சான்றோர் – 2 : அமரருள் உய்க்கும்

Share this:

2. அமரருள் உய்க்கும்

“என் மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்” என்றார் அபூ மன்ஸுர் அல் கஸ்ரி (Abu Mansur al-Khazri).

“இப்பொழுது எனக்கு அதற்கான தேவையில்லையே” என்பதைப்போல் ஒரு காரணம் சொல்லி மிகவும் நாசூக்காக மறுத்தார் அவர்.

தம் மகளைத் தாமே முன்வந்து அவருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பிய அபூ மன்ஸுர் சாதாரண மனிதர் அல்லர். எகிப்தின் அமீர். ஆட்சி, அதிகாரம், வசதி, வாய்ப்பு, செல்வாக்கு என்று சகலமும் நிறைந்த உயர்குடி மனிதர். ஆனால் அவர் தம் மகளை மணம்முடித்து வைக்க விரும்பியது மார்க்க அறிஞரான இமாம் தஹாவீஹ் அவர்களுக்கு. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அப்போதைய ஆட்சியாளர் வர்க்கம், முதல் தலைமுறை நபித் தோழர்களின் தூய இஸ்லாமிய ஆட்சி மரபிலிருந்து மிகவும் விலகிக் கிடந்தது. அதை சமரசம் செய்யும் வகையில் மார்க்கத்தில் உயர்ந்தோங்கிய அறிஞர்கள், சிறந்தவர்கள் என்று தேடிப் பிடித்துத் திருமண உறவுமுறை ஏற்படுத்திக் கொண்டார்கள் அந்த ஆட்சியாளர்கள்.

இமாம் தஹாவீஹ் ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எகிப்தில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து, ஏறத்தாழ தமது 82ஆம் வயதில் மறைந்தவர். குர்ஆன், ஹதீத் ஆழப்பயின்றதால் இஸ்லாமிய மார்க்கச் சட்டத்திலும் அவருக்குச் சிறந்த நிபுணத்துவம். அவரது ஆழ் ஞானம் இஸ்லாமியக் கல்வியில் மட்டுமல்லாது மனோவியலிலும் சிறந்திருந்தது. அளவற்ற இரக்கம், பொறுமை, அடக்கம் என்று அவரது அக ஞானம் புறத்திலும் மிளிர்ந்திருந்தது.

ஒருமுறை இமாம் தஹாவீஹ், அபூ உதுமான் பின் ஹம்மாத் அல்-பக்தாதி (Abu Uthman b. Hammad al-Baghdadi) என்பவருடன் அமர்ந்திருந்தார். அபூ உதுமான், இமாம் மாலிக்கின் (ரஹ்) சட்டக் கருத்துகளில் உடன்பாடுடையவர். காழீ எனப்படும் இஸ்லாமிய நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார். அச்சமயம் அங்கு வந்த ஒருவர் இமாம் தஹாவீயிடம் சட்ட சம்பந்தமான கேள்வியொன்று கேட்டார். இமாம் தஹாவீ அதற்கான பதிலை அளித்தார். அந்த பதில் காழீ அபூ உதுமானின் கருத்தின் அடிப்படையில் அமைந்திருந்த பதில்.

அதைக் கேட்ட அந்த மனிதர் கோபத்துடன், “நான் காழீயிடம் கேள்வி கேட்க வரவில்லை. உம்மிடம் கேட்க வந்தேன்” என்றார்.

இமாம் தஹாவீஹ் ஆச்சரியத்துடன், “நான்தான் உமது கேள்விக்குக் காழீயின் கருத்தைப் பதிலாகச் சொல்லிவிட்டேனே.”

காழீ அபூ உதுமான் குறுக்கிட்டார். “நீர் உமது கருத்தை அவருக்குத் தெரிவிக்கவும். அல்லாஹ் உமக்கு வெற்றி அளித்தருள்வானாக”

“காழீ எனக்கு அனுமதி அளிக்கிறாரா? அப்படியானால் மட்டுமே நான் என் கருத்தைத் தெரிவிப்பேன்.”

“நிச்சயமாக உமக்கு அனுமதி அளித்தேன்.”

அதன் பிறகே கேள்வி கேட்டவருக்குத் தமது கருத்தைத் தெரிவித்தார் இமாம் தஹாவீஹ். என்ன கேள்வி, என்ன பதில், என்ன கருத்து மாறுபாடு என்பது இங்கு முக்கியமே இல்லை. நீதிபதியாக இருந்தவருக்கு, மாற்றுக் கருத்து கொண்டிருந்தவர்மேல் எந்தச் சங்கடமும் இல்லை; மாற்றுக் கருத்து கொண்டிருந்தவருக்கும் தேடி வந்தவரிடமேகூட ‘ஹஹ். அதெல்லாம் தப்பு’ என்று தம் கருத்தை வலியுறுத்தும் எண்ணம் இல்லை.

அத்தகு இமாம் தஹாவீஹ் அமீரின் மகளை மறுத்தார். “என் மகள் வேண்டாமென்றால் போகட்டும். வேறு உங்களுக்கு என்ன தேவையோ, விருப்பமோ தெரிவியுங்கள். நிறைவேற்றுகிறேன்“ என்றார் அமீர் அபூ மன்ஸுர்.

“தாங்கள் உண்மையாகவே நான் சொல்வதைக் கேட்டு எனது கோரிக்கையை நிறைவேற்றுவீர்களா?”

“நிச்சயமாக!”

“உங்களிடமிருந்து உங்கள் மார்க்கம் தொலைந்து போகாமல் காப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். மரணத்தின் இருள் உங்கள்மேல் படர்வதற்குமுன் உங்களுடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்; ஏனெனில் பிறகு அதற்கு வாய்ப்பு இருக்காது. இறுதியாக, அல்லாஹ்வின் அடிமைகளை அடக்கி ஆண்டு துன்புறுத்தித் தொல்லைப்படுத்தாமல் உங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.”

இமாம் தஹாவீயின் இந்த அறிவுரைகளைக் கேட்டு, அமைதியாக அங்கிருந்து வெளியேறினார் அமீர் அபூ மன்ஸுர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, அவரது அடக்குமுறைச் செயல்களெல்லாம் நின்றே போயின.

-நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.