரு முஸ்லிமும் தம்மை தாமே கேட்க வேண்டிய கேள்வியாகும் இது. நபி(ஸல்) அவர்களை தமது உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும் என்பது உண்மையில் இன்று தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு இஸ்லாமை தமது வாழ்வில் வெளிப்படுத்துவதற்கு பதிலாக வெறும் பேச்சோடும், நபி(ஸல்) அவர்களை வெறுமனே மேடையிட்டு புகழ்வதோடும் இன்று நிறுத்திக் கொள்கின்றனர். உயிரினும் மேலாக நேசிப்பதன் முழு உட்பொருளை விளங்காததே இதன் காரணம்.

அல்லாஹ்வையும், ரஸூலையும் நேசிப்பது என்பது ஒவ்வொருவரும் தமது வாழ்வில் ரஸூல் காட்டிய வழிமுறைப்படி வாழ்வதில் வெளிப்பட வேண்டும். நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாக தமது வாழ்க்கையில் கடைபிடிப்பதே அவர்களை நேசிப்பது என்பதன் முழுமையான அர்த்தமாகும். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்;

(நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிக்கவும் செய்வான். அல்லாஹ் மிகுதியாக மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (அல் குர்ஆன் 3:31) 

நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் முஸ்லிம்களுக்கு நல்லதோர் முன்மாதிரிகளாவர். ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களை நேசிப்பதிலும், தீனை வாழ்க்கையில் நடைமுறைபடுத்துவதிலும், தமது உயிர்கள், உடைமைகளை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் முழுமையாக தங்களை அர்ப்பணித்தனர்.

குபைப்(ரலி) அவர்களிலிருந்து நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இப்னு உமர்(ரலி) வரை ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது நேசத்தை உண்மமயாகவே தமது உயிரை தந்து வெளிப்படுத்தியமைக்கு பல்வேறு உதாரணங்கள் வரலாற்றில் நிறைந்து காணப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்களின் கூற்று ஒவ்வொன்றையும் தமது வாழ்க்கை ஆணிவேராக கொண்டு முஸ்லிம்களை இயங்கச் செய்ய வேண்டும். அதுவே உண்மையான நேசத்தின் வெளிப்பாடாகும்.

நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று விஷயங்கள் ஒருவரிடத்தில் இருப்பின் அவன் ஈமானின் சுவையை கண்டு கொள்வான்.

1) ஏனைய அனைத்தையும் விட, அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனிடத்தில் உவப்பிற்குரியவர்களாக இருக்க வேண்டும்.

2) ஒரு மனிதரை நேசிப்பதாயின், அவரை அல்லாஹ்வுக்காகவே நேசிக்க வேண்டும்.

3) நரக நெருப்பில் போடப்படுவதை ஒருவன் எந்தளவு வெறுப்பானோ, அந்தளவு மீண்டும் இறைநிராகரிப்புக்கு திரும்புவதை வெறுக்க வேண்டும்.” (புகாரி, முஸ்லிம்).

ஒரு முஃமின் இந்த விஷயங்களை கைகொண்டு நடப்பானேயானால், அவன் அழகான குணத்தால் மிளிர்வான். நபி(ஸல்) அவர்கள் காண்பித்துத் தராத பித்-அத்களுக்கு அவனது வாழ்வில் இடமே இருக்காது. மட்டுமல்ல நபி(ஸல்) அவர்களின் சுன்னத் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து பின்பற்றுவதில் முனைப்பு காட்டுவான்.

இதை வாசித்தீர்களா? :   சிறந்த சமுதாயம்

நபி(ஸல்) அவர்களை நேசிப்பதன் தாக்கம், நபிமொழிகளை கண்மணிகளாக போற்றி வாழ்வில் சீராக நடைமுறைபடுத்துவதில் பிரதிபலிக்க வேண்டும். அதுவே உண்மையாக நபி(ஸல்) அவர்களை நேசிப்பதன் அர்த்தமாகும்.

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும் (அல் குர்ஆன் 79:40-41)

ஆக்கம்: உம்மு ஹிபா