இரவுத் தொழுகையின் நேரம் (பிறை-22)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 22

தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் இஷா முதல் ஃபஜ்ரு வரையிலும் ஆகும். இரவின் கடைசி நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. எனினும் இரவுத் தொழுகையைப் பொருத்தவரை, தூங்கி எழுந்து தொழுவதே சிறப்பானதாகும். இரவில் தூங்கி, தொழுகைக்கு எழுவதில் பல சிறப்புக்களும் பயன்களும் உள்ளன. திருக்குர்ஆனில் இறைவன்,

நிச்சயமாக இரவில் (தொழுகைக்காக) எழுவது மனமும், நாவும் இணைந்திருக்க மிக்க ஏற்றதும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும். (அல் குர்ஆ ன் 73:6) என்று கூறுகிறான். ஏற்றுக் கொள்ளப்படும் தொழுகைக்கு மனம் ஒருநிலையில் இறைவனை நினைத்திருப்பது அவசியமானதாகும். இரவில் தூங்கி எழுந்து தொழுபவருக்கு இது சாத்தியமாகின்றது.

 மேலும்,

இரவின் மூன்றாம் பகுதியில் ஏழாம் வானத்திலிருந்து பூமியின் (முதல்) வானத்திற்கு இறங்கி வந்து, “என்னிடம் கேட்பவர் யார்? கேட்பவருக்கு கொடுக்க நான் காத்திருக்கிறேன்” என இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கின்றார்கள்.

இதிலிருந்து தூங்கி எழுந்து இரவின் பிற்பகுதியில் தொழுவதின் சிறப்பை மேற்கண்ட குர்ஆன்-ஹதீஸ் சான்றுகளில் இருந்தே இதனை நாம் அறிந்து கொள்ள இயலும்.

தனியாகவும் தொழலாம், ஜமாஅத் ஆகவும் தொழலாம்:
நபி (ஸல்) மூன்று நாள்கள் இந்தத் தஹஜ்ஜுத் தொழுகையை ஒரு ரமளானில் ஜமாஅத்துடன் தொழுதுள்ளனர். இதனால் மூன்று நாள்கள் மட்டுமே ஜமாஅத்தாக தொழ வேண்டும் என்று கருதிவிட முடியாது. ஏனெனில், மூன்று நாட்களுக்குப் பின் ஜமாஅத்தை அவர்கள் விட்டு விட்டதன் காரணத்தை அவர்களே தெளிவாக்கியுள்ளார்கள்.

மூன்று நாள் ஜமாஅத்தாக நபிகள் நாயகம் (ஸல்) இத்தொழுகையை தொழ வைத்ததைக் கேள்விப்பட்ட மதீனாவில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் நான்காம் நாள் மஸ்ஜிதுந்நபவியில் பெருமளவில் கூடிவிட்டனர். ஆனால் ஃபஜ்ருத் தொழுகை நேரம்வரை நபி (ஸல்) தொழ வைக்க வரவில்லை. பின்னர் ஃபஜ்ருத் தொழுகை முடிந்தபின் நபிகள் நாயகம் (ஸல்) கூடியிருந்தவர்களை நோக்கி, “இத்தொழுகை கடமையாகக் கருதப்பட்டுவிடுமோ என்று அஞ்சியே நான்காம் நாள் நான் வரவில்லை” என்று கூறினார்கள். எனினும் இத்தொழுகையை ஜமாஅத்துடன் தொழ வைக்கக் கூடாது என்று தடை செய்ய முடியாது.

நபி (ஸல்) அவர்களது காலத்திற்குப் பின் மார்க்கத்தில் எதுவுமே கடமையாக முடியாது என்பதால் எல்லா நாட்களும் ஜமாஅத்தாக தொழலாம். எனவே தஹஜ்ஜுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது நபி வழிக்கு மாற்றமானதன்று. ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்காலத்தில் மக்கள் கடமையான தொழுகைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட அதிக முக்கியத்துவத்தை ரமளான் இரவு நேரத்தில் பள்ளியில் நடைபெறும் ஜமாஅத் இரவுத் தொழுகைக்குக் கொடுக்கின்றனர். கடமையான தொழுகைக்குப் பள்ளிக்கு வருவதில் அசட்டையாக இருந்தாலும் இத்தொழுகைகளைத் தவறவிடாமல் மிக்க சிரத்தையுடன் தொழுவதற்குப் பள்ளிக்கு விரைகின்றனர்.

இத்தகைய மனோபாவம் மாற்றப்பட வேண்டியதாகும். கடமையான தொழுகையில் அசட்டையாக இருந்து கொண்டு மற்ற எந்த அமல்கள் செய்தாலும் அவை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை.

பல நபி மொழிகள் மற்றும் செய்திகளிலிருந்து நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இதனைத் தனியாகவும், ஜமாஅத்தாகவும் தொழுதுள்ளனர். ஜமாஅத்தை இதற்கு வலியுறுத்தவில்லை என்பதால் ஜமாஅத்தாக தொழக்கூடாது என்று பொருள் கொள்ளாமல், ஜமாஅத்தாகவும் தொழலாம், தனியாகவும் தொழலாம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

oOo

(மீள் பதிவு)
-தொடரும், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.