இறைவனுக்கு விருப்பமான செயல்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள்; நிதானமாக செயல்படுங்கள்(வரம்பு மீறிவிடாதீர்கள்); அறிந்து கொள்ளுங்கள், உங்களில் யாரையும் அவரது  நற்செயல் சொர்க்கத்தில் ஒரு போதும் நுழைவிக்காது. (மாறாக   அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்)  நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக  இருந்தாலும், (தொடர்ந்து) செய்யப்படும்  நிலையான நற்செயலே ஆகும்.

அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(6464).

விளக்கம்:

இறை நம்பிக்கையும், நற்செயல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவைகளாகும்.

இறைவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டு செயல்படும் விதங்களில் நற்பண்புகள் வெளிப்படவில்லை எனில் இறைவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் எவ்வித அர்த்தமும் இல்லை. இதற்கு காரணம் இறைவனை நம்புகிறேன் என்று கூறுபவர்கள் அவன் ஏவிய கடமைகளையும், நல்ல காரியங்களையும் செய்யாமல் அலட்சியமாக இருப்பது, இறைவனை  உண்மையில் நம்பியதாக ஆகாது என்பதாலேயாகும். ஒருவர் இறைவன் மீது நம்பிக்கை வைப்பதுடன் தனது செயல்பாடுகளிலும், சிறந்த நற்செயல்களின் மூலமாக அதனை வெளிப்படுத்த வேண்டும். நற்செயல்கள் என்பது நேர்மை மற்றும் நிதானமான செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுபவைகளாக இருக்க வேண்டும்.

அது போன்றே நற்செயல்கள் செய்து விட்டு இறைவன் மீது நம்பிக்கை கொள்ளவில்லையெனில் செய்யப்படும் நற்செயல்களுக்கு எவ்வித பலனும் இல்லை. ஒருவர் தான் செய்யும் நற்செயல்களின் அடிப்படை இறை நம்பிக்கையாக இருக்க வேண்டும். இறை நம்பிக்கையின்றி செய்யப்படும் எந்த செயலும் நிராகரிக்கப்படும். இறைவனை முறையாக நம்பிக்கை கொள்ளாமல் செய்யப்படும் நற்செயல்களோ, இறைவனின் பண்புகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் செய்யப்படும் அமல்களோ இறைவனின் கருணையைப் பெற்றுத் தர மாட்டா.

ஒருவர் நேர்மை மற்றும் நிதானத்துடன் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு, சுவர்க்கத்திற்காக இறைவனின் கருணை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவே சுவர்க்கம் அடைவதற்குரிய வழியாகும். செய்யப்படும் நற்செயல்களில் இறைவனின் விருப்பத்திற்குரியதாவது, இடைவிடாது தொய்வின்றி தொடர்ந்து செய்யப்படும் நற்செயலாகும். எந்த ஒரு நற்செயலும் அது எவ்வளவு சிறிதாயினும் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக இடையில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்யப்படுவதே இறைவனிடம் மிகவும் விருப்பத்திற்குரியதாகும். அவ்வாறு இறைவன் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து நற்செயல்கள் புரிபவர்களுக்கே மறுமையில் இறைவனிடமிருந்து சுவர்க்கம் பரிசாகக் கிடைக்கிறது.

ஆக்கம்: அப்துல்லாஹ் M.H.

இதை வாசித்தீர்களா? :   கல்வியும் ஒழுக்கமும் சிறந்த அன்பளிப்பாகும்