புத்தாண்டின் பத்தாம் நாள் – (ஆஷுரா)

ஹிஜிரீ 1433 நலன் பெருகட்டும்
Share this:

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.

 

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், “இந்த நாள்தான் ஃபிர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்” என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்” என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாய் (ரலி) புகாரீ, முஸ்லிம்.

இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது – ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் – இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின்  ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.

“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், “விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

ஆண்டுகள் உருண்டோடின. யூதர்களைப் போன்றே பல முஸ்லிம்களும் முஹர்ரம் 10ஆம் நாளில் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்கு ஓராண்டிற்கு முன்னர்,  நபித்தோழர்களுள் சிலர் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கவனத்துக்குக் கொண்டு சென்றனர்:

“ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்” என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது.

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும் பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம் 10ம் வைக்க வேண்டும், பத்திலும் பதிவொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.

வழக்கமாக எல்லாப் பிரச்சனைகளிலும் கட்டுக்கதைகள் நுழைந்தது போலவே இந்த ஆஷுரா நாள் பற்றியும் நிறைய கட்டுக்கதைகள் உலா வருகின்றன.ஆஷுரா நாளில் ஒருவன் குளித்தால் அந்த ஆண்டு முழுவதும் நோய்வாய்ப்பட மாட்டான் என்று கூறப்படுவதும், நபிமார்கள் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் ஆஷுரா தினத்தில்தான் நடந்தன என்று கூறப்படுவதும் இட்டுக்கட்டப்பட்ட, நிராகரிக்கப்பட வேண்டிய பொய்களாகும். ஸஹீஹான ஹதீஸ்களில் இதற்கு எள்ளளவும் ஆதாரம் இல்லை. ஒரு சில குத்பா கிதாபுகளிலும், கிஸ்ஸாக்களிலும்தான் அவை காணப்படுகின்றன. ஹதீஸ்கலை வல்லுனர்கள் அவற்றை ஏற்கவில்லை.

இதே ஆஷுரா தினத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரர் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்ச்சியாகும். கல் நெஞ்சமும் கரைந்துவிடக் கூடிய அந்த நிகழ்ச்சி இந்த தினத்தில்தான் ஏற்பட்டது. இஸ்லாமியன் மட்டுமல்ல, மனிதாபிமானம் உள்ள எவரும் அந்த நிகழ்ச்சியைக் கேள்வியுறும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

‘கர்பலா’ என்ற இடத்தில் நபி(ஸல்) அவாகளின் பேரர் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஆஷுரா நாளை சோகமயமாக ஆக்கிக் கொள்ள நமக்கு அனுமதி கிடையாது. இந்த நாளில் இரண்டு போராட்டங்கள் நடந்தன. ஒன்று பிர்அவுனுக்கும், மூஸா(அலை) அவர்களுக்கும் நடந்தது. அதில் மூஸா(அலை) வென்றார்கள். அதே ஆஷுரா நாளில் நடந்த இன்னொரு போராட்டத்தில் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

ஓர் உண்மையான முஸ்லிம் அந்த நாளில் நடந்த நல்லதை நினைத்துத் தன்னைத் தேற்றிக் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி அந்த நாளில் நோன்பு நோற்க வேண்டும். கர்பலா நிகழ்ச்சிகூட ஒரு நன்மைதான் என்று கருத வேண்டும். அல்லாஹ்வுக்காகத் தன்னுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகள் என்போர் நபிமார்களுக்கு அடுத்தபடியாக உயர்ந்த பதவியை அடைவார்கள் என்பது எவரும் அறிந்த உண்மை. தனது நபியின் பேரருக்கு அந்த மகத்தான அந்தஸ்தை அல்லாஹ் வழங்க நாடி அவர்களை ஷஹீதாக்கி விட்டான். அந்த மாபெரும் அந்தஸ்தை இமாம் ஹுஸைன்(ரழி) அடைவதற்குக் கர்பலாதான் காரணமாக இருந்தது.

இந்த உலக வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்கள்தாம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அழுது புலம்புவர். மறுஉலக வாழ்க்கை உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டோர், “நாம் மறு உலக வாழ்வில் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்களை மிக உயர்ந்த அந்தஸ்துடன் சந்திக்க இருக்கிறோம்” என்று, தம்மைத் தேற்றிக் கொள்வர்.

“தங்களுக்கு ஏதேனும் முஸீபத் (சோதனை) ஏற்படும்போது நாங்களும் அல்லாஹ்வுக்கு உரியவர்களே; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம் என்று கூறி பொறுமையை மேற்கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!” (அல்குர்ஆன் 2:156) என்று அல்லாஹ் கூறியதற்கிணங்க வாழும்போதுதான் இறைவனின் திருப் பொருத்தத்துக்கு நாம் ஆளாக முடியும்.

ஒரு வரலாற்றுச் சோகத்துக்காக ஒப்பாரி வைப்பதும், மாரடித்துக் கொள்வதும், பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதும், ஊர்வலங்கள் நடத்துவதும், யஸீதையும் மற்றவர்களையும் ஏசுவதும், ஹுஸைன் மவ்லுது ஓதுவதும் நமக்குத் தேவையில்லாதவற்றைப் பேசுவதும், ஒரு முறை ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டதை வர்ணனையுடன் பல பொய்களைக் கலந்து சொல்லி ஆண்டுதோறும் அவர்களைக் கொலை செய்வதும், இஸ்லாம் காட்டிய மரபு அல்ல.

“கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.

“உள்ளத்தினாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும் நாவினாலும் சோகத்தைக் காட்டுவது ஷைத்தானின் வேலையாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: அஹ்மத்

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலான நிகழ்ச்சிகள் அறியாமைக் காலத்து நடைமுறைகள்தாம். இவற்றைச் செய்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களைச் சேராதவர்களாக நாம் ஆகிவிடாமல் நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக. தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் முஹர்ரம் மாதம் பத்து நாட்கள் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுகின்ற கொடுமையும் நடந்து வருகின்றது. “அந்தப் பத்து நாட்களில் கரு உருவானால் அந்தக் குழந்தை இரத்தக் காயம்பட்டு சாகும்” என்று அதற்கு மடத்தனமான காரணம் வேறு கூறிக் கொள்கின்றனர்.

இது அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத விஷயமாகும். மேலும் இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. அல்லாஹ் ஹலாலாக்கிய திருமண உறவைக்கூட சில நாட்கள் ஹராமாக்க எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், ஹுஸைன்(ரழி) அவர்களின் தலை, கை போன்ற வடிவங்களில் கொழுக்கட்டை அவித்து, பாத்திஹா ஓதி வருகின்றனர், அவர்கள் மீது தாங்கள் கொண்ட அன்புக்கு இது ஓர் அடையாளம் என்று தவறாக எண்ணிக் கொள்கின்றனர். இப்படி எல்லாம் செய்பவர்களைப் பற்றி “என்னைச் சேர்ந்தவரல்லர்” என்று நபி(ஸல்) அவாகள் மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸில் எச்சரிக்கை செய்துள்ளனர். இது போன்ற மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாத்தில் இது போன்ற செயல்களுக்கு அறவே இடம் இல்லை.

மூஸா நபியை அல்லாஹ் இந்த நாளில்தான் காப்பாற்றினான் என்று எண்ணிக் கொண்டு, அந்தப் பெரும் பாக்கியத்துக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்கள் காட்டிய பிரகாரம் ஒன்பது, பத்து ஆகிய இரு நாட்களும் நோன்பு வைத்து ஏனைய சடங்குகளை விட்டொழிப்போமாக!

ஆக்கம்: அபூ முஹம்மத்

நன்றி: அந்நஜாத் செப்டம்பர், 1986

மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு (முன்னுரை)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.