கொஞ்சம் சிந்திப்போமா?

Share this:

இந்தியாவின் சுதந்திரத்தில் அதீத வேட்கை கொண்டதின் காரணமாக ஆங்கில மொழி "ஹராம்" என்ற பத்வாக்களினூடே வளர்ந்த இஸ்லாமிய சமுதாயம், சுதந்திரமடைந்து ஏறத்தாழ ஒரு தலைமுறையினருக்கும் மேலாக ஆங்கிலக் கல்வி மட்டுமல்லாது, ஒட்டு மொத்தக் கல்வியறிவிலும் பின் தங்கியது.

ஆனாலும் கடந்த இருபது வருடங்களில் சமுதாயம் கல்வியில் கண்டு வரும் மாற்றங்கள் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! அதே வேளையில் இந்த மாற்றங்களினூடே சமுதாயம் பெறும் கல்வியானது மார்க்க கல்வி, உலகக் கல்வி என்று பிரிக்கப்பட்டே பெறப்படுகிறது என்பதையும் இங்கே மறந்து விடக்கூடாது.

இப்படிப் பிரிக்கப்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நம் கண் முன்னே கண்டு வருகிறோம். குர்-ஆனைக் கற்று தேர்வதற்காக இஸ்லாமிய கல்வி கூடங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகளில் பெரும்பாலனாவர்கள் நடைமுறைக் கல்வியை பெறுவதில்லை. இதே போல் நடைமுறைக்கல்வியை பயிலும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் இஸ்லாமிய அடிப்படை விஷயங்களைக்கூட பெறுவதில்லை. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில், உள்ளூர் முஸ்லிம்களாலேயே நடைமுறைக் கல்விக்கான கல்விக்கூடங்கள் நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகளில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் சேர்த்துக் கற்றுத்தரும் பள்ளிகளை மிகச்சரியாக விரல் விட்டு எண்ணி விடலாம். சற்று யோசித்து பாருங்கள் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் சொல்லும் எத்தனை பிள்ளைகளுக்கு நபிவழி வந்த கலீபாக்களின் பெயர்கள் தெரியும்? குறைந்தபட்சம் அவர்கள் நால்வர் என்பதாவது தெரியும்?

அன்று அர்த்தம் தெரியாமல் "டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்" மனப்பாடம் செய்த நாம் இன்று அர்த்தம் தெரிந்து அசை போட்டு பார்க்கிறோம். இப்படி நினைத்துப் பார்த்து மகிழ்வதற்காகவாவது அந்தப்பிஞ்சு வயதில் இஸ்லாமிய அடிப்படையில் எதை கற்றோம்?  இப்போதும் கூட என்ன கற்று கொடுக்கப்படுகிறது?

முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்''. அவை:

நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)

பயனளிக்கக் கூடிய (கல்வி)அறிவு

தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை                                                                                               அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், நஸாயீ மற்றும் திர்மிதி

நபிகளாரின் கூற்றுப்படி மரணித்தப் பின்னரும் நமக்கு நன்மையை அள்ளித்தரும் கல்வியறிவை நமது பிள்ளைகளுக்கு தருகிறோமா? இன்னுமொரு முறை யோசித்து பாருங்கள். உலகளாவிய அளவில் மூளைச்சலவை செய்யப்படாமலேயே பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக  குர்-ஆனிய கல்வியை கற்றுத் தரும் இஸ்லாமிய கல்விக்கூடங்கள், தீவிரவாதத்தின் பயிற்சிக்கூடங்களாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டு விட்டனது. கடந்த காலங்களில் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது, "மதரஸாக்களில்" நடந்த சோதனைகளின் வேதனைகள் இன்னும் நம் கண் முன்னே நிழலாடி கொண்டிருக்கின்றன. அவர்கள் செய்த வரலாற்றுத் திரிபுகளும் கல்வியாளர்களால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன.  கூட்டணி ஜால்ராக்களோடு ஆட்சியில் இருந்த குறுகிய காலத்தில், அவர்களால் தயாரித்து வைக்கப்பட்ட நீண்ட காலத்திட்டத்தை செயல்படுத்த முனைந்ததையும் பார்த்தோம்.

இவற்றையெல்லாம் எதிர்க்கொள்ள இன்ஷா அல்லாஹ் முயற்சித்தோமானால் நம்மாலும் முடியும். இவற்றிற்காகப் புதிய கல்விக் கூடங்கள் நிறுவப்பட வேண்டியதில்லை. ஏனெனில் முஸ்லிம்களின் நிர்வகிப்பில், நூற்றாண்டு கண்ட கல்விச் சாலைகள் கூட நம்மிடையே இருக்கின்றன. ஆனால் அவை இஸ்லாமிய ரீதியாகப் புனரமைக்கப்பட வேண்டும். முதல் படியாக முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஐந்தாவது வரை இஸ்லாமிய அடிப்படையைக் கற்பிக்கும் ஒரு பாடம் கட்டாயம் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினருக்கு நெருக்கடி (கோரிக்கை மனுக்கள் குப்பைதொட்டிக்கு போய்க் கொண்டிருப்பதால், நெருக்கடி கொடுப்பதன் மூலமே முயற்சிகள் பயன் அளிக்கும்) கொடுக்கப்பட வேண்டும். கவனிக்க வேண்டும் அரபியை அல்ல இஸ்லாமிய அடிப்படையை. ஏனெனில் பெரும்பாலான பள்ளிகளில் அரபியைப் பாடத்திட்டமாக வைத்திருக்கிறார்கள்.

இதே போல் குர்-ஆனியக் கல்வியைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடங்களில் நடைமுறை கல்விகளில் ஒரு சிலவற்றை குறிப்பாக ஆங்கிலத்தையும், கணிணியையும் பாடத்திட்டத்தில் சேர்க்க நெருக்கடி கொடுக்கப்பட வேண்டும்.  இவை அடிப்படைக்கான முயற்சிகள். இவற்றை அல்லாஹ் நாடினால் நம்மால் செய்ய முடியும்.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது பகுதிகளில் உள்ள இஸ்லாமிய ஆர்வலர்களோடு கூட்டாக முயற்சிப்போமானால் இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.     

இறுதியாக இட ஒதுக்கீட்டுக்குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அரசு பணிகளின் அனைத்து நிலைகளுக்கும்(IAS முதல் காவலர்வரை) நாம் தயாராகி விட்டோமா என்பதையும் சிந்திக்க வேண்டும். அப்படித் தயாராக இருப்பவர்களில் எத்தனை பேர் சமுதாய சிந்தனையுடன் இருக்கிறார்கள்? ஏனெனில் சமுதாய சிந்தனை இல்லாமல் பதவியில் அமர்பவர்களால் பதவியை அலங்கரிக்க முடியுமே தவிர இட ஒதுக்கீட்டின் நோக்கமான சமுதாய நலனிற்கு உதவிட முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக, கல்விக்காகக் கணக்கு பார்க்காமல் செலவழிக்கும் சமுதாயத்தவர்களே, அக்கல்வியைப் பயனளிக்கும் கல்வியாக நம் பிள்ளைகளுக்கு கொடுப்போமேயானால், சிறந்த பிள்ளைகளை வளர்த்ததற்கான இறை நற்கூலி கிடைப்பதுடன், நாம் மரணித்த பின்பும் நமக்காக பிரார்த்திக்கும் பிள்ளைகளாக இன்ஷா அல்லாஹ் அவர்கள் இருப்பார்கள்.

சிந்தனை: இப்னுஇலியாஸ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.