மனித வாழ்வின் இலக்கு

Share this:

இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி மனித வாழ்க்கையை உலகம் என்ற சிறிய, குறுகிய பகுதியோடு மட்டும் முடித்து விடுவதில்லை. மனிதன் உலகில் தோன்றியது முதல், சுவர்க்கம் அல்லது நரகம் என்பதுவரையில் வாழ்க்கைப்பயணம் நீண்டிருக்கின்றது என்பது அதன் திட்டவட்டமான அடிப்படையாகும். செயல்களின் பெறுமானம் இந்த கணிப்பீட்டை வைத்தே மதிப்பிடப்படல் வேண்டும். இந்த வகையில் இறைநம்பிக்கையின் அடிப்படையில் செயல்கள் அமையாதபோது அது எந்தப் பெறுமானமும் இல்லாததாக மாறி விடுகிறது.

பூமியில் வாழக்கூடிய எந்த ஒரு மனிதனும் அவனுக்கென்ற ஒரு லட்சியம் இல்லாமல் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. தன்னுடைய ஏதோ ஒரு லட்சியத்துக்காக மனிதன் இரவும் பகலும் அயராது ஓடிக்கொண்டே இருக்கின்றான். ஓடுகின்ற ஓட்டத்தில் நாம் ஏன் ஓடுகின்றோம் என்று ஒரு நிமிடம் சிந்தித்தால் அந்த வாழ்க்கை ஓட்டத்தை பயனுள்ளதாக ஆக்கி கொள்ள அவனால் முடியும். அதோடு மட்டுமல்லாது அதனால் ஏற்படக்கூடிய இன்னல்களையும் அவன் தைரியமாக எதிர் கொள்ளமுடியும்.

 

இத்தகைய பரந்த கண்ணோட்டத்தில் மனிதன் செயல்களை நோக்குவதில்லை. துரதிஷ்டவசமாக மனிதன் ஏனோ இவ்வாறு சிந்தித்தும் பார்ப்பதில்லை. குறிப்பாக உலக முன்னேற்றங்களிலும் மதச்சார்பற்ற சிந்தனையிலும் மூழ்கி, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நவீனக்கால மனிதன், உலகாயாத அடிப்படையில் செயல்களை நோக்குகிறான்.

 

பௌதிக உலகில் மனிதனின் சாதனைகள் இன்று அளப்பரியனவாகும். இயற்கையின் சக்திகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரும் அவனது முயற்சி படிப்படியாக வெற்றியடையத் துவங்கியதும், இறை நம்பிக்கை என்பது அநாகரீக காலத்தில் வாழ்ந்த பயந்த, பலவீனமான மனிதனுக்கே தேவைப்பட்டதாக ஆகி விட்டது. பலமும், சக்தியும் கொண்டு பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலும் நவீனகால மனிதன், அத்தகைய அடக்கியாளும் சக்தி கிடைத்தவுடன் இறைவன் ஏன்? இறைவனுக்கு கீழ் பணிய வேண்டிய அவசியம்தான் என்ன? என்று இறுமாப்புடன் பேசத் துவங்கி இறைவனை நிராகரிக்கும் நிலைக்கு வந்து விட்டான். இவை அனைத்தும் நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வில் கிடைக்கும் வெறும் பௌதிக நேட்டங்களே என்பது மட்டும் அவன் சிந்தையில் உறைக்கவே இல்லை.

 
இறைநிராகரிப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்வு பொதுவாக வரலாறு நெடுகிலும் இவ்வாறுதான் அமைந்துள்ளது. திருக்குர்ஆனின் ஷுஅரா, ஹூத் போன்ற ஸூராக்கள் ஆத், ஸமூத் சமூகங்கள் பௌதிக உலக வாழ்வில் கண்ட முன்னேற்றங்களால் எத்தகைய மனோ நிலை கொண்டு வாழ்ந்தார்கள் என்பதை விளக்குகின்றன.  அவர்களது செயற்பாடுகளால் பௌதிக உலகில் அதிசயங்கள் நிகழ்ந்தன. அற்புதமான கட்டடக் கலைத்திறனைக் கையாளும் திறமையைப் பெற்றவர்களாக வாழ்ந்த அவர்கள், மலைகளில் கோட்டைகளை நிர்மாணித்து, பூமியில் அதிசயம் புரிந்தனர். நாம் நிரந்தரமாக வாழ்வோம், எமக்குக் கிடைத்திருக்கும் செல்வமும் பலமும் அழிந்து போகப் போவதில்லை என அவர்கள் கருதத் துவங்கினர். ஹூத், ஸாலிஹ்(அலை) ஆகிய இரு தூதர்களும் இவர்களின் இந்தப் போக்கைக் கண்டித்தார்கள். அல்லாஹ்வின் பால் அவர்களை அழைக்க இத்தூதர்கள் அரும்பாடுபட்டார்கள். இறுதியில் அதனைச் செவியேற்காத அனைவரையும் அல்லாஹ் அழித்து விட்டான். ஸூரா ஷுஅரா 123-150 வரையுள்ள வசனங்கள் இக்கருத்தை விளக்குகின்றன.

 

இறைநிராகரிப்பை அடிப்படையாகக் கொண்டு எழும் தனி மனித வாழ்வு, சமூக வாழ்வு, இறைநிராகரிப்பை அடித்தளமாகக் கொண்டமையும் நாகரீகம் அனைத்தும் எத்தகைய பிரயோசனத்தையும் கொடுக்காமலேயே அழிந்து போகும் என்பது மிக அடிப்படையானதொரு உண்மை. இதனை நிரூபிக்கும் வகையில் அல்குர்ஆன் முன்வைக்கும் வரலாற்று நிகழ்வுகளில் ஒரு உதாரணம் மட்டுமே மேலே தரப்பட்டது. இக்கருத்தை சுருக்கமாகத் தருகிறது கீழ்வரும் இறைவசனம்:

 

(தம்)செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும் மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.(18:103-105)
 

செயல்களின் உண்மைப் பெறுமானம் மறுமையில் அது கொடுக்கும் விளைவைப் பொறுத்ததே. இந்த உலகம் நிரந்தரமானதல்ல. மனிதன் இந்த உலகில் என்ன உழைத்தாலும், என்ன திரட்டினாலும் அவை அனைத்தும் அழிந்து போகும். அவனும் அழிந்து போவான் என திருக்குர்ஆன் கூறுகிறது.

 

அன்றியும், எவர்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும் தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான். (அதன்படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான் மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.(24:39)
 

வாழ வேண்டும் என்ற தாகம் கொண்டோன் – உலகப் பொருட்களே தன் தாகத்தைத் தீர்க்கும் என நம்புகிறான். ஏனெனில் அதற்கு அப்பால் பார்க்கும் ஆற்றல் அவனுக்கில்லை. அவனது முயற்சி முழுக்க முழுக்க உலகப் பொருட்களைத் திரட்டுவதிலேயே செலவாகிறது. உணவு , உடை, வீடு, சுகாதார வசதிகள் இப்படி தேடித் தேடி குவிக்கிறான். தன்னைக் காக்கும் அரும் பொருட்கள் இவை என அவன் நம்புகிறான். தாகத்தோடு தூரத்தில் நின்று பார்க்கும் போது வெட்டவெளியிலே கானல் நீர், உண்மை நீர் போன்று தெரிகிறது. அள்ளிப் பருக ஓடோடி வருகிறான். இவ்வாறு தான் சேர்த்து வைத்த பொருட்கள் இருக்க அவற்றைப் பாதி அனுபவிக்கும் போதே அல்லது அனுபவிக்க முடியாமலேயே இறந்து போகிறான் மனிதன். இறைவனால் மறுமையில்   எழுப்பப்படுகிறான். அப்பொழுதுதான் தெரிகிறது தான் இவ்வளவு காலமும் உலகம் தான் வாழ்வு என்ற மாயையில் ஏமாந்து போனேன். வாழ்க்கைக்கான பொருட்களை மட்டுமே பெற்றிருந்த உலகத்தின் காட்சி வெறும் பொய்த் தோற்றம். அது வெறும் கானல் நீர் என்பது அப்போது தான் அவனுக்குப் புரிகிறது. அந்தப் பொய் நீரை தொடர்ந்து ஓடி வந்தேனே எத்தகைய கைசேதம். சேமித்த செல்வம், பெற்றிருந்த அதிகாரம், அனைத்தும் அழிந்து போயின. உலகில் இருந்த எதுவும் இங்கில்லை. அவை இல்லாவிட்டாலாவது பரவாயில்லை. தான் யாரை நிராகரித்தேனோ அந்த அல்லாஹ் நிற்கின்றானே என்பது தான் அடுத்த அதிர்ச்சி நிராகரிப்பாளனுக்கு.

 

அல்லாஹ் அவனது செயல்களுக்கான கணக்கைப் பூரணமாகத் தீர்த்து விடுவான். இந்த உலக வாழ்வு மறுமை வாழ்வோடு ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலம். அது மட்டுமல்ல. பொதுவாக இந்தப் பூமியின் வயதோடு ஒப்பிடும் போது தனிமனித வாழ்வு என்பது மிக மிக அற்பமான காலப்பகுதியாகும். அல்லாஹ்வின் கேள்வி கணக்கு மிக விரைவானது. நீண்ட நெடுங்காலம் நிராகரிப்பை இவ்வுலகில் அவன் விட்டு வைக்கவில்லை. வாழ்க்கைத் தாகத்தைத் தீர்க்க உலகத்தைக் கட்டியாளும் எல்லா மனிதர்களுக்கும் இந்த உதாரணம் பொருந்தும். இந்த வாழ்வு நிலையற்றது. மறுமையில் கணக்குத் கேட்கப்படும்போதுதான்  எவ்வளவு மோசமாக நாம் ஏமாந்து விட்டோம் என்பதை இறைநிராகரிப்பில் வாழ்ந்த ஒவ்வொரு தனிமனிதனும் விளங்கிக் கொள்வான். அல்குர்ஆன் சொன்ன உதாரணத்தின் ஒரு பக்கம் இது. அது தரும் இன்னொரு கருத்தும் நோக்கத்தக்கது.

 

பௌதிக உலகும் அதன் செல்வங்களும் வாழ்வின் அடிப்படை என நினைத்து அவற்றைத் தளமாகக் கொண்டு எழுகிறது ஒரு சமூக வாழ்வு. அச்சமூகத்தின் செயல்கள் மிகப் பெரிய விளைவுகளைத் தருகின்றன. வாழ்க்கை வசதிகள் பெருகுகின்றன. எண்ணற்ற கண்டுபிடிப்புகள், இயற்கையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் மிகப் பெரிய முயற்சிகள் சிறிது சிறிதாக வெற்றியடைகின்றன. வாழ்க்கைத் தாகம் தீர்ந்தது. அதோ தெரிகிறது உன்னத வாழ்வு. வறுமையும், பட்டினியும், பிணியும் ஓடி ஒழியப் போகின்றன. மனிதன் மரணத்தையே வென்று விடப் போகிறான் என்ற எண்ணம் தோன்றுகிறது. வாழ்வை அனுபவிக்கப் போகிறேன் என்று எண்ணி, நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் போது சேர்த்ததெல்லாம் கானல் நீராக தோன்றத் துவங்குகிறது. வாழ்க்கைத் தாகத்தைத் தீர்க்க இவைகளால் முடியாது. இவை வாழ்க்கையின் புறத்தேவைகளை மட்டுமே தீர்க்க முடியும். அக வாழ்வு சீரழிந்ததால் புறவாழ்வு அர்த்தமற்றதாகி விடுகிறது. புறவாழ்வின் செல்வங்கள் அழிவுக்கும், சீர்கேட்டுக்கும் பயன்படத் துவங்குகின்றன. வாழ்க்கைகாகப் பௌதிக உலகின் முன்னேற்றங்களைத் தேடிய மனிதன் ஏமாற்றம், விரக்தி, தற்கொலை, மனநோய்கள் இவற்றால் பீடிக்கப்படுகிறான். நான் கானல் நீரை நீராக நினைத்து ஓடி வந்திருக்கிறேன் என்று அப்போது அவனுக்குப் புரிகிறது.

 

இறைநிராகரிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் எந்த ஒரு சமூக ஒழுங்கும் நிலைக்காது. அது சீர்குலையக் கூடியதே. இது குர்ஆன் கூறும் தவிர்க்க முடியாத விதி. சில வேளை உலக வாழ்விலேயே அதற்கான தண்டனையை அது பெறும். சில வேளை இவ்வுலகிலே கிடைக்காது போகலாம். இக்கருத்தின் அடிப்படையில் இந்த உதாரணம் நோக்கப்படும் போது அது கொடுக்கும் கருத்து சற்று வித்தியாசப்படுகிறது. இவ்வுலக வாழ்வுக்கு அல்லாஹ் விதித்த சட்டம் புலப்படத் துவங்குகிறது. அல்லாஹ் தன் கணக்கை மிகப் பூரணமாகவே தீர்த்து விடுகிறான். அழிவுக்கு உட்படுகிறது அந்தச் சமூக வாழ்வு. இறுதியில் கட்டியெழுப்பிய நாகரீகத்தின் வெறும் தடயங்களும் அடையாளங்களுமே எஞ்சுகின்றன.

 

Source : மின் மடல், தகவல்: அபு இப்ராகிம் 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.