ரமளான் மாதத்தின் சிறப்பு (பிறை-4)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 4

ருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது நம் வாழ்வில் இனித் திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதைக் குறித்த எவ்விதச் சிந்தனையும் இல்லாமல் இருப்பவர்கள் உண்மையில் மிகப்பெரிய நஷ்டவாளிகளே.

இம்மாதத்தின் சிறப்பு என்னவென்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தால் ரமளான் கடந்து செல்லும் பொழுதும் அடுத்த ரமளான் வரும் பொழுதும் எவரும் தம் வாழ்வில் பெற வேண்டிய நல்ல மாற்றங்களைக் குறித்துச் சிந்திக்காமல் எவ்வித உணர்ச்சியுமற்று இருக்க மாட்டார்கள்.

ரமளான் மாதத்தின் சிறப்பு:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். ( அல்குர்ஆன் 2: 185) .

வஹீ எனும் இறைவனின் வார்த்தைகள் இவ்வுலக மக்களுக்கு இறங்கிய மகத்தான மாதம்தான் ரமளான் மாதம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழியாக விண்ணுலகிலிருந்து மண்ணுலக மாந்தர்க்கு இறுதிநாள் வரைக்கும் வழிகாட்டுவதற்காக ஏற்பட்ட முதல் தொடர்பு, இம்மாதத்தில்தான் ஏற்பட்டது. அப்படிப்பட்ட முக்கியமான இம்மாதத்தின் ஆரம்பத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதாகவும் சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படுவதாகவும் மலக்குகள் இறங்கி வந்து பாவம் செய்பவரைப் பாவங்களை விட்டு விலகிக் கொள்ளவும் இறைவனிடம் பாவ மன்னிப்பிற்கு இறைஞ்சவும் அழைப்பு விடுவதாகவும் இம்மாதத்தில் எவர் ஈமானுடன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு நோற்கவும் இரவுத் தொழுகையைத் தொழவும் மகத்தான லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்கவும் செய்கின்றனரோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதுமான மாதம்.

பன்னிரண்டு மாதங்களில், பாவங்கள் மன்னிக்கப்படும் மாதமாகவும் கேட்பவை அனைத்தும் கிடைக்கப்பெறும் மாதமாகவும் அருட்கொடைகள் நிறைந்த மாதமாகவும் இந்த ஒரு புனித மாதம் திகழ்கிறது.

மேலும் ஆயிரம் மாதங்களைவிட மேலானதான மகத்தான ஓர் இரவும் இம்மாதத்தில்தான் இருக்கிறது. திருக்குர்ஆன் இவ்வுலகிற்கு இறக்கப்பட்ட அவ்விரவைப் பற்றி,

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ரு) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவின் சிறப்பு என்னவென்று உமக்குத் தெரியுமா? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும் தூய(ஆன்மா ஜிப்ரயீல் என்ப)வரும் தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல செயல்(திட்டங்)களையும் தாங்கியவர்களாக (விண்ணுலகிலிருந்து) இறங்குகின்றனர். சாந்தி (நிலவும்) – விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97: 1-5).

என்று அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.

இதை வாசித்தீர்களா? :   நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)

ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களுக்குச் சமம். ஒருவர் இவ்விரவு முழுவதும் இறை வணக்கத்தில் கழித்தால் அவர் சுமார் 83 வருடங்கள் இடைவிடாது இறைவணக்கத்தில் கழித்த கூலியை அடைந்து கொள்கின்றார். ஒருவர் இவ்விரவில் ஒரு ரக்அத் தொழுதால் அவர் சுமார் 83 வருடங்கள் ஒரு ரக்அத் தொழுததற்குரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்.

ஒருவரின் ஆயுள்காலம் சராசரியாக 70 வருடம் என வைத்துக் கொண்டு அவர் செய்யும் நல்லறங்களைக் கணக்கிட்டாலும்கூட இந்த ஓர் இரவில் ஒரு ரக்அத் தொழுவதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளுக்கு அது ஈடாகாது.

ஒருவருக்கு இவ்விரவு கிடைக்கப்பெறுவதைவிட மேலான மற்றொரு பாக்கியம் இவ்வுலகில் கிடைக்குமா? அத்துணை மகத்தான இரவைக் கொண்ட இப்புண்ணிய மாதம் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்றும் அவர் செய்த பாவங்களுக்குப் பரிகாரத்தையும் கூடுதலாக சுவர்க்கத்தில் நுழைவதற்குரிய தகுதியையும் அடைந்து கொள்வதற்கு முயலவில்லை எனில் அவரைவிட துர்பாக்கியசாலி இவ்வுலகில் வேறு ஒருவர் இருக்க முடியாது.

– தொடரும் இன்ஷா அல்லாஹ்.